சனி, 24 டிசம்பர், 2016

பட்ஜெட் வரை நம்பிக்கை இல்லாத சந்தை


அதிக அளவில் நண்பர்களிடம் சந்தையின் தாழ்வு நிலை குறித்து மின் அஞ்சல்கள் வந்ததால் இந்த கட்டுரையை  எழுதுகிறோம்.



ரூபாய் மதிப்பு இழப்பு நிகழ்வில் தடுமாறிய சந்தை தற்போதும் அதே நிலையில் தான் இருந்து வருகிறது. அதிலும் கடந்த ஏழு நாட்களாக தொடர்ந்து சந்தை சரிந்து வருகிறது.



இப்போதெல்லாம் சந்தை செய்திகளை மட்டும் படித்து விட்டு அப்படியே ஒதுங்கத் தான் தோன்றுகிறது. தினமும் ஒரு சதவீதம் என்று குறைந்து வந்தால் என்ன செய்வது என்ற மனநிலை தான் காரணம்.

இந்தக் காலாண்டில் ரூபாய் ஒழிப்பு விவகாரம் பல நிறுவனங்களின் லாபங்களை பதம் பார்க்கலாம். எப்படியும் இந்தக் காலாண்டு முடிந்து நிதி அறிக்கைகள் வரும் தேதிகளை பார்க்கும் போது கிட்டத்தட்ட அடுத்த காலாண்டும் ஓடி விடும்.

அதனால் ஐந்து முதல் ஆறு மாதங்களில் பெரிய அளவில் சந்தை நிலவரங்களில் முன்னேற்றம் இருக்காது என்ற நிலையால் பெரிய அளவில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை எடுத்து சென்று விட்டார்கள். இது தான் மிக முக்கியமாக சந்தையில் ஒரு வலுவில்லாத நிலையை தோற்றுவித்துள்ளது என்று சொல்லலாம்.

அடுத்து, பெப்ரவரி மாதத்தில் பட்ஜெட் வரவிருக்கிறது. ரூபாய் ஒழிப்பு என்பது மோடிக்கு நல்ல பெயருடன் கெட்ட பெயரையும் சம்பாதித்து கொடுத்துள்ளது. அந்த அளவிற்கு பாமர மக்கள் கஷ்டப்படுகிறார்கள்.

திட்டம் நல்லது என்று சொல்லிக் கொண்டாலும் அதற்கான முன் திட்டமிடல் என்பது பலவீனமாகவே உள்ளது. அதற்கு ஐநூறு ரூபாய் நோட்டை இன்னும் கண்ணில் பார்ப்பதே கடினமாக உள்ள நிலையை உதாரணமாக சொல்லலாம்.

இவ்வாறு உருவாகி உள்ள கெட்ட பெயரை மாற்ற மோடி பட்ஜெட்டை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற ஒரு எதிர்பார்ப்பும் உள்ளது. பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரம்பு நான்கு லட்சமாகவும் கார்பொரேட் நிறுவனங்களுக்கான வரி கணிசமாக குறைக்கவும் வாய்ப்பு உள்ளதாக கருத்துகள் வெளிவருகின்றன.

அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் சந்தையில் ஒரு எதிர்பார்ப்புடன் கூடிய ஒரு எழுச்சியை பார்க்கலாம். அதனால் பணப் புழக்கமும் அதிகரித்து அதே நேரத்தில் நிறுவனங்களின் நிகர லாபமும் அதிகரிக்கலாம் என்பது ஒரு எதிர்பார்ப்பு.

அது வரை தற்போதைய நிலையில் பார்த்தால் வர்த்தகம் செய்பவர்கள் தான் ஏற்றம் இறக்கத்திற்கேற்ப பலன் பெற முடியும் என்ற நிலையே உள்ளது. இது போக, நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு வாங்கும் வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

மற்றவர்கள், அதாவது ஏற்கனவே முதலீடு செய்து இருந்தால் சராசரி செய்து கொள்ளலாம். மற்றவர்கள் செய்திகளை மட்டும் படித்து நிலவரங்களை அறிந்து கொள்வது நல்லது. புள்ளிகளை பார்த்தால் மன அழுத்தம் தான் கூடும்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக