திங்கள், 23 அக்டோபர், 2017

ஐபிஒ மோகத்தை சாதகமாக பயன்படுத்தும் நிறுவனங்கள்

இந்திய பங்குச்சந்தை வரலாற்றிலே இந்த வருடம் தான் அதிக அளவில் நிறுவனங்கள் மிக அதிக அளவு நிதியை திரட்டி உள்ளன.


அதில் சில ஐபிஒக்கள் நல்ல ரிடர்ன் கொடுக்க, பாதிக்கும் மேற்பட்ட ஐபிஒக்கள் லிஸ்ட் ஆன விலையிலே வர்த்தகமாகி வருகின்றன.



பங்கு விலை மேலே உயரவில்லை என்பதற்காக அந்த நிறுவனம் நல்ல நிறுவனம் இல்லை என்று சொல்லி விட முடியாதி,

ஆனால் அவர்கள் ஒரு பங்கிற்கான விலை என்பது மிக அதிகம் என்பதை கவனிக்க வேண்டும்.

அவர்கள் சும்மா பங்கிற்கு இவ்வளவு விலை வைக்கிறார்கள் என்று சொல்லி விட முடியாது.


பிக்ஸ்ட் டெபாசிட் வட்டி குறைவு காரணமாக இந்த வருடத்தில் மிக அதிகமாக நம்மை போன்ற சில்லறை வர்த்தகர்கள் பங்குச்சந்தைக்குள் நுழைந்து உள்ளார்கள்.

அவர்களுக்கு பங்குச்சந்தையில் இருக்கும் 2000க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற குழப்பம் இருக்கவே செய்கிறது.

அந்த நிலையில் அவர்களிடம் புதிதாக வரும் எல்லா ஐபிஒவும் நல்ல லாபம் கொடுக்கும் என்ற குருட்டுத் தனமான நம்பிக்கை புரோக்கரேஜ் நிறுவனங்களால் விதைக்கப்படுகிறது.

இந்த நம்பிக்கையை தான் ஐபிஒ மூலம் வெளிவரும் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொண்டு பங்கு விலையை அதிக பட்சமாக நிர்ணயித்து விடுகின்றன.

அதிலும் காளையின் பிடியில் சந்தை இருக்கும் போது இதனை உண்மை என்றே நம்பும் சூழ்நிலையும் வந்து விடுகிறது.

பொதுவாக ஐபிஒ பங்கு விலை ஏறாத நிறுவனங்களை பார்த்தால் ரீடைல் பிரிவு விண்ணப்பங்கள் அதிகமாகவும், மற்ற நிதி நிறுவன பிரிவு விண்ணப்பங்கள் குறைவாகவும் வந்து இருப்பதைக் காண முடியும்.

ரீடைல் பிரிவு முதலீட்டாளர்கள் பங்கு சந்தைக்கு வந்த அன்றே விற்று லாபத்தை பார்க்க முற்படுவார்கள். அதே நேரத்தில் மற்ற நிதி நிறுவன முதலீட்டாளர்கள் ஆய்ந்து நீண்ட கால முதலீட்டிற்காக முதலீடு செய்வார்கள். அதனால் உடனே விற்க மாட்டார்கள்.

ஆக, இவர்களில் ரீடைல் பகுதியில் டிமேண்ட் அதிகமாக இருந்து, மற்ற DII, FII பிரிவில் தேவை குறைவாக இருந்தால் விற்பவர்கள் அதிகமாக இருப்பார்கள்.

அந்த நேரத்தில் வாங்குபவர்கள் குறைவாக இருக்கும் போது பங்கின் விலையும் குறைய ஆரம்பித்து விடும்.

இது தான் அண்மையில் ஐபிஒவில் விலை ஏறாத பங்குகளில் நடந்து வருகிறது.

அதனால் ஐபிஒ பங்குகளுக்கு விண்ணப்பிக்கும் போது P/E, P/B மதிப்புகளுடன், அதே துறை சார்ந்த பங்குகள் ஏற்கனவே சந்தையில் எவ்வளவு மதிப்பில் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது என்பதையும் பார்த்து விண்ணப்பிக்க வேண்டும்.

ஐபிஒவில் வெளுத்ததெல்லாம் பாலல்ல என்பதை உணர வேண்டிய தருணம் இது!


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக