வெள்ளி, 1 டிசம்பர், 2017

BITCOIN நாணயத்தின் அவசிய தேவை ஏன் வந்தது? (1)

நீண்ட நாட்களுக்கு பின் ஒன்றை தொடர் வடிவில் தருகிறோம். பயனுள்ளதாக இருக்கிறோம் என்று நம்புகிறோம்.

கடந்த ஒரு வாரமாக BITCOIN என்பது மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.



இந்த வருட தொடக்கத்தில் ஒரு பிட்காயின் ஆயிரம் டாலர் அளவு வர்த்தகமாகி வந்தது. தற்போது 10,000 டாலருக்கு உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட பத்து மடங்கு உயர்வு.

இது தான் தற்போதைய பரபரப்பிற்கும் ஒரு முக்கிய காரணம்.

அந்த அளவிற்கு டிமேண்ட் வரக் காரணம் என்ற என்ற ஒரு கேள்வி எழலாம்.

தற்போதைய நாணயம் என்பதே பிரிட்டிஷ் காலனி வந்த பிறகு தான் அதிக அளவு புழக்கத்தில் வந்தது.

அதற்கு முன்னால் பண்டமாற்று முறை தான் இருந்து வந்தது என்பதை வரலாறுகளில் பார்த்து இருப்போம்.

அதாவது அரிசிக்கு பருப்பு,கோதுமை போன்ற இதர தானியங்களை கொடுத்து வாங்குவது தான் பண்டமாற்று முறை.

எவ்வளவு அரிசிக்கு எவ்வளவு பருப்பை கொடுத்து வாங்கலாம் என்பதை அரிசிக்கும் பருப்புக்கும் இடையே இருக்கும் உற்பத்தி மற்றும் தேவையின் வித்தியாசம் தீர்மானித்தது.

அதன் பிறகு ஐரோப்பியர்கள் உலகம் முழுவதும் சுற்றி வந்து உலகத்தையே ஒரு காலனியாக மாற்றி விட்டார்கள். அதன் பிறகு நாடுகளுக்கிடையே ஏற்றுமதி,இறக்குமதிகள் அதிகரித்து விட்டன.

இந்த சமயத்தில் பண்டமாற்று என்பது பொருத்தமானதாக இருக்காததால் நாணயம் என்பது ஒவ்வொரு நாட்டிற்கும் புழக்கத்திற்கு வந்தது.

நாணயத்தின் மதிப்பும் அவற்றின் தேவைக்கேற்ப ஒவ்வொரு நாளும் மாறிக் கொண்டு வருகிறது.

இந்த நாணயத்தினை அந்தந்த நாட்டின் ரிசர்வ் வங்கிகள் என்று சொல்லப்படும் மத்திய வங்கிகள் கட்டுப்படுத்தி வந்தன.

புதிதாக நாணயம் அல்லது ரூபாய் நோட்டுகளை உருவாக்குவது என்பது இந்த ரிசர்வ் வங்கியின் கையிலே இருக்கிறது.

ரிசர்வ் வங்கி அரசுக்கு தேவை அதிகமாக வரும் போது நோட்டுக்களை பிரிண்ட் செய்ய ஆரம்பிக்கும்.

இவ்வாறு பிரிண்ட் செய்யும் போது, அதிக அளவு நாணய நோட்டுக்கள் புழக்கத்திற்கு வருகிறது. அதிக அளவு ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு வரும் போது அதன் தேவை குறைந்து மதிப்பும் குறைந்து விடுகிறது.

இது தான் பணவீக்கம் என்று அழைக்கப்படுகிறது. முன்பு 100 ரூபாய்க்கு ஒரு கிலோ வாழைப்பழம் வாங்க முடியும் என்றால் தற்போது 105 ரூபாய் கொடுக்க வேண்டி வரலாம்.

இந்த நேரத்தில் ஜிம்பாப்வேயின் நாணயக் கதையை எடுத்துக் கொள்வோம்.



ஜிம்பாப்வேயில் 90களுக்கு முன்னால் பெரும்பாலான விவசாய நிலங்கள் வெள்ளைக்கார துரைகளிடம்  இருந்தது.

தற்போது பதவியில் இருந்து இறக்கப்பட்ட முகாபே அப்பொழுது வெற்றி பெற்றார். அதன் பிறகு வெள்ளையர்களிடம் இருந்த நிலத்தை பிடுங்கி கறுப்பின மக்களிடம் கொடுத்தார்.

நல்ல விடயம் தான் என்றாலும், கருப்பு இனத்தவர்கள் விவசாயத்தில் போதிய அனுபவம் இல்லாததால் நாட்டின் உணவு உற்பத்தி அப்படியே முடங்கி போனது.

இதனால் விலைவாசி விண்ணைத் தொட ஆரம்பித்தது. வருடத்திற்கு 30% என்ற வீதத்தில் பணவீக்கம் உயர ஆரம்பித்தது.

இந்த சமயத்தில் முகாபே தனது சொந்த லாபங்களுக்காக 2000 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள கார்கோ நாட்டு யுத்தத்தில் தானும் உண்டு என்று உள்ளே நுழைய ஆரம்பித்தார்.

அதற்கு ஏகப்பட்ட செலவு செய்ய மாதத்திற்கு 50% என்ற அளவில் ஜிம்பாப்வே நாணயம் படு வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது.

இதனைத் தான் Hyper Hyper Hyper Inflation என்று அழைத்தார்கள்.இதனை சரி செய்ய மில்லியன் டாலர் கரன்சி கூட அடித்தார்கள்.

ஆக, ரிசர்வ் வங்கி என்ற அமைப்பு எவ்வளவு கட்டுக்கோப்பானதாக இருந்தாலும், அது சார்ந்து இயங்கும் அரசு ஒழுங்காக இயங்காவிட்டால் நாணயத்தின் மதிப்பு என்பது வெறும் காகிதம் தான்.

நமது ரூபாய் நோட்டுக்களில் "I Promise To Pay the Bearer the sum of Two Thousand Rupees" என்று எழுதப்பட்டு ரிசர்வ் வங்கி கவர்னரின் கையெழுத்து இருக்கும்.

இங்கு தான் நாணயம் என்பதன் உண்மையான அர்த்தமான 'நாணயத்தை'  உணரலாம். அந்த ரூபாய் நோட்டுகளில் குறிப்பிட்ட மதிப்புக்கு தக்க பொருளை தருவதாக ரிசர்வ் வங்கி கவர்னர் உறுதி அளிக்கிறார்.

ஆனால் ஜிம்பாப்வேயில் ஏற்பட்டது போல நாணயத்தின் மதிப்பு வீழும் போது எந்த வித உத்தரவாதமும்  இல்லை.

இந்த மாதிரியான முழு அதிகாரம் குவிக்கப்பட்டு ஒரு இடத்தில் இருக்கும் போது, அந்த அமைப்பு சரியாக செயல்படாவிட்டால் அந்த நாணயத்தை வைத்து இருக்கும் அனைவருமே தங்கள் சேமிப்பை இழக்கிறார்கள். இங்கு பொது மக்கள் தான் அதிக பாதிக்கப்படுகிறார்கள்.

இப்படி இஷ்டத்திற்கு ரூபாய் நோட்டுக்களை பிரிண்ட் செய்யாமல் இருக்க என்ன செய்வது? என்று சிந்தித்து உருவாக்கப்பட்டது தான் BITCOIN என்று சொல்லப்படும் CryptoCurrency.

அது எப்படி இயங்குகிறது என்பதை அடுத்த பாகத்தில் நாளை பார்ப்போம்.

அடுத்த பாகத்தை இங்கு காணலாம்.
BITCOIN எவ்வாறு வேலை செய்கிறது? (2)

தொடர்பான பதிவுகள்:
அமெரிக்க டாலர் எப்படி உலக பொது நாணயமானது?


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

1 கருத்து: