வியாழன், 15 பிப்ரவரி, 2018

பஞ்சாப் வங்கியில் முறைகேடு நடந்தது எப்படி?

மோடி ஒவ்வொரு முறையும் டிஜிட்டல் பண வர்த்தகம் பற்றி பேசும் போதும் பொது மக்களுக்கு பயம் வருவதற்கு முக்கிய காரணம் இந்திய வங்கிகளில் நடக்கும் முறைகேடுகளும் ஒன்று.


கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக ரூபாய் ஒழிப்பு முறையைக் கொண்டு வந்தார்.

நல்ல திட்டம் தான்.



ஆனால் வெளியில் இருந்த 95% பணமும் மீண்டும் வங்கிக்கு உள்ளே வந்து விட்டது என்று சொன்ன பிறகு நடைமுறையில் எங்கோ தவறு நடக்கிறது என்றும் யூகிக்க முடிந்தது.

எங்கோ என்றால் வேறு எங்கும் இல்லை, வங்கி அதிகாரிகளே துணை புரிகிறார்கள்

முப்பது, நாற்பது சதவீத கமிசனுக்கு ஆசைப்பட்டு புதிய ரூபாய் நோட்டுக்களை மாற்ற துணை புரிந்தனர்.

இப்படிப்பட்ட அதிகாரிகளை நம்பி பொது மக்கள் எப்படி தங்கள் சேமிப்பு பணத்தை வங்கியில் போடுவார்கள்? என்பதை நிரூபிக்கும் வகையில் மற்றொரு முறைகேடு தற்போது வெளியே வந்துள்ளது.

பஞ்சாப் தேசிய வங்கி இந்தியாவில் இரண்டாவது பெரிய அரசு வங்கியாகும்.

அரசு வங்கிகள் அனைத்தும் வாராக் கடன்களில் மூழ்கி இருக்கும் சூழ்நிலையில் ஓரளவு பரவாயில்லை என்ற ரகத்தில் ஓடிக் கொண்டிருக்கும் வங்கி.

இங்கு தான் தற்போது 11,000 கோடி அளவிற்கு பெரிய முறைகேடு நடந்துள்ளது.

பஞ்சாப் தேசிய வங்கியின் மொத்த மூலதன மதிப்பே 36,000 கோடி என்பதால் இந்த மோசடியை எப்படி சமாளிக்க போகிறது என்பது தான் இப்பொழுது கேள்விக்குறி.

சரி. முறைகேடு என்ன என்பது பற்றி பார்ப்போம்.

பொதுவாக ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் ஏதேனும் அடமானங்களை கொடுத்து 90 நாட்களுக்கான குறுகிய கால கடன்களை பெறுவது வழக்கம்.

இந்தக் கடன் தொகையானது பொருட்களை ஏற்றுமதி விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு வங்கியின் சார்பில் வழங்கப்படும்.

அதனை நம் நாட்டில் இறக்குமதி செய்யும் நபர்கள் 90 நாட்களில் இந்தக் கடன்களை செட்டில் செய்ய வேண்டும்.

இதற்காக வங்கி மற்றும் இறக்குமதி செய்யும் நபர் என்ற இரண்டு பிரிவனரும் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வர்.

இதனை Letter Of Understanding (LoU) என்று குறிப்பிடுபவர்.

2010ல் பஞ்சாப் தேசிய வங்கியில் மும்பை கிளை ஒன்றின் ஊழியர்கள் இந்த LoU படிவத்தை போலியாக தயாரித்து வைர நிறுவனங்களை நடத்தும் நீரவ் மோடி என்பவருக்கு கொடுத்துள்ளனர்.

அதோடு மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும் SWIFT பண முறையில் பணத்தை இறக்குமதி பொருட்களை விற்பவருக்கும் அனுப்பி விட்டனர்.

இவ்வாறு செல்லும் பணம் வங்கியின் மென்பொருளிலும் கணக்கு வைக்கப்பட வேண்டும்.

ஆனால் இந்த தவறு தெரியாமல் இருப்பதற்காக வங்கியின் மென்பொருளில் கணக்கு வைக்காமல் விட்டு விட்டனர்.

ஆக, நீரவ் மோடிக்கு வாங்கும் பொருளுக்கு பணமும் செட்டில் செய்யப்பட்டு விட்டது. பொருளும் கிடைத்து விட்டது. ஆனால் எல்லாம் பஞ்சாப் வங்கியின் புண்ணியத்தால்.

இந்த முறைகேடின் மூலம் மட்டும் பஞ்சாப் தேசிய வங்கிக்கு கிட்டத்தட்ட 11,000 கோடி அளவு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இதில் பல கேள்விகள் வருகின்றன.

2010ல் நடந்த முறைகேடு எட்டு வருடங்களுக்கு பிறகு தான் தெரிய வந்துள்ளது. அப்படி என்றால், ஆடிட்டிங்கில் ஒவ்வொரு காலாண்டும் என்ன தான் சரி பார்த்தார்கள்?

ஒரு வங்கியின் ஒரு கிளையில் இவ்வளவு பெரிய அளவு பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. மற்ற வங்கிகள், மற்ற கிளைகளில் இன்னும் எவ்வளவு மோசடி நடந்து இருக்கும்?

இரண்டு ஊழியர்கள் தான் இதனை செய்துள்ளார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் இவ்வளவு பெரிய தொகையை வெறும் இரண்டு ஊழியர்கள் மட்டும் மூடி மறைத்து விட முடியுமா? என்ற சந்தேகமும் வருகிறது.

நாம் முன்பு ஒரு பதிவில் பிக்ஸ்ட் டெபாசிட் எவ்வளவு தூரம் பாதுகாப்பானது? என்று எழுதி இருந்தோம்.

அதில் ஒன்று வங்கியில் போட்டவர்கள் பணம் பாதிக்கப்படும். அல்லது அரசுக்கு வரி கொடுப்பவர்கள் இப்படி தாரை வார்த்துக் கொடுக்கப்படும் என்று கூறி இருந்தோம்.

இங்கேயும் அப்படித் தான்.

வைர வியாபாரி நீரவ் மோடியிடம் இருந்து ஐயாயிரம் கோடி ரூபாய் பணத்தை வசூல் செய்தாலே தற்போது சாதனை தான்.

அப்படி என்றால் மீதி பணத்தை இதற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத நாம் தான் தாரை வார்க்க வேண்டும்.

இந்திய நிதி கட்டமைப்பு நம்பிக்கையை பெறும் தருணமிது! அது தவறும் என்றால் பெரிய விலையைக் கொடுக்க வேண்டி வரும்...

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

4 கருத்துகள்:

  1. You have very good knowledge on the stick market but not on this subject what you have written. Many mistakes are there in the article.

    Regards

    Sethuraman Sathappaan Mumbai

    பதிலளிநீக்கு
  2. Mr.Sethuraman I would like to appreciate your comment. In mean time if you clarify what the author missed in this article then it would be great for all the revmuthal readers.

    பதிலளிநீக்கு