ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

கணிக்க முடியாத கொரோனா ...

நண்பர்களுக்கு வணக்கம்! நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பதிவு. இந்த இடைப்பட்ட தினங்களில் நிறைய நிகழ்வுகள் நடந்து விட்டன. அதில் எமது பதிவுகள் இல்லாதது நண்பர்களுக்கு வருத்தம் இருந்ததை அறிய முடிந்தது. மன்னிக்கவும்!





கோரோனோ வைரஸ் வந்து வீட்டில் இருந்து வேலை பார்க்க சொன்னார்கள். ஆனால் அலுவலத்தை விட அதிக பளு இருந்தது என்று தான் சொல்ல முடியும்.  இதனை பல நண்பர்கள் அனுபவித்து இருப்பார்கள்  கருதுகிறோம். நிறுவனங்களுக்கு வீட்டில் இருந்து வேலை பார்ப்பதில் சந்தேகம் இருப்பதும் ஒரு காரணம்.

எமது அலுவலகத்தில் சொல்லியது இது தான். இந்த தடை அடுத்து மே மாதம் வரை கூட நீடிக்கலாம். அதனால் Productivity பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்கள். கடந்த இரு வாரங்களாக அணியில் இருக்கும் 70 உறுப்பினர்களிடமும் உடல் நலம் சரியா? வேறு ஏதாவது பிரச்சினை இருக்கிறதா? என்று கேட்டே பொழுது சென்று விடுகிறது.

இது போக, அடுத்து என்ன நடக்கும் என்று எதுவும் கணிக்க முடியாத நிலை இருப்பதால் நிறுவனங்களில் ஒரு பதற்றத்தை காண முடிகிறது.

அதனால் முடிந்த வரை வீட்டில் இருந்து வேலை பார்ப்பதை சீரியஸாக எடுத்துக் கொள்வது நலம்.

இப்பொழுது தான் மோடி சொன்னது போல் விளக்கு போட்டு விட்டு எழுத உட்கார்ந்தோம். பெங்களூருவில் கொரோனாவை வெடி வெடித்துக் கூட கொண்டாடுகிறார்கள்.இதை பார்த்து எனது பையன் தீபாவளியா என்று கேட்கிறான்.

இது வரை மோடி சொல்வதை ஏன் என்று கூட கேட்காமல் கொரோனாவுக்காக செய்து விட்டோம்.  இனி அவர் தான் உருப்படியாக ஏதாவது செய்ய வேண்டும்.

ஏற்கனவே நமது பொருளாதாரம் கோமா நிலையில் தான் இருந்தது. அதனால் தான் கடந்த ஆறு மாதங்களாக பங்குசந்தையில் முதலீடு செய்யவும் நாம் பரிந்துரை செய்யவில்லை. அது போல் வெளியேற தான் சொல்லி இருந்தோம்.  வெளியேறியவர்கள் சிறிய நஷ்டத்துடன் தப்பி பிழைத்து இருப்பார்கள் என்று நம்புகிறோம்.

தற்போது கொரோனாவும் வந்து விட்டதால் அது தான் வீழ்ச்சிக்கும் முக்கிய காரணமாக போகிறது. அதனை கடந்த வார மோடியின் பேச்சில் காண முடிந்தது. கொரோனாவால் பொருளாதாரம் வீழ போகிறது. ஆனால் எனக்கு மக்கள் தான் முக்கியம் என்று சொன்னதிலே க்ளூ கிடைத்து இருக்கும்.

அடுத்த க்ளூ. இன்று நமது சுகாதார துறை கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஐந்து லட்சத்துக்குள் தான் இருக்கும் என்று சொல்லியுள்ளார்கள். நாம் இப்பொழுது மூவாயிரத்தில் தான் இருக்கிறோம். அதனால் இன்னொரு முட்பாதையை கடக்க வேண்டியுள்ளது என்பது தான் யதார்த்தம்.

இதனை பயமுறுத்தவதற்காக சொல்லவில்லை. சந்தை அடித்தளத்தை அடைந்து விட்டது என்று முதலீடு செய்யக் கூடாது என்பதற்காக தான் பகிர்கிறோம்.

கடந்த தேக்கத்தில் நிப்டி P/E மதிப்பு 13 அளவு கூட சென்றது. தற்போது 16க்கு அருகில் இருக்கிறது. அதனால் இன்னும் 15~20% சரிவு கூட சாதகமானது தான்.

கனடாவில் அரசு அடுத்த மூன்று மாதங்களுக்கு  சம்பளத்தை  வழங்குமாம். வேலை இழப்புகளை தவிர்ப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை. அது போல் ஏதாவது மோடி அடுத்த பேச்சில் சொல்வார் என்று நம்புவோம். சிறு நிறுவனங்களிடம் வருமானமே இல்லாமல் சம்பளம் கொடுக்குமளவு நிதி ஒன்றுமில்லை.

மீண்டும் வந்து கையையும் காலையும் தட்ட சொன்னால் மக்கள் கடுப்பாகி விடுவார்கள்.

அடுத்து தற்போது பங்குச்சந்தை நஷ்டத்தில் பெரும்பாலானோர் இருப்பதற்கு வாய்ப்புகள்  அதிகம்.அதற்காக வருத்தப்படாதீர்கள். நாம்  உயிர் பிழைப்பதற்கான போராட்டத்தில் இருக்கிறோம். அதில் இந்த நஷ்டங்கள் ஒன்றும் செய்து விடாது.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

3 கருத்துகள்: