புதன், 8 ஜனவரி, 2014

CRR, Repo, Reverse Repo..அப்படின்னா என்ன?

இந்தக் கட்டுரையில் பாரத வங்கியின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முக்கியமான ஆயுதங்களான பண இருப்பு விகிதம், ரெபோ, தலைகீழ் ரெபோ (Reverse Repo Rate) போன்ற வட்டி விகிதங்களை பற்றி விரிவாக பகிர்கிறோம்.

இதற்கு முன் இந்த விகிதங்கள் தொடர்பான ஒரு கட்டுரை எழுதி இருந்தோம்.அந்த கட்டுரை நல்ல வரவேற்பு பெற்றது. அதனைப் படிக்காதவர்கள் இந்த இணைப்பில் படிக்கலாம்.


அதன் தொடர்ச்சியாக நண்பர்கள் கேட்டதற்கிணங்க இந்த கட்டுரையை எழுதுகிறோம்.

இரண்டு கயிறும் முக்கியம் 


பொருளாதாரத் துறையினர் மட்டுமல்லாமல் பாமரரும் ரிசர்வ் வங்கியின் இந்த விகிதங்களைப் பற்றி அறிந்து கொள்வது மிக முக்கியமானது.

ஏனென்றால் அதற்கு சில காரனங்களை சொல்லலாம்.

  • இன்று வங்கியில் கடன் வாங்காதவர்கள் மிகக் குறைவு. நமது வங்கிக் கடன் மீதான  வட்டி விகிதங்கள் மேலே சொன்ன விகிதங்களின் அடிப்படையிலே நிர்ணயிக்கப்படுகின்றன. இந்த தருணங்களில் Fixed Rate போகலாமா?, Floating Rate போகலாமா? என்ற பல கேள்விகளுக்கு இந்த விகிதங்களை அடிப்படையாக வைத்து நாம் முடிவு எடுத்துக் கொள்ளலாம்.  

  • நாம் வங்கியில் வைக்கும் நீண்ட கால முதலீட்டிற்கு கிடைக்கும் வட்டியும் இந்த விகிதங்களைப் பொறுத்தே மாறுபடுகிறது. இதே போல் நாம் முதலீடு செய்யும் பணத்தை வங்கிகள் எப்படிப் பயன்படுத்துகின்றன என்பதையும் ஒரு முதலீட்டாளனாக அறிந்து கொள்வதும் அவசியமாகிறது. 

  • கடைசியாக இந்த விகிதங்கள் மாற்றம் செய்யப்படும்போது பங்குச்சந்தையில் அதனுடைய தாக்கம் சில நாட்கள் மிக அதிகமாகக் காணப்படும். அதாவது சென்செக்ஸ் 200, 300, 500 புள்ளிகள் வரை கூடும் அல்லது குறையும். அப்படியென்றால் சிறு முதலீட்டாளர்கள் இந்த விகிதங்களைப் பற்றி அறிவதும் மிக அவசியம்.

இந்த அடிப்படைக் காரணங்களுக்காக  பாரத வங்கியின் CRR, Repo, Reverse Repo போன்ற விகிதங்களை அறிந்து கொள்வது மிக அவசியமாகிறது.

இந்த விகிதங்கள் ஒன்றும் எட்டாக் கனியாக உள்ள புரிந்து கொள்ள முடியாத விடயங்கள் அல்ல. ஆனால் இந்த விகிதங்களைத் தாங்கி நிற்கும் ஆங்கில சொற்கள் நம்மிடமிருந்து அந்நியமாக நிற்கிறது என்பதே உண்மை. அதனால் எம்மால் இயன்ற வரை தமிழில் எளிமையாகக் கூற முற்படுகிறோம்.

இந்த விகிதங்களின் ஆங்கில பதங்களுக்கு தமிழ் சொற்கள் கிடைக்குமா என்று தேடிய போது CRR தவிர மற்ற விகிதங்களுக்கு தங்கிலீஷ் சொற்களே கிடைத்தன. தமிழ் சொற்கள் கிடைக்கவில்லை.

அதனால் எழுதுகிற எமக்கும் படிக்கிற உங்களுக்கும் புரியும் வண்ணம் சில சொற்களை புரியும் வகையில் கீழே உள்ளவாறு மொழி மாற்றம் செய்கிறோம். இந்த சொற்கள் பார்த்தவுடன் புரிந்தாலே நாம் பாதி கிணறு தாண்டியது போல் தான்.

Cash Reserve Ratio(CRR) - பண இருப்பு விகிதம்
Repo Rate - வங்கி வாங்கும் விகிதம்.
Reverse Repo Rate - தலைகீழ் வங்கி வாங்கும் விகிதம்

இனி ஒவ்வொன்றாக பார்ப்போம்.

பண இருப்பு விகிதம்(CRR)


வங்கிகள் தாம் கடனாகக் கொடுக்கும் பணத்தை பொது மக்களிடம் இருந்து வைப்பு நிதியாக பெறுகிறது. இந்த நிதியை விதிகளின் படி வங்கிகளால் முழுமையாக செலவு செய்ய முடியாது.

அதாவது இந்த நிதியின் ஒரு பகுதியை வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் கொடுத்து வைத்து இருக்க வேண்டும். இந்த பகுதி விகிதமே பண இருப்பு விகிதம்(CRR) என்று அழைக்கப்படுகிறது. தோராயாமாக நான்கு சதவீத அளவு ரிசர்வ் வங்கியிடம் வைத்து இருப்பார்கள். இது அவ்வப்போது மாறுபடும்.

சரி..CRR எப்படி பண வீக்கதைக்  கட்டுப்படுத்த உதவும்?.

உதாரணத்துக்கு ரிசர்வ் வங்கி CRR விகிதத்தைக் கூட்டுகிறது என்று எடுத்துக் கொள்வோம். அதன் அர்த்தம் என்னவென்றால் வங்கிகள் தங்களது வைப்புத் தொகையை அதிகமாக ரிசர்வ் வங்கியிடம் கொடுத்து வைக்க வேண்டும். இது ஒரு சதவீதம் கூடினால் கிட்டத்தட்ட 65000 கோடி ரூபாய் வங்கிகள் மூலம் ரிசர்வ் வங்கிக்கு வந்து சேரும்.

இத்தகைய மிகப்பெரிய தொகை வெளிச்சந்தையில் புழங்காமல் தடுக்கும் போது மக்களிடம் பணபுழக்கம் குறையும். வங்கிக் கடன் கிடைப்பது கடினமாகும். அதனால் வாங்குவதைக் குறைப்பார்கள்.

இதனால் பொருட்களின் தேவையும் குறையும். தேவை குறைவதால் உற்பத்தியாளர்களும் விற்று ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் லாபத்தைக் குறைத்து தங்கள் பொருட்களின் விலையைக் குறைக்கத் தள்ளப்படுவார்கள். இது விலைவாசியைக் குறைக்கும். அதனால் பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும்.

வங்கி வாங்கும் விகிதம்(Repo Rate )


வங்கிகளும் ரிசர்வ் வங்கியிடம் தாம் கொடுத்து வைத்துள்ள பணத்தைக் கடனாக வாங்கலாம். இப்படி கடன் கொடுக்கும் பணத்துக்கு வங்கிகள் ஒரு குறிப்பிட்ட வட்டி ரிசர்வ் வங்கிக்கு செலுத்த வேண்டும். இந்த வட்டி விகிதமே வங்கி விகிதம் (Repo Rate ) என்று அழைக்கப்படுகிறது.

Repo Rate எப்படி பண வீக்கம் அல்லது வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும்?
உதாரணத்துக்கு உங்களுக்கு கொடுக்கப்படும் வீட்டுக்கடன் வட்டி இந்த வங்கி விகிதத்தையும் அடிப்படையாக வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் வங்கி விகிதம் உயர்த்தப்படும் போது வீட்டுக்கடன் வட்டி விகிதம் கூடும்.

அப்படிக் கூடினால் நாம் வீட்டுக் கடன் வாங்க யோசிப்போம். யோசித்த பிறகு வீடு வாங்க வேண்டாம் என்று முடிவு பண்றோம். இப்படிப் பல பேர் முடிவு பண்ணும் போது  ரியல் எஸ்டேட் நண்பர்களுக்கு வீடு விற்காது.

வீடு விற்காவிட்டால் விலையைக் குறைப்பார்கள். இதனால் லாபம் குறையும். இப்படியே ரியல் எஸ்டேட்டை சார்ந்து இருக்கும் கார்பெண்டர், எலக்ட்ரிசியன் என்று பலருக்கும் வருமானம் குறையும். அவர்களும் வேறு ஏதாவது பொருளை வாங்க யோசிப்பார்கள். இப்படி ஒவ்வொரு இடமாக பரவி நாட்டின் விலைவாசியைக் குறைத்து விடும். இதனால் பண வீக்கமும் கட்டுப்படுத்தப்படும்.

தலைகீழ் வங்கி வாங்கும் விகிதம் (Reverse Repo Rate)


CRR என்றால் வங்கிகள் தங்களது பகுதி பணத்தை ரிசர்வ் வங்கியிடம் கொடுத்து வைத்து இருப்பது என்று பார்த்தோம். இந்த பணத்தை வங்கிகள் எந்த வித வருமானம் இல்லாமல் கொடுத்து வைக்க முடியுமா? முடியாது

அதற்கு ரிசர்வ் வங்கி ஒரு குறிப்பிட்ட வட்டியை வங்கிகளுக்கு அளிக்கும். இந்த வட்டி விகிதம் தான் தலைகீழ் வங்கி விகிதம்(Reverse Repo Rate) என்று அழைக்கப்படுகிறது.

அதாவது வங்கிகளிடம் வாங்கும் பணத்துக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் வட்டி விகிதம்.

சரி..Reverse Repo Rate எப்படி பண வீக்கம் அல்லது வளர்ச்சியைக் பாதிக்கும்?

அதாவது CRR என்பது குறைந்தபட்சத்துக்குத் தான் வரையரைக்கப்பட்டுள்ளதே தவிர அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் ரிசர்வ் வங்கியிடம் கொடுத்து வைத்துக் கொள்ளலாம்.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி தான் அதிக அளவு இந்த பணத்துக்கு வட்டி கொடுப்பதாக சொன்னால் என்ன ஆகும்?..எல்லா வங்கிகளும் பணத்துக்கு பாதுகாப்பாகவும் அதே நேரத்தில் அதிக அளவு வட்டி கிடைக்கும் ரிசர்வ் வங்கியிடம் தம்மிடம் சேரும் முதலீட்டுப் பணத்தை அதிகமாக கொடுத்து வைக்க முயலும்.

அப்படி செய்யும் சமயத்தில் வெளியுலகில் பணப்புழக்கம் தானாகக் குறையும். பணப்புழக்கம் குறைந்தால் விலைவாசியும் தானாகவே குறையும்.


சரி..இப்படி இந்த விகிதங்களை குறைத்தே காலத்தை ஒட்டி விடலாம் என்று நினைப்பது போல் தோன்றலாம்.

ஆனால் ஒரு அடிப்படையைப் பாருங்கள்..பணவீக்கத்தை அதிக அளவு கட்டுப்படுத்தினால் வளர்ச்சி பெருமளவு பாதிக்கும். அதாவது லாபம் கிடைக்காததால் யாருமே எங்கும் முதலீடு செய்ய வர மாட்டார்கள். இதனால் நாடு அப்படியே இருக்குமே தவிர எந்த வித ஒரு முன்னேற்றமும் இருக்காது.


அதனால் பணவீக்கம், வளர்ச்சி என்று இரண்டையும் இரு கண்களாக பாவித்து ரிசர்வ் வங்கி செயல்படும்.

இப்பொழுது ரிசர்வ் வங்கியின் விகிதங்கள் மாறுபடும் போது சந்தை எப்படி செயல்படும் என்பதை ஓரளவு ஊகிக்க முடியும் என்று நினைக்கிறேன்.

இந்தக் கட்டுரை பயனுள்ளதாக இருந்தால் தங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள். தமிழில் இத்தகைய கட்டுரையை எழுத ஊக்கமளிக்க உதவும்.

 

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

16 கருத்துகள்:

  1. தெளிவான விளக்கம்....நன்றி....தொடர்ந்து இது போல் முக்கிய விசயங்களைப் பகிரவும்

    பதிலளிநீக்கு
  2. எளிதாக அறிந்து கொள்ள வகையில் விளக்கம்... நன்றி...

    தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. எளிதாக அனைவரும் புரிந்து கொள்ள முடியும் வகையில் விளக்கி இருக்கிறீர்கள்....இந்த மூன்று விகிதங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதா? மேலும் ஏதாவது ஒரு விகிதத்தை மட்டுமே ஒரு நேரத்தில் ரிசர்வ் வங்கி உபயோகித்து நிலைமையைச் சமாளிக்கிறதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூன்றும் ஒன்றுக்கொன்று நெருக்கமான தொடர்பு இல்லை. ஆனால் மூன்றும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ஒரு கருவியாக பயன்படுகின்றன.

      நீக்கு
  4. நீண்ட நாட்களாக எனக்கு இருந்த இந்த சந்தேகம் மிகவும் புரியும்படியான பதிவாக இருந்தது.தொடரட்டும் தங்களது சேவைகள்...மனமார்ந்த நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சுரேஷ்! உங்கள் கருத்துகள் உறசாகமளிக்கிறது.

      நீக்கு
  5. Supper, ippathan our periya kelvikku ans kedachirrukku,,,,,, thank u lot .....

    பதிலளிநீக்கு
  6. மிக மிக அருமையான மற்றும் எளிமயானப் பதிவு

    பதிலளிநீக்கு
  7. Super sir.......பேங்க் ரேட் பத்தி சொல்லுங்க சார்.

    பதிலளிநீக்கு