வியாழன், 18 மே, 2017

சத்யம் வழியில் யெஸ் வங்கி, தளரும் நம்பிக்கை?

ஒன்பது வருடங்களுக்கு முன்பு ராமலிங்க ராஜூ செய்த தவறால் சத்யம் நிறுவனமே இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது.


நிதி அறிக்கையில் தொடர்ந்து முரண்பட்ட தகவல்களை கொடுத்து போட்டி நிறுவனங்களை விட அதிக வளர்ச்சி இருப்பதாக காட்டிக் கொண்டார்கள்.

மேலும் விவரங்களுக்கு பார்க்க:
இந்திய ஐடி நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை குறைத்த சத்யம் ஊழல்

அதே போன்று தவறை தான் தற்போது யெஸ் வங்கி செய்து உள்ளது.கடந்த இரு வருடங்களுக்கு முன்பு நாமும் யெஸ் வங்கியை எமது போர்ட்போலியோ கட்டண சேவைகளில் பரிந்துரை செய்து தான் வந்தோம்.

இந்த இரு வருடங்களில் இரண்டு மடங்கிற்கும் அதிகமாக லாபம் கொடுத்து விட்டது.

இதற்கு யெஸ் வங்கி பெரிய அளவில் கிளை விரிவாக்கம் செய்ததும், புதிய டிஜிட்டல் முறைகளை பயன்படுத்தி செலவுகளை குறைத்ததும் ஒரு முக்கிய காரணம்.

ஆனால் கடந்த சில நாட்கள் முன்பு ரிசர்வ் வங்கி கொடுத்த அறிக்கை யெஸ் வங்கி மீதான நம்பிக்கையை தளர்த்து விட்டது என்று சொல்லலாம்.

கடந்த நான்கு காலாண்டுகளாக யெஸ் வங்கி NPA என்று சொல்லப்படும் வாராக் கடனை தவறாக காட்டி வந்துள்ளது என்பது தான் அந்த அறிக்கை.

அதாவது நிகர வாராக் கடனை யெஸ் வங்கி 750 கோடி ரூபாய் அளவு காட்டி வந்தது. ஆனால் ரிசர்வ் வங்கி அறிக்கை படி, 4930 கோடி ரூபாய் அளவு வாராக் கடன் இருப்பதாக சொல்லி உள்ளார்கள்.

அதாவது நிகர வாராக் கடன் 0.76% என்பதில் இருந்து ஐந்து சதவீதத்திற்கும் மேல் இருப்பது தெரிய வந்தது முதலீட்டாளர்களுக்கு ஆச்சர்யம் தான்.

இதனால் யெஸ் வங்கியின் பங்கு கடந்த சில ஒரு வாரத்தில் பத்து சதவீதிற்கும் மேல் சரிந்து விட்டது.

இதற்கு யெஸ் வங்கி QIP என்று சொல்லப்படும் நிதி முதலீட்டாளர்களிடம் இருந்து 5000 கோடி அளவு நிதி திரட்ட முயன்றதும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.

பங்கு விலைகளை செயற்கையாக கூட்டுவதன் மூலம் அதிக அளவு நிதியை முதலீட்டாளர்களிடம் திரட்டலாம் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

தற்போது பல நிதி ஆலோசகர்கள் இந்த பங்கு குறையும் போது வாங்கி போடலாம் என்று சொல்கிறார்கள்.

ஆனால் ஒரு பெரிய பொய்யை தவறாக ஒரு வருடமாக செய்து விட்டார்கள். அதனை மறைக்க இன்னும் பல பொய்கள் சொல்ல வேண்டி இருக்கலாம்.

அதன் விளைவு வரும் நிதி அறிக்கைகளில் தெரிய வாய்ப்பு உள்ளது.

ஒரு முதலீட்டாளர்களாக நமக்கு நிறுவனத்தின் வெளிப்படைத் தன்மை என்பது மிகவும் முக்கியம். அதில் பங்கம் வரும் போது அம்பானியாக இருந்தாலும் வெளியேறுவது தான் நல்லது.

வாரன் பப்பெட் சொன்னது போல் ஒரு நல்ல நிறுவனம் தவறான மேலாண்மையின் கீழ் செல்வதென்றால் அது முதலீட்டிற்கு ஏற்றதல்ல.

தொடர்பான பதிவுகள்:
இந்திய ஐடி நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை குறைத்த சத்யம் ஊழல்


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக