புதன், 7 பிப்ரவரி, 2018

அமெரிக்காவில் நல்லது நடக்க, நமக்கு ஏன் வலிக்கிறது?

நேற்றே இந்த பதிவினை எழுதி இருக்க வேண்டும். போதிய நேரம் இல்லாததால் இன்று தொடர்கிறோம்.


செவ்வாயன்று காலை சென்செக்ஸ் புள்ளிகளை பார்த்தால் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் கீழே வந்தது. கிட்டத்தட்ட ஐந்து சதவீதம் சரிவு.



பல இடங்களில் என்ன? என்று தேடினால் அமெரிக்க சந்தை சரிவு என்று தெரிந்தது.

சரி. எதற்கு சரிந்தது என்று தேடினால் பிரபல நாளிதழ்களில் கூட சரியான விவரம் இல்லை.

அமெரிக்க சந்தையில் புழங்குபவர்களுக்கு கூட ஏன் சரிந்தது என்று தெரியுமா என்பது தெரியவில்லை. சந்தையின் கடைசி ஒரு மணி நேரத்தில் தான் எல்லாமே நடந்தது.

இதனால் அவரவருக்கு தெரிந்தவற்றை வைத்து அவசர கோலத்தில் எழுதியதால் இந்திய சந்தையில் குழப்பமான சூழ்நிலை தான் நிலவியது.

இதற்கு இனி இந்திய செய்திகளை பார்த்தால் வேலைக்கு ஆகாது என்று கருதி உலக அளவில் அலசல்களை பார்க்கலாம் என்று முடிவெடுத்தோம்.

இறுதியில் இது தான் நடந்துள்ளது என்று அனுமானிக்க முடிந்தது.

அமெரிக்காவில் ஜனவரி மாதத்தில் வேலை வாய்ப்புகள் எதிர்பார்ப்புகளை விட மிக அதிகமாக கூடி விட்டது.

இதனால் அதிக வேலை கிடைத்து, அதிக செலவு செய்ய பணவீக்கம் கூடும் என்று அமெரிக்க ரிசர்வ் வங்கி கருத்து கூறியதாம்.

பணவீக்கம் கூடினால் விலைவாசி கூடும். அதனால் அமெரிக்க ரிசர்வ் வங்கி அடிப்படை வட்டியைக் கூட்டலாம்.

அப்படி கூட்டினால் அமெரிக்க கடன் பத்திரங்களின் வட்டி என்பது கூடி ரிடர்னும் கூடும்.

அவ்வாறு கிடைக்கும் ரிடர்ன் என்பது நிலையானது. அதனால் உலக அளவில் முதலீடு செய்துள்ள நிதி முதலீட்டாளர்கள் பங்குகளில் இருந்து அமெரிக்க கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய விரும்புவார்கள்.

அவ்வாறு வெளியே செல்ல ஆரம்பித்ததால் பங்குசந்தையும் வீழ்ந்தது.

ஆக, வேலை வாய்ப்பு கூடியது என்ற நல்ல செய்தி எப்படியான எதிர்மறை விளைவுகளை நமக்கு ஏற்படுத்தியது என்பதை பார்த்துக் கொள்ளுங்கள்!

இங்கு ஒன்றை புரிந்து கொள்ளலாம். நீண்ட காலமாக உயர்வில் இருந்த அமெரிக்க சந்தை இதனை திருத்தத்திற்கு பயன்படுத்திக் கொண்டது. ஆனால் நமது சந்தை பட்ஜெட் தாக்கல் செய்ததில் இருந்தே அடி வாங்கி கொண்டு தான் இருக்கிறது. அப்புறம் எதற்கு திருப்பியும் ஆயிரம் புள்ளிகள் வீழ்ச்சி தேவை?

இந்த தெளிவு கிடைத்தவுடனே எமது வாயிலாக டிமேட் கணக்கு திறந்தவர்களுக்கு உருவாக்கியுள்ள வாட்ஸ் ஆப் க்ரூப்பில் "பதற்றப்பட வேண்டாம். பங்குகளை வாங்குங்கள்" என்ற எமது கருத்தை பகிர்ந்து விட்டோம். பயனாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம்!

அதற்கேற்ப, ஐந்து சதவீத சரிவிற்கு சென்ற சந்தை இறுதியாக ஒரு சதவீத இறக்கத்தோடு நிறுத்திக் கொண்டது.

எமது தளத்தை படிப்பவர்கள் பெரும்பாலும் நீண்ட கால பங்கு முதலீட்டளர்கள் என்ற அடிப்படையில் பகிர்கிறோம்.

இந்த மாதிரியான சூழ்நிலை வரும் போது ஒரு நீண்ட கால முதலீட்டாளராக நாம் என்ன செய்ய முடியும்?

அமெரிக்க பத்திரங்களில் சென்று முதலீடு செய்ய முடியுமா? அல்லது அமெரிக்க டாலரை ஒரு முதலீடாக கருதி வாங்கி வைப்பது ஒரு நல்ல தீர்வா? என்றால் இல்லை என்றே சொல்ல முடியும்.

முதலில் நமது செய்தி தளங்கள் வருமானத்திற்காக அரை குறை கருத்துக்களுடன் ஒரு பெரிய பதற்றத்தை உருவாக்கி விடுகின்றன.

அந்த பதற்றத்தில் நம்மைப் போன்ற சில்லறை முதலீட்டாளர்கள் இருப்பது கிடைத்தால் போதும் என்று விற்று விடுகிறோம்.

இது தான் பெரிய தவறு!

எதற்காக விற்றோம்  என்று அதன் பிறகு யோசித்து பார்த்தால் கூட பிடி கிடைக்காது.

அமெரிக்க வேலை வாய்ப்பு கூடினால் அவனுக்கு நல்லது...விட்டு விடுவோம்.

அதனால் FIIகள் வெளியே போகிறார்கள்...அது தற்காலிகம்..நல்ல நிதி முடிவுகள் வரும் போது மீண்டும் வருவார்கள்.

இவற்றால் நாம் முதலீடு செய்த நிறுவனங்களின் அடிப்படைகள் இந்த சூழ்நிலைகளால் மாறுகிறதா? என்பதை மட்டுமே பார்க்க வேண்டும்.

மாற்றம் இல்லை என்றால், பங்குகளை அடி விலைக்கு கிடைக்கிறது என்று வாங்கி குவிக்க வேண்டும்.

அப்படி மாறினாலும் ஒன்றிற்கு இரண்டு தடவை யோசித்து தான் விற்க வேண்டுமே தவிர, பதற்றத்தில் நீண்ட கால முதலீடுகளை விற்கவே கூடாது!


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

1 கருத்து: