புதன், 17 ஜூலை, 2019

YES Bank முடிவுகளை எவ்வாறு அணுகுவது?

இன்று பங்குச்சந்தை முடிவிற்கு பின்னர் YES Bank நிறுவன நிதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது.


இன்றைய முடிவு மிகவும் எதிர்பார்க்கப்பட்டதாக அமைந்தது.



ஏனென்றால் இதற்கு முன்னர் சிஇஒவாக இருந்த ரானா கபூர் பண்ணிய தகிடுத்தன வேலைகள் ஏராளம்.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு வித போலி நிதி அறிக்கையே வெளிவந்தது போல.

ஒரு பக்கம் வங்கி வருடத்திற்கு 40% அளவு வளர்ச்சி அடைந்து வந்தது.


இந்த வளர்ச்சி எங்கிருந்து பெறப்பட்டது என்றால் சென்சிடிவ் துறைகளில் இருக்கும் பெரிய அளவிலான நிறுவனங்களுக்கு இஷ்டத்திற்கு வாரி விளைத்து பெறப்பட்டது.

YES வங்கியில் கடன் வாங்கி ஏப்பம் விட்டவர்கள் பட்டியல் ஜெட் ஏர்வே, DHFL, ILFS என்று நீண்டு கொண்டே சென்றது.

இதனால் இவர்களுக்கு கொடுத்த கடனுக்கு வட்டியும் வரவில்லை. அதே நேரத்தில் அசலும் முடங்கி போனது.

ஆனால் ரானா கபூர் இதை அப்படியே மறைத்து விட்டார்.

எப்படி என்றால்,

Gross NPA என்று சொல்வார்கள். கொடுத்த மொத்த கடன்களில் வாராக் கடன்களை கணக்கிடும் விகிதம்.

இது கடந்த ஆண்டு 2018 மார்ச் வரை வெறும் 1.31% என்று தான் இருந்தது.

அதாவது 214,000 லட்சம் கடன் கொடுத்து அதில் 2803 கோடி தான் வராமல் இருந்தது.

ஆனால் ரிசர்வ் வங்கி கணக்கிட்டதில் அதிக மாறுபாடு இருக்க ரானா கபூர் YES வங்கியில் இருக்கவே கூடாது என்று சொல்லி விட்டது.

அதன் பிறகு டச்சு வங்கியின் இந்திய பிரிவு தலைவர் ரவ்நீட் கில் பொறுப்பேற்றார்.

அவர் முதல் வேலை..YES வங்கியின் பேலன்ஸ் சீட்டை சுத்தம் செய்வது தான்.

கடந்த மார்ச்சில் நிதி அறிக்கையை கொடுத்த போது புதிதாக வாராக் கடன்களை கண்டுபிடித்தார்.

Gross NPA 3.22% என்று கூடியது. அதாவது வாராக் கடன்களை புதிதாக 4500 கோடி அளவு கண்டுபிடித்தார். அப்பொழுது மொத்த வாராக் கடன் 4500 + 2800 = 7300 கோடியாக உயர்ந்தது.

இது போக, 10000 கோடியை சந்தேக பட்டியலில் வைத்தார்.

இந்த காலாண்டு முடிவுகளில் இந்த பத்தாயிரம் கோடி என்ன ஆகப் போகிறது என்று ஒரு முக்கிய கேள்வி எழுந்தது.

அதில் 6800 கோடி வாராக்கடன்களாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆக, மொத்தம் 7300 + 6800 = 14100 கோடி. இதில் 1600 கோடி திருப்பி வசூளிக்கப்பட்டுள்ளதால் 14100-1600 = 12500 கோடி அளவு வாராக் கடன்கள் உள்ளது.

ஆனால் இந்த 12500 கோடியில் பத்தாயிரம் கோடியை கபூர் மறைத்து வைத்து ஏமாற்றி வந்துள்ளார்.

இந்த நம்பகத்தன்மை இழந்ததால் தான் 500 ரூபாய்க்கு வர்த்தகமாகி கொண்டிருந்த YES பங்கு இன்று 100 ரூபாய்க்கு வந்துள்ளது.

ஆனால் பல செய்திகளில் இந்த நிதி முடிவுகளை கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டுள்ளார்கள்.

அதை விட கடந்த காலாண்டுகள் ஒப்பிடுவது சரியாக இருக்கும்.

கடந்த காலாண்டில் 2000 கோடி அளவு நஷ்டம். தற்போது 100 கோடி அளவு லாபம்.

வாராக் கடன்கள் பெரும்பாலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று நம்ப முடிகிறது.

இனி வாராக் கடன்கள் அடுத்த காலாண்டுகளில் குறையும் பட்சத்தில் லாபம் கூடலாம்.

ஆனால் புதிதாக கடன் கொடுக்க வங்கியில் பணம் இல்லை. இருந்த பணம், வரவேண்டிய பணம் எல்லாம் மேலே சொன்னவர்கள் நாமம் போட்டு விட்டார்கள்.

அந்த சூழ்நிலையில் புதிதாக சந்தையில் பணத்தை திரட்ட வேண்டும்.

ஆனால் தற்போது உள்ள பங்கு மதிப்பை வைத்து திரட்ட சென்றால் சொற்ப தொகையே கிடைக்கும்.

இந்த சவால் மட்டும் சமாளிக்கப்பட்டு விட்டால் YES Bank பங்கு அதிக ரிஸ்க்குடன் கூடிய மல்டி பேக்கர் பங்காக கருதி முதலீடு செய்யலாம்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக