வியாழன், 29 செப்டம்பர், 2016

போர் மேகங்கள் சூழ்ந்த பங்குச்சந்தையில் என்ன செய்வது?

காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்தியா சார்பில் கொடுக்கப்பட்ட பதிலடி சந்தையில் கடுமையான பாதகத்தை ஏறபடுத்தியது.


இன்று மட்டும் சந்தையில் 550 புள்ளிகள் சரிவடைந்து தாக்கம் வீரியமாகவே இருந்தது.இந்திய அரசைப் பொறுத்தவரை எல்லையோரமாக அமைந்துள்ள தீவிரவாத முகாம்களை தாக்கினோம் என்று சொல்வதன் மூலம் இதனை ஒரு தற்காப்பு அல்லது முன்னெச்சரிக்கையான தாக்குதல் என்ற ரீதியிலே எடுத்து செல்ல முனைந்துள்ளார்கள்.

பாகிஸ்தானும் அப்படி ஒரு தாக்குதல் நடைபெறவே இல்லை என்று சொல்லுமளவு அமைதியாகவே உள்ளது.

ஆக, இரு நாடுகளுமே பெரிய அளவில் ஒரு போரை விரும்பவில்லை என்பது தெரிகிறது.

அடுத்து, பாகிஸ்தானும் ஒரு தாக்குதலுக்கு முன்னெடுக்கலாம். ஆனால் அது போரிற்கு எடுத்து செல்லுமளவு இருக்காது என்று முன்னாள் ராணுவ அதிகாரிகள் கருத்து சொல்வதும் நமக்கு முக்கியத்துவம் பெறுகிறது.

அப்படியே இதற்கு முன்பு பாகிஸ்தானுடன் ஏற்பட்ட போர்கள் கூட இந்தியா போன்றதொரு பெரிய நாட்டில் பெரிதளவு பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்துமளவு இல்லை. கார்கில் போரின் போது கூட சரிந்த சந்தை விரைவில் மீண்டது.

ஆனால் பங்குச்சந்தையை பொறுத்தவரை வட கொரியா அணுகுண்டு சோதித்தாலே எதிர்விளைவை காட்டும் சூழ்நிலையில் இன்றைய தாக்கம் என்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.

அதனால் நீண்ட கால நோக்கில் இன்றைய சூழ்நிலை என்பது ஒரு நல்ல வாங்கும் வாய்ப்பே என்றே சொல்லலாம்.

29,000 என்ற சென்செக்ஸ் புள்ளிகளை எளிதில் தொட்ட சந்தை அதற்கு கீழ் திருத்தம் கொண்டு வர அதிக அளவு சிரமப்பட்டது என்றே சொல்லலாம். அந்த திருத்தம் இன்றைய தாக்குதல் மூலமாக தான் ஏற்பட்டது.

இன்னும் நீண்ட கால நோக்கில் எதிர்பார்த்த தொழில் துறை தரவுகள் முன்னேற்றம், ஜிஎஸ்டி வரியின் அமலாக்க பலன்கள் போன்றவை நமக்காக காத்து உள்ளது.

அதனால் அமைதியாக சந்தையில் தொடருங்கள்! அல்லது வாய்ப்புகளை வாங்குவதற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக