செவ்வாய், 30 ஜூன், 2020

ஐந்து நிமிடங்களில் 18 லட்சம் இழந்த கதை

பங்குச்சந்தை என்பது மிக அதிக அளவில் லாபம் தரும் ஒரு முதலீடு தான். சரியான கணிப்பு இருந்தால் மற்ற எல்லா முதலீடுகளையும் விட அதிகம் லாபம் தருமிடம்.

2013ல் ஒரு கட்டுரையில் விப்ரோவில் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து இருந்தால் இப்ப 43 கோடி என்ற தலைப்பில் எழுதி இருந்தோம்.

இந்த கட்டுரையானது நண்பர்களுக்கு மிக அதிக அளவில் பங்குச்சந்தையில் உற்சாகத்தை கொடுத்து இருந்ததை கருத்துக்கள் வாயிலாக அறிந்தோம்.பங்குசந்தையில் நேர்மறையான லாபங்களை வெளியிடும் போது மற்றோரு பக்கமான நஷ்ட உதாரணங்களையும் பகிர்வது அவசியமாகிறது.

அந்த வகையில் இந்த கட்டுரையில் நண்பர் ஒருவர் ட்ரேடிங் முறையில் ஐந்தே நிமிடங்களில் 18 லட்சம் இழந்ததையும் பகிர்கிறோம்.

இந்த கட்டுரையை புரிந்து கொள்வதற்கு ஓரளவு Futures & Options பற்றிய புரிதலும் அவசியம். இது வரை இந்த முதலீடு தளத்தில் ட்ரேடிங் பற்றி விவரமாக எழுதியதில்லை. இனி எழுத முயற்சிக்கிறோம்.


சுருக்கமாக சொல்வதாக இருந்தால் F&Oவில் ஒன்று , இரண்டு,  மூன்று மாதங்கள் என்ற முறையில் Contracts எடுத்துக் கொள்ள முடியும். இந்த கான்ட்ராக்ட்கள் ஒவ்வொரு மாதத்தின் கடைசி வியாழக்கிழமையில் முடிவடைந்து விடும்.

அதாவது நிப்டியில் புள்ளிகள் உயரும் என்று நீங்கள் கணித்தால் அந்த மாதத்தின் Options கான்ட்ராக்டை ஒரு சிறு ப்ரீமியம் கொடுத்து நீங்கள் வாங்கி கொள்ள முடியும். நீங்கள் கணித்தது போல் உயர்ந்து விட்டால் மேல் சென்ற எல்லா லாபமும் உங்களுக்கு தான்.

உதாரணத்திற்கு வரும் ஜூலை மாதத்தில் நிப்டி 11,000 புள்ளிகள் மேல் உயரும் என்று நீங்கள் கணித்தால், இன்றைய நிலவரத்தில் 58 ரூபாய் ப்ரீமியம் கொடுத்து 11,000 புள்ளிகளில் நீங்கள் வாங்கி கொள்ள முடியும்.

அதாவது நிப்டி ஒரு லாட் என்பது 75 பகுதிகளை கொண்டது. அதன்படி 11,000 புள்ளிகளில் 58*75 = 4350 ரூபாய் ப்ரீமியம் கொடுத்து வாங்கி கொள்ளலாம். நீங்கள் நினைத்தது போல் 100 புள்ளிகள் உயர்ந்து 11,100 புள்ளிகளில் ஜூலை மாத இறுதியில் முடிவடைந்தால் அந்த ப்ரீமியத்தின் மதிப்பு 75*100 = 7500 என்று மாறி இருக்கும். உங்களது லாபம் 3150 ரூபாய்.

சொல்வதற்கு எளிது. ஆனால் நடைமுறையில் இதனை கணிப்பது மிகவும் கடினமான காரியம் தான்.

இதனை சிராக் குப்தா என்ற மேலாண்மை படிக்கும் ஒரு இளைஞர் கணித்தார்.

2017ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி. அந்த மாதத்தின் F&O Contracts முடிவடையும் தினம். அதாவது Expiry day.

பொதுவாக மதியம் 3.30 மணிக்கு சந்தை மூடப்படும். அந்த நிலையில் 3.25 மணிக்கு நிப்டியானது 8600 புள்ளிகளுக்கும் சிறிது கீழ் வர்த்தகமாகி கொண்டிருந்தது.

சிராக் குப்தா அன்றைய தினத்தில் 8600 புள்ளிகளுக்கு மேல் முடிவடையும் என்று கணித்து 8600 புள்ளிகளுக்கான CALL ப்ரீமியத்தை வெறும் ஐந்து பைசாவிற்கு 3000 லாட்கள் வாங்கினார்.

அதாவது மொத்தம் 3000*0.05*75 = 11,250 ரூபாய் ப்ரீமியத்திற்காக செலவழித்தார்.

இறுதியில் அவர் நினைத்தவாறே நிப்டியானது 8602.75 என்ற நிலையில் முடிவடைந்தது.

இப்பொழுது அவரது ப்ரீமியத்தின் மதிப்பு. 3000*2.75*75 =  6,18,750 ரூபாய்.

அதாவது வாங்கின தொகையில் இருந்து லாபம்  6,18,750 - 11,250  = 607500 ரூபாய்.

ஐந்தே நிமிடங்களில் ஆறு லட்ச ரூபாய் லாபம்.

சரி. அந்த அந்த மகிழ்ச்சி குதூகலத்தில் இருந்து கொண்டிருக்கும் வேளையில் அவரது பங்குச்சந்தை புரோக்கர் 24 லட்ச ரூபாய் அவர் பங்குச்சந்தைக்கு கட்ட வேண்டும் என்று Contract Note அனுப்புகிறார்.

என்னடா சோதனை என்று பார்த்தால், அங்கு தான் STT முன்னுக்கு வந்து நின்றது.

STT என்றால் Security Transaction Tax.

இந்த வரியானது Options முறையில் இரண்டு வழிகளில் கணக்கிடப்படுகிறது.

ஒன்று, 
சிராக் குப்தா இந்த கான்ட்ராக்ட்டை Expiry Dayக்கு முன் Square-Off செய்து மற்றோருவருக்கு விற்று விட்டால் ப்ரீமியம் மதிப்பில் இருந்து 0.05% வரியாக கட்டினால் போதும். அதாவது 6,18,750 ரூபாய் ப்ரீமியத்தில் 309 ரூபாய் வரியாக கட்டியிருக்கலாம்.

இரண்டாவது,
ஆனால் சிராக் குப்தா அதனை Square-Off செய்யாமல் விட்டு விட்டார். அந்த சூழ்நிலையில் லாபம் கிடைத்து விடும். ஆனால் வரியானது மொத்த கான்ட்ராக்ட் மதிப்பில் 0.125% கட்ட வேண்டும், அதாவது மொத்த கான்ட்ராக்ட் மதிப்பு 193 கோடிக்கும் மேல். (3000*75*8602.75 = 1,935,618,750). அதில் 0.125% என்றால் 24 லட்சம் ரூபாய். (Rs.24,19,523)

ஒரு நிமிடத்திற்கு முன் எல்லாவற்றையும் விற்று இருந்தால் ஐந்தே நிமிடங்களில் ஆறு லட்சம் கிடைத்து இருக்கும். அப்படி விற்காமல் இருந்ததால் 18 லட்சம் ரூபாய் கையில் இருந்து கொடுக்க வேண்டியதாயிற்று.

இந்த முரண்பாட்டை அவர் செபிக்கு புகாராக கொடுத்து இருந்தார். அதே போல் அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லீக்கும் அனுப்பி இருந்தார்.

இதன் விளைவாக  நிர்மலா சீதாராமன் அவர்கள் 2019 பட்ஜெட்டிலும் மாற்றத்தை கொண்டு வந்தார்.

இந்த மாற்றத்தின் படி, இறுதி ப்ரீமியத்திற்கான தொகையில் 0.125% வரியாக காட்டினால் போதும். அதன் படி,  புது முறையில் சிராக் குப்தா 6,18,750 ரூபாய் ப்ரீமியத்தில் 793 ரூபாய் வரியாக கட்ட வேண்டும்.

இந்த முறை 2019 முதல் தான் ஆரம்பமானது. அதனால் சிராக் குப்தாவிற்கு இதன் பலன் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

முடிந்த வரை, F&Oவில் எல்லா காண்ட்ராக்ட்களையும் Expiryக்கு Square-Off செய்வது நல்லது.

ட்ரேடிங்கில் ஈடுபடும் போது எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்த இந்த கட்டுரை பயன்படும் என்று நம்புகிறோம். உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்.

F&O பற்றி ஒரே கட்டுரையில் விவரிப்பது சாத்தியமல்ல. அதனால் மேலும் தகவல்களை அறிய தமிழில் சோம வள்ளியப்பன் எழுதிய அள்ள அள்ள பணம் - Futures & Options என்ற புத்தகத்தையும் படித்து வாருங்கள்!

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

4 கருத்துகள்:

 1. மேலும் உங்கள் தளத்தில் இது போல் ஆப்ஷன் பற்றி அதிக கட்டுரைகளை எதிர்பார்க்கிறேன்... நன்றி வணக்கம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பர் அவர்களுக்கு! கண்டிப்பாக ட்ரேடிங் பற்றியும் சில கட்டுரைகள் எழுத முனைகிறோம்.

   நீக்கு
 2. சோம வள்ளியப்பனின் ப்யூச்சர் ஆப்ஷன் புத்தகம் என்னிடம் இருக்கிறது. ஆனால் அதில் இது போல் எந்த தகவலும் இல்லை... நன்றி வணக்கம்...

  பதிலளிநீக்கு
 3. சோமா வள்ளியப்பன் போன்ற நபர்கள் மட்டுமல்ல யாருமே பங்குசந்தையில் பொது மக்களுக்கு நல்லது செய்வதற்கு என்றுமே நினைக்கமாட்டார்கள். பங்குச்சந்தை என்பது பொதுமக்களின் பணத்தை நியாயமான முறையில் பறிப்பதற்க்கே. நீங்கள் டிரேடிங் செய்து பாருங்கள் ஆயிரம் ஆயிரம் ஏமாற்று பேர்வழிகள் இருப்பார்கள், YES பேங்க் ஷேர்ஐ கடந்த இரண்டு வாரமா தொடர்ச்சியாக 31 ரூபாயில் இருந்து 25 ரூபாய்க்கு கொண்டு சென்றார்கள் ஆனால் இன்று ஒரே ஓவர் அரை மணிநேரத்தில் 25யில் இருந்து 27 ரூபாய்க்கு மேல் ஏற்றி சென்று விடுவார்கள். அவர்களாக எந்த ஒரு SHAREயும் மேலே ஏற்றுவார்கள் அவர்களாக கீழே இறங்குவார்கள். அறிவாளி பொதுமக்கள் என்ன செய்வார்கள் தெரியுமா மேலே உச்சத்தில் இருக்கும்போது வாங்குவார்கள் பிறகு கிழ அதாலாபாதாளத்தில் இறங்கும் போது விற்பார்கள். UTTAM VALUE STEEL கடந்த ஒரு மூன்று மாதத்திற்கு முன்பு வரை வெறும் 0.05 பைசாவுக்கு இருந்தது யாரும் வாங்குவதற்கு ஆள் இல்லை இன்று அந்த நிறுவனத்தின் விலை 0.70 paise கிட்டத்தட்ட ஆயிரத்து முன்னூறு மண்டங்கு லாபம். இதே பங்கை மீண்டும் 0.05 பைசாவுக்கு கொண்டு செல்வார்கள்.

  பதிலளிநீக்கு