ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

ஜேட்லியின் புதிய LTCG வரி, எப்படி சமாளிப்பது?

முந்தைய ஒரு பதிவிலே இந்த வருட தேர்தல் பட்ஜெட் பங்குசந்தைக்கு சாதகமாக இருக்காது என்று கூறி இருந்தோம்.


அதே போலவே, அருண் ஜெட்லியும் நிதி பற்றாகுறையை 3.5% என்று இருக்குமளவு பார்த்து விட்டு இருப்பதை மட்டும் அங்கும் இங்கும் பிரித்துக் கொடுத்து விட்டார்.



இதனால் பங்குச்சந்தையும் மகிழ்வு கொள்ளவில்லை. அதே நேரத்தில் விவசாயிகள், பொது மக்கள் என்று எவருக்கும் திருப்தி அளிக்காமல் போய் விட்டது.

இது ஒரு தற்காலிகம் என்பதால் விட்டு விடுவோம்.

அதே நேரத்தில் அருண் ஜெட்லி பங்குச்சந்தை முதலீடுகளில் கிடைக்கும் லாபத்திற்கு LTCG வரியில் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார்.


அதனை சந்தை முழுமையாகவே எதிர்மறை விடயமாக எடுத்துக் கொண்டு சென்செக்ஸ் 800 புள்ளிகளை இழந்து விட்டது.

இது சந்தைக்கு மட்டுமல்ல, நமக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும் விடயம் என்பதால் எப்படி சமாளிப்பது என்பது பற்றி பார்ப்போம்.

ஏற்கனவே பங்குச்சந்தை முதலீடுகளில் கிடைக்கும் லாபத்திற்கு STCG, LTCG என்று இரண்டு வரி முறைகள் இருந்தன.

இதில் STCG என்பது Short Term Capital Gain Tax. குறுகிய காலத்தில், அதாவது ஒரு வருடத்திற்குள் பங்குகளை வாங்கி விற்றால் கிடைக்கும் லாபத்திற்கு 15% வரி கட்ட வேண்டும்.

அதே நேரத்தில் LTCG என்ற Long Term Capital Gain Tax முறையில் ஒரு வருடத்திற்கு மேல் பங்குகளை வைத்து விற்றால் கிடைக்கும் லாபத்திற்கு வரி எதுவும் கட்ட வேண்டிய தேவையில்லை.

அதனைத் தான் தற்போது ஜெட்லி மாற்றியுள்ளார்.

இது வரை வருடத்திற்கு அரசுக்கு 3,60,000 கோடி ரூபாய் LTCG முறையில் கணக்கு காட்டப்பட்டுள்ளது. அதற்கு எந்த வித வரியும் செலுத்துவதில்லை.

ஆனால் புதிய முறையின் படி, வருடத்திற்கு ஒரு லட்சத்திற்கு மேல் LTCG முறையில் லாபம் அடைந்தால் 10% வரி கட்ட வேண்டும்.

இதனால் அரசுக்கு வருடத்திற்கு 35,000 கோடி ரூபாய் கூடுதல் வரி  வருமானமாக  கிடைக்கும்.

இது நீண்ட கால முதலீட்டாளர்களை ஊக்குவிக்காமல் உள்ளது என்பது தான் சந்தை வீழ்ச்சிக்கும்  ஒரு முக்கிய காரணம்.

STCG வரிக்கு 15% என்றும், LTCG வரிக்கு 10% என்று வரும் போது பெரிதளவு வித்தியாசம் இல்லை. அதனால் முதலீட்டாளர்கள் நீண்ட நாட்கள் பங்குகளை வைத்து இருக்க வேண்டும் என்று விரும்ப மாட்டார்கள்.

அதே நேரத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில் பல பங்குகள் பல மடங்களில் ரிடர்னைக் கொடுத்துள்ளன. அந்த லாபத்திற்கு மிக அதிக அளவு வரி கட்ட வேண்டும் என்ற ஒரு அச்சமும் சந்தை பதற்றத்திற்கு காரணமாக அமைந்தது.

புதிய விதிமுறையில் GrandFather Class என்ற ஒன்று உள்ளது. இது பெரிய அளவு முழுமையாக புரிந்து கொள்ளப்படாமல் இருந்தது கூட சந்தையை கீழே இழுத்து சென்றது.

GrandFather Class என்ன சொல்கிறது என்றால் Janaury 31, 2018 என்பதை கட்-ஆப் தேதியாக வைத்து கொள்ளளலாம்.

அது எப்படி என்று பார்ப்போம்.

நாம் 2013ல் AEGIS Logistics பங்கு  பரிந்துரை செய்யும் போது 14 ரூபாயாக இருந்தது. (போனஸ் பங்கு அறிவிக்கப்பட்டதால் அதற்கு தக்க விலையை மாற்றிக் கொள்க)

இதே பங்கு Janaury 31, 2018 அன்று 280 ரூபாயாக இருந்தது.

அதனால் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்து இருந்தால் 20 லட்ச ரூபாயாக மாறி இருக்கும். 7100 பங்குகளும் இருந்து இருக்கும்.

ஜெட்லீயின் புதிய விதிமுறை மொத்தத்திற்கும் 10% என்று தவறாக புரியப்பட்டு இருந்ததால் இருபது லட்ச ரூபாய் லாபத்திற்கும் இரண்டு லட்ச ரூபாய் வரி கட்ட வேண்டும் என்றே நினைக்கப்பட்டது.

ஆனால் GrandFather விதிப்படி ஏப்ரல் 1, 2018 அன்று 300 ரூபாயாக பங்கு விலை மாறி விட்டால் இந்த 300-280=20 ரூபாய் லாபத்திற்கு மட்டும் வரி கட்டினால் போதுமானது.

அதாவது (7100*20)/10 = 14,200 ரூபாய் மட்டும் வரி கட்டினால் போதும்.

ஆனால் இதில் வருமான வரி செய்யும் போது இருக்கும் சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் அதற்கும் சில குறுக்கு வழிகள் கண்டு அறியப்பட்டன.

ஜெட்லி இந்த புதிய LTCG வரி April 1, 2018 முதல் தான் நடைமுறையில் வரும் என்று அறிவித்து இருந்தார்.

அப்படி என்றால், தற்போது லாபத்தில் இருக்கும் பங்கை விற்று மற்றொரு பங்கில் முதலீடு செய்தாலோ அல்லது அதே பங்கில் முதலீடு செய்தாலோ கிடைத்த லாபம் அனைத்தும் மறு-முதலீடுகளாக மாறி விடும்.

அந்த சூழ்நிலையில் LTCG வரியை பற்றி பெரிதளவு கவலை கொள்ள தேவையில்லை.

உதாரணத்திற்கு இவ்வளவு லாபம் கொடுத்த AEGIS பங்குகளை விற்று வேறொரு பங்கில் இருபது லட்ச ரூபாயும் முதலீடு செய்தவாக கருதிக் கொள்வோம்.

இந்த சூழ்நிலையில் இருபது லட்ச ரூபாய் என்பது மற்றொரு முதலீடு. அதற்கு கிடைக்கும் எதிர்கால லாபத்திற்கு தான் வரி கட்ட வேண்டி வரும். அது முந்தையதை விட மிகவும் குறைவாகவே இருக்கும்.

அதனால் சந்தையில் பலர் அங்கு விற்று, மற்ற இடங்களில் மாற்ற முனைந்தார்கள். அதனால் தான் சந்தையும் வீழ்ந்தது.

எப்படியும், இந்த பணம் சந்தைக்கு மீண்டும் வர வாய்ப்புகள் உள்ளதால் சந்தை மேல் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.

நாமும் கடைசியாக சொன்ன முறையைத் தான் அடுத்து இரண்டு மாதங்களுக்கு பின்பற்ற பரிந்துரை செய்கிறோம்.

ஏற்கனவே நல்ல லாபம் கொடுத்த பங்குகளை விற்று விட்டு மலிவான மதிப்பில் இருக்கும் பங்குகளில் முதலீடு செய்யலாம்.

அதே போல் பங்குகளை மாற்ற வேண்டும், புதிய போர்ட்போலியோ வேண்டும் போன்றவற்றிற்கு , எமது கட்டண சேவையில் muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்க..

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக