புதன், 22 ஜூலை, 2020

தோசை பொருளாதாரத்தில் குறையும் தோசைகள்

எப்பொழுதுமே ரிசர்வ் வங்கியில் கவர்னர்களாக இருப்பவர்களுக்கும், மத்திய அரசுக்கும் ஏழாம் பொருத்தம் தான்.

சுப்பா ராவ்,  ரகுராம் ராஜன், படேல் என்று தொடர்ந்து பல கவர்னர்களுக்கும் மத்திய அரசுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தது.

இதில் மத்திய அரசு என்பது பிஜேபி, காங்கிரஸ் என்று இரண்டு அரசுகளையுமே குறிக்கும். சிதம்பரம் சுபபா ராவுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். தற்போதைய அரசு அடுத்த இருவர்களிடமும் மோதியது.



கருத்து வேறுபாடுகள் எங்கு வருகிறது என்றால் வட்டி குறைப்பில் தான் அதிகம் வரும். இது போக, பிஜேபி காலத்தில் ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் கையிருப்பு தொகையிலும் இருந்து வந்தது. 

இதற்காக தான் சக்தி காந்த் தாசையும் கொண்டு வந்தார்கள். ரிசர்வ் வங்கியின் அவசர காலத்திற்கு வைத்து இருந்த கையிருப்பு தொகையை வாங்கி செலவு செய்தார்கள். தற்போது அவசர காலத்தில் பெரிதளவு பணம் நம்மிடம் இல்லை என்பதையும் கவனிக்க.

இது போக, சக்தி காந்த் தாஸ் செய்தது என்னவென்றால் வங்கிகளின் Repo Rate என்பதை குறைத்து கொண்டே வந்தது தான். அதாவது ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒரு கால் சதவீதமாவது குறைத்து விடுவார். தற்போது ரெபோ விகிதம் என்பது கடந்த 12 வருடங்களில் இல்லாத அளவு 4% குறைந்துள்ளது. 


பொருளாதாரத்தில் அதிக அளவு பணத்தை விடுவிப்பதற்காக செய்யப்படும் நடவடிக்கை இது. இதனால் வியாபாரம் செய்யும் நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்குக்கும். அதனால் GDP வளர்ச்சி என்பது அதிகமாகும். அதே நேரத்தில் நமக்கு Fixed Deposit முதலீட்டில் இருக்கும் பணத்திற்கு குறைந்த வட்டி தான் கிடைக்கும்.


பொதுவாக பிக்சட் டெபாசிட் வட்டியை நம்பியிருக்கும் மூத்த குடிமகன்களுக்கு தான் இதில் சிக்கல். ஐந்து வருடங்களுக்கு முன்னர் 10 லட்ச ரூபாய்க்கு 7500 ரூபாய் ரூபாய் மாத வட்டி கிடைத்து வந்தது என்றால் அது தற்போது 4500 ரூபாய் தான் கிடைக்குமளவு சென்றுள்ளது. சில அடிப்படை செலவுகளை மட்டுமே கொண்டிருக்கும் அவர்களுக்கு இது ஒரு கடினமான சூழ்நிலை தான்.

அண்மையில் பணவீக்கம் என்பது 6.1% அளவு கூடி விட்டதாக தரவுகள் வந்துள்ளன. அந்த சூழ்நிலையில் தற்போது இருக்கும் 5~5.5% என்ற வட்டி விகிதங்களில் பார்த்தால் நமக்கு கிடைப்பது என்பது ஒன்றுமில்லை.

பொதுவாக பொருளாதாரத்தில் Nominal Interest Rate, Real Interest Rate என்ற இரண்டு  சொற்கள் உண்டு. 

Nominal Interest Rate என்பது வங்கிகள் நமக்கு கொடுக்கும் வட்டி விகிதம். Real Interest Rate என்பது அவ்வாறு கிடைக்கும் வட்டியில் உண்மையான பலன் நமக்கு எவ்வளவு கிடைக்கிறது என்பது. அதாவது பணவீக்கத்தை கழித்து எவ்வளவு பலன் பெறுகிறோம் என்பதாகும்.

இதனை ரகுராம் ராஜன் அவர்கள் எழுதிய Dosa Economics என்ற தலைப்பு வழியாக அறிவது எளிதாக இருக்கும்.

கீழே கடந்த பத்து வருடங்களில் பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்கள் எவ்வாறு இருந்திருக்கிறது என்ற தகவல்களை சேகரித்து தந்துள்ளோம்.




இதில் GDP போன்ற தரவுகளையும் தந்துள்ளோம். உதாரணத்திற்கு GDP வளர்ச்சி அதிகம் இருப்பின் அது தமது வருமானத்தில் எதிரொலிக்கும். அதாவது 5% வளர்ச்சி இருப்பின் குறைந்த பட்சம் இந்த அளவாவது நமது சம்பளத்தையும் நிறுவனங்கள் கூட்டி இருக்கும். 

ஆனால் தற்போது கொரோனாவின் காரணமாக GDP எதிர்மறை வளர்ச்சியில் உள்ளது. அதனால் சம்பள உயர்வு என்பது எதிர்பார்க்க முடியாத ஒன்று. 

அதே நேரத்தில் விலைவாசி கூடியுள்ளது என்பதை 6.09% பணவீக்க உயர்வு காட்டுகிறது. அதே சம்பளம் கிடைத்தாலும் முன்பை விட குறைவான மளிகை சாமான்கள் அல்லது காய்கறிகள் தான் தற்போது வாங்க முடியும். 

இனி இன்னொரு பிரிவினரை பார்ப்போம். இவர்கள் ரகுராம் ராஜன் சொல்லிய தோசை பொருளாதாரத்தில் வருபவர்கள். அதாவது வங்கியில் கிடைக்கும் மாத வட்டியை நம்பியிருக்கும் மூத்த குடிமக்கள். மாத சம்பளம் என்ற ஒன்று கிடையாததால் GDP என்பதை பற்றி பெரிதும் கவலை பட தேவையில்லை.

கீழே ஒரு செய்முறை விளக்கம் கொடுத்துள்ளோம்.

ஒரு மூத்த பெரியவர் வங்கியில் 1 லட்ச ரூபாய் பணத்தை Fixed Deposit முறையில் முதலீடு செய்துள்ளார். அதில் கிடைக்கும் மாத வருமானத்தை வைத்து செலவு செய்கிறார். அவருக்கு சூழ்நிலையின் பலன் எப்படி கிடைக்கிறது என்பதையும் பார்ப்போம்.





2019ல் பணவீக்கம் 4.54% என்ற அளவும், FD வட்டி 6.25% என்றும் இருந்தது. அந்த சூழ்நிலையில் ஒரு தோசை விலை 50 ரூபாய் என்று எடுத்துக் கொள்வோம். ஒரு வருடத்திற்கு பிறகு அவருக்கு 6250 ரூபாய் வட்டியாக வங்கியில் கிடைத்து இருக்கும். அந்த சூழ்நிலையில் 4.54% என்ற பணவீக்கத்தில் தோசை விலை 52 ரூபாயாக கூடி இருக்கும். இப்பொழுது 6250 ரூபாயில் அவர் 120 தோசைகள் வாங்கியிருக்க முடியும்.

அதே நேரத்தில் தற்போதைய 2020 நிலைக்கு வருவோம். தற்போது பணவீக்கம் 6.1% என்ற அளவும், FD வட்டி 5.8% என்றும் இருக்கிறது. தற்போதும் ஒரு தோசை விலை 50 ரூபாய் என்று எடுத்துக் கொள்வோம். ஒரு வருடத்திற்கு பிறகு அவருக்கு 5800 ரூபாய் வட்டியாக கிடைக்கும். அந்த சூழ்நிலையில் 6.1% என்ற பணவீக்கத்தில் தோசை விலை 53 ரூபாயாக கூடி இருக்கும்.அடுத்த ஒரு வருடத்தில் 5800 ரூபாயில் அவர் 110 தோசைகள் தான் வாங்க முடியும்.

இந்த சூழ்நிலையில் அந்த பெரியவருக்கு வங்கியில் கிடைக்கும் வட்டியில் பத்து தோசைகள் குறைவாக தான் வாங்க முடிகிறது. இதை தான் Real Interest Rate என்று குறிப்பிடுகிறோம். அந்த வகையில் தற்போது நமக்கு கிடைக்கும் பிக்ஸ்ட்  டெபாசிட் வட்டி என்பது எதிர்மறை வருமானம் தான். 

இப்படிப்பட்ட  ஒரு திரிசங்கு சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி புதிதாக வட்டி குறைப்புகளை அறிவிக்க முயலாது. அது கடன் வாங்கும் வியாபார நிறுவனங்களுக்கும் ஒரு எதிர்மறை செய்தி தான்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்: