திங்கள், 19 பிப்ரவரி, 2018

டாட்டா ஸ்டீலின் ப்ரீமிய விலை டீல், யாருக்கு லாபம்?

எமது கட்டண போர்ட்போலியோவில் கடந்த வருடம் முதல் அடிக்கடி பரிந்துரைக்கப்பட்ட ஒரு பங்கு Tata Steel.


டாட்டா குழுமத்தில் சந்திரசேகர் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு ஏற்பட்டுள்ள நேர்மறை மாற்றங்கள், ஸ்டீலின் தேவை கணிசமான அதிகரித்தது, அரசின் சில முடிவுகள் போன்றவற்றின் காரணமாக பரிந்துரை செய்து இருந்தோம்.இந்த காரணங்களால் கடந்த வருடம் மட்டும் 50%க்கும் மேல் Tata Steel அதிக உயர்வை சந்தித்தது.  ஆனால் இன்று பங்குசந்தையில் டாட்டா ஸ்டீல் பங்கு ஐந்து சந்தவீததிற்கும் அதிகமாக சரிந்தது.

இதற்கான காரணத்தை கொஞ்சம் விவரமாக பார்ப்போம்.

Bhushan Steel என்ற நிறுவனம்.

கிட்டதட்ட 17,000 கோடியை வங்கிகளில் கடனாக வாங்கி கொண்டு அவர்களை அலைகழித்து வருகிறது.

ஆனால் Jindal Steel, Tata Steel போன்றவற்றிற்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய ஸ்டீல் நிறுவனம் என்பதால் முதல் இரண்டு நிறுவனங்களும் பூசானை வாங்குவதற்கு முட்டிக் கொண்டு இருந்தன.

முதலில் 24,000 கோடிக்கு வாங்க யோசித்த Tata Steel அடுத்து 35,000 கோடியை தருவதாக கூறி விட்டது. அதே நேரத்தில் Jindal Steel குறைவாக 28,000 கோடியைத் தருவதாக சொன்னதால் Bhushan தற்போது டாடாவின் கையில் செல்கிறது.

உண்மையில் Bhushan நிறுவனத்தின் மதிப்பை பார்த்தால் 25,000 முதல் 30,000 கோடி அளவுக்கு தான் தேறும்.

ஆனால் கடுமையான போட்டி அவர்கள் மதிப்பை உயர்த்தி விட்டது. இதனால் Bhushan Steel பங்கு 20%க்கும் மேல் ஒரே நாளில் கூடியது.

மீதி ஐயாயிரம் கோடி அதிகமாக கொடுத்ததை டாட்டா ஸ்டீல் முதலீட்டாளர்கள் ரசிக்கவில்லை. அதனால் இன்று டாடா ஸ்டீல் பங்கு ஐந்து சதவீத அளவிற்கு வீழ்ந்து விட்டது.பொதுவாக நமது வீட்டை தொட்ட மனைகளை வாங்கும் போது கொஞ்சம் அதிகம் ப்ரீமிய விலை கொடுப்போம்.

இருக்கும் வீட்டுடன் சேர்ந்து பெரிய வீடாக கட்டலாம். இடைவெளிக்காக அதிக இடங்களை வீணாக்க வேண்டாம். மேலாண்மை செய்வது எளிது. என்று பல காரணங்கள் இந்த அதிக விலை கொடுப்பதற்கு காரணமாக இருக்கும்.

அது போல் தான், டாட்டா ஸ்டீலும்.

உள்நாட்டில் ஸ்டீல் தேவை மிக அதிகமாக அதிகரித்து வருகிறது. அதனால் 2022க்குள் தங்களது உற்பத்தியை இரண்டு மடங்காக்க திட்டமிட்டு உள்ளார்கள்.

இனி தொழிற்சாலைகளை நிறுவி இந்த இலக்கை அடைய அவ்வளவு விரைவாக அடையமுடியுமா? என்றால் கேள்விக்குறி தான்.

அதற்கு இந்த மாதிரியான பெரிய நிறுவனங்களை வாங்கி போடும் மறைமுக வழி பெரிதும் உதவும்.

அடுத்து,

ஆட்டோ மொபைல் துறையில் பயன்படுத்தப்படும் ஸ்டீல்களுக்கு 20~25% அளவுக்கு லாப மார்ஜின் கிடைக்கும். இது மற்ற துறையில் கிடைக்கும் மார்ஜினை விட மிக அதிகம்.

ஆனால் டாட்டா ஸ்டீலோ ஆட்டோ ஸ்டீல் உற்பத்தியில் வலுவானதாக இல்லை.

அதே நேரத்தில் பூசான் ஸ்டீல் ஆட்டோ துறையில் பெரிய அளவிலான சந்தையைக் கொண்டுள்ளது. வாங்குவதன் மூலம்  சந்தை விரிவாக்கம் மிக வேகமாக நடக்கும்.

இறுதியாக,

பூசான் ஸ்டீலுக்கு மதிப்பீடல் என்பது தற்போது கிடைக்கும் லாபத்தை அடிப்படையாக வைத்தே கணக்கிடப்படுகிறது.

ஆனால் தற்போது பூசான் ஸ்டீல் தன்னுடைய மொத்த திறனில் 58% அளவு மட்டும் தான் பயன்படுத்தி வருகிறது. இதற்கு போதிய அளவு கேபிடல் பணம் கையில் இல்லாததும் ஒரு காரணம்.

அதே நேரத்தில் டாட்டா ஸ்டீல் 7000 கோடி அளவு பணத்தை கேபிடலுக்காக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

அதன் பிறகு 90% முதல் 100% செயல் திறனை பெற்று விட்டால் தற்போது இழந்த 5000 கோடியை சில வருடங்களில் திரும்ப பெற்று விடலாம்.

ஆக, இந்த மாதிரியான அதிக ப்ரீமிய டீல் வேறு யார் வாங்கி இருந்தாலும் அவர்களுக்கு பெரிதளவு லாபம் இல்லை.

ஆனால் டாட்டா ஸ்டீலுக்கு நீண்ட நாள் அணுகுமுறையில் மிகப்பெரிய அளவு பலன் தரவல்லது.

எப்படி, Tata Motorsக்கு Jaguar Land Rover டீல் அதிக விலையில் வாங்கினாலும் பயன் தந்ததோ, அதே மாதிரி தான் இந்த இணைப்பும்.

அதனால் நீண்ட கால முதலீட்டாளர்கள் தொடரலாம். புதிய முதலீட்டாளர்கள் சரிவில் வாங்கலாம்.

ஆனால் குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்பதையும் கவனிக்க வேண்டும்.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக