செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

2G இல்லாத இந்தியாவும், வஞ்சக எண்ணமும்

கடந்த சில நாட்களுக்கு முன்பு முகேஷ் அம்பானி டெலிகாம் துறை தொடங்கப்பட்ட 25வது வருட மாநாட்டில் முக்கியமான வார்த்தைகளை உதிர்த்துள்ளார்.

அதாவது 2G இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பது தான் அது. வறுமை இல்லாத இந்தியா, போலியோ இல்லாத இந்தியா என்ற அரசியல் வாதிகளின் பொன்மொழி போன்று இது ஒரு புதிய பதம் தான்.


2G என்பது ஆரம்ப கட்டங்களில் NOKIA 1100 போன்ற Feature Phones வழியாக பேசும்  முறை தான். இன்னமும் இந்தியாவில் 35 கோடி மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

அதனை தான் ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறார்.

சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பதால் கொஞ்சம் பின்புலத்தையும் பார்ப்போம்.

டெலிகாம் துறையில் ஜியோ என்பது மிக சமீபத்திய வருகை தான். அவர்களது இலக்கு என்பது புதிய இளைஞர் கூட்டம். அதனால் அவர்களுக்கு இணையம் பயன்படுத்த உதவும் டேட்டா நெட்ஒர்க் என்பதில் தான் அதிக முக்கியத்துவம் இருந்தது. 

முந்தைய 2G, 3G முறைகளில் போன் கால் பேசுவதற்கு ஒரு தொழில்நுட்ப வழியும், டேட்டா முறைக்கு இன்னொரு தொழில்நுட்ப வழியும் பயன்படுத்தப்படும். 

ஆனால் அண்மையில் VoLTE என்ற Voice Over LTE தொழில்நுட்பமும் பிரபலமாகி இருந்தது. அதாவது டேட்டா வழியாகவும் போன் கால்களையும் பேச முடியும்.  

அதனால் ஜியோவிற்கு 2G, 3G போன்ற முந்தைய தொழில் நுட்பங்கள் தேவை இல்லாமல் இருந்தது. அதன் தாக்கம் தான் கால் பேசுவதற்கு கட்டணமே தேவையில்லை என்ற ஜியோவின் அறிமுகம்.

அந்த வகையில் ஜியோ முந்திய டெலிகாம் நிறுவனங்களின் கொள்ளையை தடுத்தது என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அவர்களது வியாபார உத்தி என்பதில் நாணயம் என்ற ஒன்று இருப்பதாக கருதவில்லை.

மோனோபோலி என்பது கிட்டத்தட்ட அடிமை சாசனம் எழுதிக் கொடுப்பது போல் தான். எந்த நேரத்தில் கட்டணங்கள் கூட்டினாலும் அதற்கு அடங்கி தான் போக வேண்டும். ஏனென்றால் வேறு வழி கிடையாது.

அந்த வகையில் Inter Call Charges போன்றவற்றில் மத்திய அரசும் ஜியோவிற்கு உதவி செய்தது. Airtel, Vodafone, Idea போன்றவற்றிற்கு பாதகமாகவும், ஜியோவிற்கு சாதகமாகவும் நிறையை டெலிகாம் துறை முடிவுகளே இருந்தன. 

அதன் தொடர்ச்சியாக தான் டெலிகாம் துறையில் 2G என்பதை ஒழிக்க வேண்டும் என்ற கோஷமும் இருக்கிறது. 

டெக்னாலஜி என்பது திணிக்கப்பட கூடாது. கால ஓட்டத்தில் OUTDATED என்று வரும் போது தானாகவே மறைந்து விடும். இன்று பல வீடுகளில் Land Line Phone என்பதே கிடையாது. மொபைல் பரவலாக்கப்பட்ட சூழ்நிலையில் தரை வழி போன் என்பதும் தேவையில்லாமல் போனது. இது பலவற்றிற்கும் பொருந்தும்.

புதிய LED TVக்கள் வந்தாலும் பழைய CRT டிவி பயன்படுத்துபவர்கள் இருக்க தான் செய்கிறார்கள்.

இப்பொழுது புள்ளி விவரத்தை பார்ப்போம்.

2G நெட்ஒர்க்க்கை தற்போது 35 கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர். அதில் 11 கோடி பேர் ஏர்டெல்லில் இருக்கிறார்கள். மீதி உள்ளவர்கள் BSNL, Vodadfone போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள். ஜியோவிற்கு ஒருவர் கூட இல்லை.

அப்படி 2G அழிக்கப்பட்டால் யாருக்கு லாபம்? முழுக்க ஜியோவிற்கு தான். 

இன்னொன்று ஜியோ அண்மைய டீல்களில் கூகுள், Facebook என்று பெரிய நிறுவனங்கள் வழியாக இரண்டு லட்சம் கோடி அளவு ரூபாய் பணத்தை முதலீட்டாக திரட்டி உள்ளது.


எப்படி என்றால் , ஜியோ என்பது டெலிகாம் நிறுவனம் என்பதல்ல. டிஜிட்டல் நிறுவனம். அதாவது Flipkart, Amazon போன்று சேவைகளில் வருமானத்தை பெறுவோம் என்று சொல்லி தான் பெற்றார்கள்.

அதற்கு இடைஞ்சலாக இருப்பது. டேட்டா சேவையை பயன்படுத்தாத இந்த 35 கோடி மக்கள் தான். கிராமப்புறங்களில் ஜியோவின் திட்டங்களுக்கு இவர்கள் சரியான முட்டுக்கட்டை தான்.

இவர்களை  2G பயன்படுத்த முடியாமல் செய்து விட்டால் அதில் 30% அல்லது 40% பேராவது ஜியோவிற்கு வருவார்கள். அவர்களை வைத்து வருமானம் பார்க்க முடியும். அதே நேரத்தில் போட்டியாளர்களுக்கும் நஷ்டம் வரும்.

2Gயை ஒழித்து விட்டால் வோடபோன் போன்ற நிறுவனங்களின் பாடு என்பது மிக கஷ்டம். இப்பொழுது தள்ளாடிக் கொண்டிருக்கும் நிறுவனம் உடனடியாக மூடி விட்டு செல்ல வேண்டியது தான்.


இன்னும் BSNL மட்டுமே சேவை செய்து வரும் பல கிராமங்கள் உள்ளன. நமது முந்தைய தலைமுறைக்கு இப்பொழுது இருக்கும் பல டேட்டா வசதிகள் தேவையில்லை. இன்னும் பல பேருக்கு Smart Phones வாங்கும் வசதி இல்லை.

Smart Phonesல் Anti Virus என்ற ஒன்று கட்டாயம் வேண்டும் என்று சொல்லும் காலக்கட்டமும் இருக்கிறது. அந்த அளவிற்கு தகவல் திருட்டு இருக்கிறது.

புதிய தலைமுறையில் கூட தனி நபர் பாதுகாப்பு, தேவையில்லாத பிரச்சினைகள் போன்றவற்றை கருதி Features Phone பயன்படுத்துவர்கள் இருக்க தான் செய்கிறார்கள். 

அப்படி இருக்கும் போது இவர்களை எல்லாம் சட்டம் போட்டோ, திட்டம் போட்டோ மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்: