வெள்ளி, 9 நவம்பர், 2018

தேர்தலை புறந்தள்ளி வரும் சந்தை

தற்போது இந்திய பங்குச்சந்தை அடி மட்டத்தில் இருந்து எழுந்து 10,600 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது என்பது மகிழ்வான செய்தி தான்.

ஒரு புறம் உலக காரணிகள் மிக சாதகமாக இந்தியாவிற்கு அமைந்துள்ளது.



85 டாலருக்கு சென்ற கச்சா எண்ணெய் இன்று 70$ அளவை தொட்டு விட்டது.

கச்சா எண்ணெய் 70 டாலரில் நிலை பெறும் என்பது அதிக கணிப்பாகவும் உள்ளது.

அதன் பக்க விளைவாக இந்திய ரூபாய் மதிப்பும் ஓரளவு உயர்வை கண்டு வருகிறது.

ஆனாலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளை வாங்குவது என்பது இன்னவும் நடக்கவில்லை.


தற்போது தான் நிகர அளவில் பங்குகளை விற்பது ஓரளவு நின்று உள்ளது. நேற்றும், இன்றும் பார்த்தால் 100 கோடிக்கும் குறைந்த அளவிலே நிகரமாக வாங்கி உள்ளனர். இது விற்ற வேகத்திற்கு கொஞ்சமும் பக்கத்தில் வர முடியாத நிலை தான்.

வெளியே சென்ற முதலீட்டாளர்கள் இன்னும் சந்தைக்குள் வராமால் இருப்பதற்கு முக்கிய காரணம் இந்திய தேர்தல் தான்.

அடுத்த மாதம் சில மாநிலங்களில் டிசம்பர் 11 அன்று தேர்தல் முடிவுகள் வெளிவர உள்ளது.

அதில் பல கருத்துக் கணிப்புகள் சொல்வதை பார்த்தால் ராஜஸ்தான், சட்டீஸ்கரில் காங்கிரஸ் உறுதி என்றும், மத்தியபிரதேசத்தில் இழுபறி என்றும் தான் சொல்கின்றன.

மேல் சொன்ன மாநிலங்கள் பிஜேபியின் கோட்டை என்பது கூட கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

அங்கே பிஜேபி ஜெயிக்க முடியாவிட்டால் மற்ற மாநிலங்களில் இன்னும் தொய்வாக கூட இருக்கலாம்.

இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு ஒருங்கிணைக்கும் வேகத்தை பார்த்தால் பிஜேபிக்கு 2019 பொது தேர்தலில் ஒரு கடினமான போட்டி இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

பங்குசந்தையை பொறுத்தவரை ஒரு நிலையான ஆட்சி வலுவான தலைவரின் கீழ் வர வேண்டும் என்று தான் விரும்புவார்கள்.

ஆனால் இந்த நிலை பொய்க்கும் சூழ்நிலையில் சந்தையின் சரிவுகள் என்பது மிக அதிகமாகவே இருக்கும்.

கடந்த தேர்தலில் மோடி ஜெயிப்பார் என்ற சூழ்நிலையில் ஒரு குறுகிய காலக்கட்டத்தில் பங்குச்சந்தை 20% அளவு உயர்வை கண்டது.

தற்போது அவர் ஜெயிக்க முடியாவிட்டால் அதில் பாதியாவது வீழ்ச்சி அடையும் என்று எதிர்பார்ப்பதும் நியாயம் தானே.

அதனால் தொங்கு லோக்சபா என்ற ஒன்று வருமானால் அடுத்த வருடம் தற்போது உள்ள நிலையில் இருந்து ஆயிரம் நிப்டி புள்ளிகள் குறைந்தால் 9000 முதல் 9500 புள்ளிகள் வரை கீழே செல்லவும் அதிக வாய்ப்பு உள்ளது.

அந்த நிலைக்கு செல்வது டிசம்பர் 11 முதல் கூட ஆரம்பிக்கலாம்.

சந்தை காளையை நோக்கி செல்வது போல் தான் பல செய்திகள் வருவதால் அதிக எதிர்பார்ப்பு இருக்கலாம். ஆனால் எதிர்பார்ப்பு ஏமாற்றமாகி விடக் கூடாது என்பதற்காக தான் இந்த கட்டுரை எழுத தோன்றியது.

சந்தை ஆய்வாளர்கள் தேர்தலையும் ஆய்வு செய்து ஒரு கணிப்பு கூறினால் இன்னும் நன்றாக இருக்கும்.

நீண்ட கால முதலீட்டாளர்கள் பயப்படுவதை விட இந்த ஏற்ற, இறக்கங்களில் தங்களை தயார்படுத்திக் கொள்வதும் அவசியமானது.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக