திங்கள், 18 டிசம்பர், 2017

முதலீட்டு பார்வையில் குஜராத் தேர்தல் முடிவுகள் ...

இதற்கு முன் குஜராத் தேர்தலை எவ்வாறு அணுகுவது? என்று ஒரு பதிவு எழுதி இருந்தோம்.


அந்த பதிவில் கூறப்பட்ட முன் எச்சரிக்கை விடயங்கள் காரணமாக கடந்த 15 நாட்களாக கட்டண போர்ட்போலியோ கூட கொடுக்கவில்லை. ஒரு வித குழப்பம் இருந்து வந்தது.குஜராத் என்பது இந்தியாவின் ஒரு மாநிலம் தான். மிகப்பெரிய மாநிலம் என்று கூட சொல்லிவிட முடியாது. ஆனால் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிகப் பெரிய அளவில் இருந்தது.

எந்த பிரபல திறமையுடையவரும், சொந்த ஊரில் தோற்று விட்டால் அது வெற்றி பெற்ற மற்ற இடங்களில் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி விடும்.

அது தான் மோடியின் விடயத்திலும் நடந்து விடுமோ என்ற பயம் பிஜேபி ஆட்களுக்கு மட்டுமில்லாமல் சந்தையில் முதலீடு செய்த அனைவருக்குமே இருந்தது.

ஏன், காங்கிரஸ் நபர் ஒருவர் பங்குசந்தையில் முதலீடு செய்து இருந்தால் அவரும் அதைத் தான் விரும்பி இருப்பார்.

இறுதியில் காங்கிரஸ் கட்சியின் கடுமையான போட்டியையும் தாண்டி பிஜேபி குஜராத்தில் வெற்றி பெற்று விட்டது. குஜராத் கொஞ்சம் தண்ணி காட்டி வெற்றியைக் கொடுத்துள்ளதால் பிஜேபி இந்த முடிவுகளை சீரியஸ் நிலையிலே எடுத்துக் கொள்ளும்.

இந்த தேர்தல் முடிவுகளை பங்குச்சந்தை முதலீட்டின் பார்வையில்  நாம் பார்ப்போம்.

கடந்த தேர்தலை விட பிஜேபி இடங்களை குறைவாக பெற்றாலும், ஒட்டு சதவீதம் கூடியுள்ளது கவனிக்கத்தக்கது.

படேல் இனத்தவர்கள் இருக்கும் இடங்களில் முன்பை போல் வெற்றி பெற முடியவில்லை.

இதனை தற்காலிக உணர்ச்சி வயப்படல் என்று கூட எடுத்துக் கொள்ளலாம்.

அதே நேரத்தில் நகரங்களில் மிக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற பிஜேபி கிராம புறங்களில் இடங்களை இழந்துள்ளது.

இந்த குறிப்பு பிஜேபியை பொறுத்தவரை எதிர்மறையாகவே பார்க்க வேண்டும்.

பார்லிமெண்ட் தேர்தலில் நகர்புறங்களை காட்டிலும் கிராமப்புறங்களே முக்கிய பங்கு வகிக்கும். அதனால் கிராமப்புற நம்பிக்கையை பெறாவிட்டால் அடுத்து வரும் தேர்தலில் அறுதி வெற்றி என்பது கடினம் தான்.

அதனால் அதிக வேலைவாய்ப்பு கொடுத்து விட்டு, அதே நிலையில் பொருளாதார ரீதியாக புறந்தள்ளப்படும் விவசாயம், டெக்ஸ்டைல் போன்ற துறைகளுக்கு இனி அதிக முக்கியத்துவம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

அடுத்த 2019 பட்ஜெட்டில் விவசாயம் கணிசமான முக்கியத்துவத்தை பெற வாய்ப்பு உள்ளது.

பொதுவாக விவசாயத்திற்கு ஏதாவது செய்வது என்றாலே நெல், கோதுமையின் குறைந்த பட்ச விலையை மட்டும் அரசு கூட்டி விட்டு சும்மா இருப்பார்கள்.

ஆனால் இந்த முறை அதையும் தாண்டி, சொட்டு நீர் பாசனம், அதிக மானியங்கள் போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவங்கள் கிடைக்கலாம். வேலை வாய்ப்புகள் கூட்டும் நடவடிக்கைகள் அதிகமாக இருக்கலாம்.

இதே போல், டெக்ஸ்டைல் துறைக்கும் ஏற்றுமதி, GST போன்றவற்றில் சில சலுகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ஓட்டிற்காக பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் இனி அதி வேகமாக்கப்படலாம்.

மேலே கூறிய எல்லாம் Popularist Budget என்று சொல்லப்படும் நலத்திட்டங்களுக்கான பட்ஜெட். அதாவது அரசின் பணம் ஏதாவது ஒரு வகையில் ஒரு தனி நபருக்கு சென்றடையும் விதமாக இருக்கும்.

அதே நேரத்தில் பொது காரியங்களுக்கு செய்யப்படும் வளர்ச்சி பட்ஜெட் அல்ல.

அதனால் அடுத்த பட்ஜெட்டில் ரோடுகளை போட, நதிகளை இணைக்க, விமான நிலையங்களுக்கு, ஸ்மார்ட் சிட்டிக்கு என்று எதுவும் பெரிதாக எதிர்பார்க்க வேண்டாம்.

இதற்குள் அடங்கும் நிறுவனங்களுக்கு அடுத்த ஒன்றரை வருடத்திற்கு அரசிடம் இருந்து எதுவும் கிடைக்க வாய்ப்புகள் குறைவே.

அதே நேரத்தில், ஏற்கனவே இக்கட்டுகளில் இருந்த இந்த கட்டுமான நிறுவனங்கள்,ஸ்டீல் ,பவர் நிறுவனங்கள் தற்போது மீண்டு வரத் தொடங்கியுள்ளதால் இந்த ஒன்றரை வருட சனி திசையை தாங்கி பிடித்து தப்பி விடவும் வாய்ப்புகள் உள்ளன.

அதனால் முதலீட்டு தன்மையை இவ்வாறு வைத்துக் கொள்ளலாம்.

இரண்டு வருடங்களுக்குள் பங்குகளை விற்று வெளியேறுவதாக இருந்தால் அரசின் கொள்கை சார்ந்த நிறுவனங்களில் அதிக முதலீடு செய்யுங்கள்!

அதன் பின்னும் வைத்துக் கொண்டே இருப்பேன் என்றால் வளர்ச்சி சார்ந்து முதலீடை தொடருங்கள்! நல்ல ரிடர்ன்  கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு  ஒரு கட்டண போர்ட்போலியோ கொடுக்கிறோம். நீங்கள் மேல் சொன்னதில் எத்தகைய முதலீட்டாளர் என்பதையும் தெரிவித்து விடுங்கள். தயார் செய்வதற்கு எளிதாக இருக்கும்!


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக