செவ்வாய், 16 மே, 2017

PSP Projects ஐபிஒவை வாங்கலாமா?

இன்று (17-05-2017) முதல் PSP Projects நிறுவனத்தின் ஐபிஒ வெளியிடப்பட இருக்கிறது.


அண்மைய காலங்களில் ஐபிஒ என்றாலே ஒரே நாளில் கணிசமான லாபம் பெறும் சூழ்நிலை அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் PSP ஐபிஒவையும் வாங்கலாமா? என்பது பற்றி பார்ப்போம்.




ப்ரஹலத்பாய் படேல் என்ற சிவில் எஞ்சினியர் ஆரம்பித்த நிறுவனம் தான் தற்போது 450 கோடி ரூபாய் அளவு வருமானம் பெறுமளவு வளர்ந்துள்ளது.

PSP நிறுவனத்தின் பெரும்பாலான ப்ராஜெக்ட்கள் மருத்துவமனை கட்டுமான பணிகளை அடிப்படையாக கொண்டவை. அதிலும் குஜராத் மாநிலத்தில் தான் அதிக அளவில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

2013ம் ஆண்டில் 260 கோடி ரூபாய் அளவு வர்த்தகம் புரிந்து 12 கோடி ரூபாய் லாபம் பெற்ற இந்த நிறுவனம் கடந்த நிதி ஆண்டில் 467 கோடி ரூபாய் அளவு வருமானம் பெற்று 25 கோடி நிகர லாபத்தை பெற்றுள்ளது.

அந்த வகையில் வளர்ச்சி என்பது நல்ல வளர்ச்சி தான்.

தற்போது ஒரு பங்கின் விலையை 205 முதல் 210 ரூபாய் வரை நிர்ணயித்துள்ளார்கள். அதில் அதிக பட்ச விலையில் இருந்து பார்த்தால் P/E மதிப்பானது 27க்கு அருகில் வருகிறது. P/B மதிப்பானது 7க்கும் மேல் வருகிறது.

அப்படி பார்க்கும் போது நிர்ணயிக்கப்பட்ட பங்கு விலை மதிப்பீடலில் மலிவாக இல்லை.

இது போக, நிறுவனத்தின் வளர்ச்சி என்பதும் நிலையானதாக இல்லை. ஒவ்வொரு நிதி ஆண்டிலும் ஏற்ற, இறக்கங்கள் அதிகமாக உள்ளன.

குஜராத் தவிர மற்ற மாநிலங்களில் அதிக போட்டியில் இருப்பதால் லாப மார்ஜின் என்பது குறைவாகவே உள்ளது.

இது தவிர, ஒரே குடும்பத்தால் நிர்வகிக்கப்படும் இந்த நிறுவனம் அந்த குடும்பத்தாரின் நிலம் மற்றும் கட்டிடடங்களுக்கு அதிக அளவில் வாடகை மற்றும் குத்தகை பணம் கொடுத்து வருகிறது.

இதே போல், இந்த நிறுவனம் தமது மற்ற துணை நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன்கள் வழங்கி உள்ளதும் ஒரு எதிர்மறையான விடயம்.

இவ்வாறு மொத்தமாக பார்க்கும் போது இந்த ஐபிஒவை தவிர்ப்பதே நல்லது.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக