புதன், 22 ஜூன், 2016

ஸ்டேட் பேங்க் வங்கிகள் இணைப்பு யாருக்கு பலனளிக்கும்?

ஸ்டேட் பேங்க் என்ற பெயரில் பரவலாக இயங்கி வரும் வங்கிகள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என்ற பெயரில் இணைக்கப்பட உள்ளதாக மூன்று நாட்கள் முன்பு அறிவிப்பு வெளியானது.


இந்த அறிவிப்பு வெளியான பிறகு பார்த்தால் இணைப்பின் கீழ் வரும் ஒவ்வொரு வங்கியின் பங்குகளும் 30% முதல் 60% அளவு வரை உயர்ந்து விட்டன.



இதில் எது எதனால் பயன் பெற வாய்ப்பு உள்ளது என்பதையும் கொஞ்சம் விவரமாக பார்ப்போம்.

இணைப்பின் பிறகு மொத்த மதிப்பில் பார்த்தால் முந்தைய எஸ்பிஐ வங்கி ஐந்தில் நான்கு பாகத்தையும், மற்ற வங்கிகள் அனைத்தும் சேர்ந்து மீதி ஒரு பாகத்தை கொண்டிருக்கும்.

இவ்வாறு 20% மதிப்பு எஸ்பிஐ வங்கியின் மதிப்பில் அதிகமாவதால் உலக அளவில் 45வது பெரிய நிறுவனம் என்ற பெருமையை பெறும்

இதனால் உலக அளவில் எஸ்பிஐ வங்கியின் ரீச் அதிகமாக வாய்ப்பு உள்ளது என்பது எஸ்பிஐ வங்கிக்கு சாதகமான ஒன்று.

அதே நேரத்தில் எஸ்பிஐ வங்கியின் பணியாளர்களுக்கு பென்ஷன், பணிக்கொடை, பிஎப் என்று பல சலுகைகள் உள்ளன. ஆனால் இணைக்கப்படும் மற்ற ஐந்து வங்கிகளில் இத்தகைய சலுகைகள் இருப்பதில்லை. இதனால் புதிதாக வரும் பணியாளர்களுக்கும் இந்த சலுகைகள் கொடுக்க வேண்டி வரும். இது மேலும் 3000 கோடி ரூபாய் செலவை ஏற்படுத்தும் என்பது எஸ்பிஐக்கு ஒரு எதிர்மறையான விடயம்.

அடுத்து, வாராக்கடன்கள் என்று பார்க்கும் போது சில வங்கிகள் எஸ்பிஐ வங்கியை விட நல்ல நிலையிலும், மற்றவை மோசமான நிலையிலும் இருக்கின்றன. அதனால் எஸ்பிஐ வங்கிக்கு இதனால் பாதகம் ஏற்படவில்லை. அதே நேரத்தில் நல்ல நிலையில் வைத்துள்ள மற்ற துணை வங்கிகள் எதிர்மறை நிலையை பெறுகின்றன. இதர மற்றவைகளுக்கு இந்த இணைப்பு என்பது கொண்டாட்டம் தான்.



மைசூர், பாட்டியாலா வங்கிகளின் பங்குகளை வைத்து இருப்பவர்களுக்கு இந்த இணைப்பு மிக அதிக அளவில் பலனைத் தரும். மற்ற வங்கிகளுக்கு WIN-WIN என்ற அடிப்படையில் லாபமாக இருக்கும்.

இந்த ஆறு வங்கிகள் இணைக்கப்படும் போது பணியாளர்கள், வங்கி கட்டமைப்புகள் போன்றவை பகிர்ந்து பயன்படுத்தலாம் என்பதால் வங்கி செலவு விகிதம் குறைந்து லாபம் ஒரு சதவீதம் வரை கூட வாய்ப்பு உள்ளது. இது நீண்ட கால அடிப்படையில் இந்த வங்கிகளுக்கு பலனளிக்கும் விடயம்.

ஆனால் இவை அனைத்தும் அரசு வங்கிகள் என்பதால் பணியாளர்களின் ஸ்ட்ரைக் போன்றவற்றை தாண்டி தான் இந்த இணைப்பு முழுமையாக வெற்றி பெற வேண்டி உள்ளது. அதனால் குறுகிய காலத்தில் பார்த்தால் பங்குதாரர்களுக்கு பெரிய அளவில் பலனைத் தர வாய்ப்புகள் இல்லை.

சில சமயங்களில் சன் பார்மா மருந்து நிறுவனங்கள் இணைப்பு போல் அடுத்த சில காலாண்டுகளுக்கு இணைப்பு செலவு அதிகமாகி, லாபங்கள் கூட பதம் பார்க்கப்படலாம். ஆனால் நீண்ட கால நோக்கில் மலிவாக இருக்கும் இந்த பங்குகள் நல்ல பலனைத் தரும்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக