ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

GST கொண்டாட்டத்திற்கு பிறகு சந்தையில் என்ன செய்வது?

ஒரு வழியாக இந்தியா முழுமையும் ஒரே சந்தையாக கொண்டு வரும் GST வரிக்கு ராஜ்யசபாவில் வெற்றி கிட்டி விட்டது.


அடுத்து, லோக்சபாவில் நாளை விவாதத்திற்கு வருகிறது. அங்கு பிஜேபிக்கு மெஜாரிட்டி இருப்பதால் எந்த வித பிரச்சினையும் இல்லை.அதனால் GST வரி வருவது உறுதி செய்யப்பட்டது என்றே சொல்லலாம்.

சில நண்பர்கள், GST வந்து விட்டது. ஆனால் சந்தை ஏன் இந்த வாரம் கீழ் நிலையிலே உள்ளது என்று கேட்டு இருந்தார்கள்.

ஆனால் கழிந்த வாரம் பார்த்தால் GSTயை எதிர்பார்த்து ஏற்கனவே உயர்ந்து விட்டது என்பதைத் தான் இதற்கு காரணமாக சொல்ல முடியும்.

GST வரியை பொறுத்த வரை ஒரே நாளில், ஒரே மாதத்தில் பெரிய அளவு பலனை கொடுத்து விடப் போவதில்லை. இது ஒரு நீண்ட கால நோக்கில் பலனளிக்கும் விடயம்.

அதனால் நாமும் பங்குகளை அத்தகைய காலத்திற்கு வைத்து இருந்தால் தான் மேலுள்ள பலனையும் பெற முடியும்.

இனி பாதிக்கும் மேற்பட்ட மாநில சட்டசபைகளில் ஒப்புதல் பெற வேண்டும். அதற்கு பிரச்சினை இருக்காது என்றே கருதப்படுகிறது.

அடுத்து மத்திய நிதி அமைச்சருடன் மாநில நிதி அமைச்சர்களை சேர்த்து வைத்து GST கவுன்சில் என்ற ஒன்றை உருவாக்குவார்கள்.

அவர்கள் இன்னும் எவ்வளவு வரி விதிக்கப்பட வேண்டும் என்று தீர்மானிப்பார்கள்.

பொதுவாக GST வரியானது 18% அளவிற்கு வர வேண்டும் என்பது தொழில் துறையினரது எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் 20 சதவீதத்திற்கு அருகில் வரும் என்பது ஒரு கணிப்பாக உள்ளது.

அவ்வாறான சூழ்நிலையில் 25% அளவு வரி கட்டும் நுகர்வோர், எலெக்ட்ரானிக்ஸ், கார், உற்பத்தி நிறுவனங்கள் அதிக அளவு பலன் பெறுவார்கள்.

ஆனால் 15 சதவீத அளவு சேவை வரி கட்டும் ஹோட்டல்கள், மொபைல் நிறுவனங்கள் அதிக அளவு வரி கட்ட வேண்டி வரும்.

இது ஒரு குறுகிய காலத்திற்கு பண வீக்கத்தை கூட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது. அந்த சூழ்நிலையில் சில நேரம் எதிர்மறை விளைவை காட்டலாம்.

ஆனால் தற்காலிகமான இந்த நிகழ்வு முடியும் சமயத்தில் GDP வளர்ச்சி அதிகமாக இருக்கும். அப்பொழுது நேர்மறையில் வினையை சந்தை காட்டத் தொடங்கும்.

மொத்தத்தில் GST வரியின் பலன் முழுமையாக பெற வேண்டும் என்றால் நீண்ட கால நோக்கில் நுகர்வோர், உற்பத்தி, லாஜிஸ்டிக்ஸ் பங்குகளில் முதலீடு செய்வதன் மூலம் பெறலாம்.

பொத்தாம் பொதுவாக எல்லா பங்குகளிலும் பெறலாம் என்பது நிதர்சனமான நம்பிக்கை அல்ல...


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

1 கருத்து: