வெள்ளி, 24 ஜூன், 2016

யூரோ யூனியனில் பிரிட்டன் விலகல், பங்குசந்தையில் என்ன செய்வது?

இரண்டாம் உலக போரே ஐரோப்பிய நாடுகளின் நாடு பிடிக்கும் கொள்கையால் தான் நடந்தது. ஆனால் அதனால் ஏற்பட்ட சேதாரங்களை பார்த்த பிறகு தங்களுக்குள் ஒன்றாக இருக்க வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்டது தான் ஐரோப்பிய யூனியன்.


இந்த யூனியன் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிக்கரமாக சென்று வருகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் யூரோ நாணயம் ஒன்றும் பொதுவாக உருவாக்கப்பட்டு அமெரிக்கா டாலருக்கும் கடுமையான போட்டியைக் கொடுத்தது.



ஆனால் எப்பொழுதுமே தனி ஆவர்த்தனம் செய்ய விரும்பும் பிரிட்டன் மட்டும் இந்த நாணய இணைப்பில் கொள்ளவில்லை. தனது பவுண்டை தொடர்ந்து வந்தது. ஆனால் யூரோ யூனியனினுக்கு தேவையான நிதி உதவியை செய்து வந்தது.

அதே நேரத்தில் ஐரோப்பிய யூனியனின் எல்கை இல்லாமை என்ற கொள்கை பிரிட்டினில் பல விளைவுகளை ஏற்படுத்தியது. மற்ற ஐரோப்பிய நாடுகளில் உள்ளவர்கள் லண்டனை விரும்பி குடியேற முனைந்தார்கள். இது பிரிட்டனின் சொந்த குடிமக்களுக்கு வேலையில்லாத திண்டாட்டத்தை ஏற்படுத்தியது. இது தான் தற்போதைய விலகலுக்கு முக்கிய காரணம் என்றும் சொல்லலாம்.

கொஞ்சம் கொஞ்சமாக புகைந்து வந்த புகைச்சல் கடந்த பிரிட்டன் தேர்தலில் அதிகமானதால் பிரிட்டன் பிரதமர் கேமரூன் இது தொடர்பாக ஒரு பொது வாக்கெடுப்பு நடத்துவதாக உறுதி அளித்தார். அது தான் தற்போது நடந்துள்ளது.

தற்போது நடந்த வாக்கெடுப்பில் 51% பேர் விலக சொல்லியும், 49% பேர் தொடர விரும்புவதாகவும் வாக்களித்துள்ளார்கள். இதனால் பிரிட்டன் விலகுவது உறுதியாகி விட்டது.

இது தான் சந்தையில் எதிர் விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. இன்று மட்டும் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளை இழந்துள்ளது.

இதனுடன் இவ்வளவு தூரம் சரிய வேண்டியது அவசியமா என்ற கேள்வியும் கூட வருகிறது.

இந்தியாவை பொறுத்தவரை பிரிட்டன் ஆண்ட நாடு என்பதால் வர்த்தக தொடர்புகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. அதில் ஒன்று தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் பங்கு மட்டும் இன்று 15% சரிந்துள்ளது. இதே போல் பல நிறுவனங்கள் உள்ளன. அந்த நிறுவனங்களுக்கு அதிக பாதிப்பை தரும் என்பதும் உண்மையே.

அடுத்து, நமது பல ஐடி நிறுவனங்கள் பிரிட்டனை சார்ந்து உள்ளன. ஹச்சிஎல், டெக் மஹிந்திரா போன்ற நிறுவனங்கள் 13% அளவு வியாபாரத்தை பிரிட்டன் மூலம் பெற்று வருகின்ற்ன. இந்த வியாபாரம் முழுமையாக போவதற்கு வாய்ப்பு இல்லை.

ஆனால் பிரிட்டனின் பவுண்ட் மதிப்பு இனி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நாணய மாற்று விகிதத்தில் தான் இந்த நிறுவனங்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளது. இதே போல் யூரோ நாணயத்தின் குறையும் சூழ்நிலையில் ஐரோப்பிய நாடுகளை சார்ந்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த நிலை கார் நிறுனங்கள், வாகன உதிரி பாகங்கள், சில மருந்து நிறுவனங்களுக்கு போன்றவற்றிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

ஆனால் மற்ற நிறுவனங்கள் தப்புவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனைப் பார்த்து முதலீடு செய்தால் தற்போதைய ஆயிரம் புள்ளிகள் சரிவு என்பது இந்திய பங்குசந்தையில் வாங்குவதற்கான அருமையான வாய்ப்பே என்று சொல்லலாம்.

இன்னொரு எதிர்மறை விடயம் என்னவென்றால், பிரிட்டனை போன்று மற்ற நாடுகளும் ஒவ்வொன்றாக கழண்டு விடுமோ என்ற அச்சமும் வருகிறது. ஆனால் மற்ற நாடுகள் யூரோ நாணயத்தை மட்டுமே பயன்படுத்தி வருவதால் அவ்வளவு சீக்கிரம் வெளியே வராது என்று நம்பலாம். அதே போல் பிரிட்டன் அளவு தனித்து இயங்கும் தைரியம் ஜெர்மனி, பிரான்ஸ் தவிர மற்ற நாடுகளுக்கு இல்லை.

அவ்வளவு தூரம் எதிர்காலத்தை கணிக்கும் சக்தி மனிதனுக்கு இல்லாததால் அதனை எல்லாம் இப்பொழுதே குழப்ப வேண்டிய அவசியமும் இல்லை என்பது எமது தனிப்பட்ட கருத்து.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக