வெள்ளி, 10 ஜூன், 2016

ஐடி யூனியனுக்கு அனுமதியால் கலங்கும் மென்பொருள் பங்குகள்

இந்தியாவில் எல்லா துறைகளுக்கும் தொழிலாளர் நல சங்கம் அமைத்துக் கொள்ள வழி உள்ளது. ஆனால் ஐடி பணியாளர்களுக்கும் மட்டும் அனுமதி இல்லை.


இதற்கு சில மாநில அரசுகள் அறிவு சார்ந்த பணிகளுக்கு யூனியன் தேவையில்லை என்ற கருத்து வைத்து இருப்பதும் ஒரு காரணமாக இருந்தது. ஆனாலும் சட்டப் பூர்வமாக எதுவும் இருந்ததாக தெரியவில்லை.



ஆனால் தற்போது இது நீதிமன்றத்தில் வந்த ஒரு வழக்கு மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.

அதற்கு டிசிஎஸ் நிறுவனமும் ஒரு காரணம். கடந்த ஆண்டில் பதினைந்தாயிரம் பணியாளர்களை நீக்கம் செய்ய முடிவு செய்ததாக வெளிவந்த செய்திகள் பல போராட்டங்களுக்கும் காரணமாக அமைந்தது.

அவர்களில் ஒரு பிரிவினர் கோர்ட்டிற்கு செல்ல நீதி மன்றம் மாநில அரசின் கருத்தைக் கேட்டு இருந்தது.

அதற்கு நேற்று தமிழ்நாடு அரசு மென்பொருள் பணியாளார்களும் யூனியன் அமைத்துக் கொள்ளலாம் என்று நீதி மன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.

இதனை யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள் என்று சொல்லலாம். இதனால் மென்பொருள் நிறுவனங்களின் பங்குகள் ஒரே நாளில் சரமாரியாக சரிந்தன.

இந்த முடிவும் ஒரு வகைக்கு நல்லது தான். வெளிநாடுகளில் இது போன்ற அறிவு சார்ந்த பணிகளுக்கும் யூனியன் அமைத்துக் கொள்ள தடை எதுவுமில்லை.ஆனால் இங்கு மட்டும் ஒரே நாளில் வேலையை விட்டு நீக்கும் அவலம் தொடர்ந்து வருகிறது.

இதற்கு அரசினை மட்டும் குறை சொல்வதை விட ஐடி பணியாளர்களையும் குறை செல்ல வேண்டித் தான் உள்ளது.

மற்ற துறைகளை போல் அல்லாமல் இங்கு பெரிதளவு ஒற்றுமை பணியாளர்களிடையே இருப்பதில்லை. மற்றவர் வேலை போனால் நமக்கென்ன என்ற சுயநலம் அதிகமுள்ள துறை என்றும் சொல்லலாம்.

இதனை நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வந்தன.

தற்போது ஒரு சட்ட பாதுகாப்பு கொடுப்பதன் மூலம் சில பணியாளர்கள் யூனியன் அமைக்க முயலலாம். ஆனால் லட்சத்தில் சம்பளம் வாங்கும் மற்ற பணியாளர்கள் ஒத்துழைப்பார்களா என்பது கேள்விக் குறிதான்.

இதனால் நிறுவனங்களும் இந்த முடிவை அவ்வளவு பொருட்டாக இதுவரை எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் நீண்ட கால நோக்கில் மென்பொருள் நிறுவனங்களுக்கு பெரிய தலைவலி கொடுக்கும் வகையில் இந்த யூனியன்கள் மாறலாம்.

இதனையும் தாண்டி பார்த்தால் ஐடி நிறுவனங்களின் வியாபர வளர்ச்சி பெரிதளவு இல்லை. செலவை ஆட்டோமேசன் மூலம் குறைத்து தான் லாபத்தைக் காட்ட முனைகிறார்கள்.

இது ஒன்றும் நல்ல அறிகுறி போல் தெரியாததால் ஐடி நிறுவன பங்குகளின் சதவீதத்தை போர்ட்போலியோவில் குறைவாக வைத்துக் கொள்வது நல்லது.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக