செவ்வாய், 21 ஜூன், 2016

ரகுராம் ராஜன் விலகல் எவ்வளவு பாதிக்கும்?

கண்டிப்பாக ஒரு ரிசர்வ் வங்கி கவர்னர் மாறியதற்காக இந்திய சந்தை குழப்பத்தில் இருப்பது இதுவே முதல் முறையாக இருக்கும்.


ராஜன் பதவி ஏற்ற சமயத்தில் ஒரு வித கடுமையான நெருக்கடியில் இருந்தது. மன்மோகன் அரசு ஊழல் செய்து பொருளாதராத்தை நோகடித்தாலும் போகிற போக்கில் செய்து போன நல்ல காரியம் தான் ராஜனை பதவியில் அமர்த்தியது.




ரூபாய் வீழ்ச்சி, பணவீக்கம், பொருளாதார தேக்கம் என்று பல காரணிகள் கும்மிக் கூத்தடித்த காலத்தில் தனது சாதூரியமான செயலால் தற்போது மீட்டு எடுத்ள்ளார் என்றே சொல்லலாம்.

தற்போது உலக அளவில் வேகமான ஜிடிபி வளர்ச்சி கொண்ட நாடாக இந்தியா உள்ளது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியும் கட்டுப்படுத்தப்பட்ட அளவில் உள்ளது. அதே நேரத்தில் முக்கியமாக பணவீக்கமும் கட்டுக்குள் வந்து வட்டி விகிதமும் ஒன்றே முக்கால் சதவீதமும் குறைக்கப்பட்டுள்ளது.

இதெல்லாம் ரிசர்வ் வங்கியின் கடமை தானே என்று ஒரு வாதம் வந்தாலும் அது தவிர வாராக் கடன்களை ஒழுங்குக்கு கொண்டு வந்து அதுவும் ரிசர்வ் வங்கியின் வேலை தான் என்பதையும் காட்டி உள்ளார்.

இது வரை இந்திய வங்கிகள் வாராக் கடன்களை புத்தகத்தில் கொண்டு வராமல் வங்கிகள் ஒளித்து வைத்து இருந்ததை ஒரே காலாண்டில் வெளிவந்தது நமக்கு நன்மையான காரியம் தான்.

இதனால் சந்தையில் இவர் இன்னும் தொடர்ந்து இருக்கலாம் என்று முதலீட்டாளர்கள் கருத, இவரால் பாதிக்கப்பட்ட கார்பரேட் நிறுவனங்கள் எதிர்மறையாக தங்கள் லாபியை செய்யத் துவங்கின.

இதில் சுப்ரமணிய சாமி ஏன் திடீர் வந்து நுழைந்தார் என்பது தான் புரியவில்லை. அவரைப் பொறுத்தவரை யார் எதிரிகள், நண்பர்கள் என்று இல்லை. யார் அதிகார மையத்தில் இருக்கிறாரோ அவரை ஆட்டம் காட்ட வேண்டும் என்பது தான் நோக்கமாக இருந்து வருகிறது. அதில் இந்த முறை ராஜன் சிக்கி உள்ளார்.

ஆனால் அவருடைய லாபியால் தான் ராஜன் விலகுகிறார் என்று நம்ப முடியவில்லை. சாமியைக் கண்டு பயப்படும் ஆளும் அவர் இல்லை. இதற்கு முழுக்க ஆராய்ச்சி துறைக்கு செல்ல வேண்டும் என்ற அவரது தனிப்பட்ட விருப்பமே காரணமாக இருக்கலாம்.

அதனால் அவரது தனிப்பட்ட விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து நாமும் அடுத்து சந்தையில் என்பதை பார்ப்போம்.

நீதிபதி சந்துரு எழுதிய ஒரு புத்தகத்தை படிக்க நேர்ந்தது. நாம் அவதாரங்களை நம்பியே பழக்கப்பட்டு விட்டோம். ஆனால் சமுதாய வளர்ச்சி என்பது ஒரு கூட்டு முயற்சியே என்று சொல்லி இருப்பார்.

அது போல் தான் தற்போது ராஜனை கருத வேண்டும்.

அவர் ஒரு தனிப்பட்ட மனிதன் தான். ஆனால் ஒரு அழகான பாதையை அமைத்துக் கொடுத்து சென்றுள்ளார். அதனை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்ல இந்தியாவில் திறமையான பொருளாதார வல்லுனர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.

பெரும்பாலும் ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் தான் கருத்துக்களில் வேறுபாடு வருகிறது. பிரச்சினையும் அங்கு தான் ஆரம்பிக்கிறது. சுப்பா ராவ் இருந்த போது மத்திய அரசு ஒரு பாதையில் செல்ல, ரிசர்வ் வங்கி வேறு பாதையில் சென்றது. அது இக்கட்டான நிலைக்கு அழைத்து சென்றது.

அந்த பிரச்சினை சரி செய்யப்பட்டு விட்டால் முதலீட்டாளர்கள் கவலை கொள்ளுமளவு இது ஒன்றும் பெரிய விடயமல்ல. அதே நேரத்தில் ராஜன் அவர்களின் திறமையான பணியையும் மனமார வாழ்த்துகிறோம்!


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக