செவ்வாய், 24 அக்டோபர், 2017

அருண் ஜெட்லியின் பல லட்சம் கோடி அதிரடி அறிவிப்பு,யார் பலன் பெறுவது?

இன்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஒரு அவசர பத்திரிக்கையாளர் சந்திப்பைக் கூட்டினார்.

அதனால் டெல்லி பரபரப்பாகவே இருந்தது.
டிமானிட்டிசேசன், GST போன்றவற்றால் ஏற்பட்ட அலைக் கழிப்பால் பொது மக்கள் மத்தியில் ஒரு வித அதிருப்தி இருந்தது.

அதனால் அத்தகைய நடவடிக்கைகள் எதுவும் இருக்காது என்று உறுதியாக நம்பப்பட்டது.

இது போக, குஜராத் தேர்தல் கூட்டங்களில் மோடி அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுப்பப்பட்டது.

நீண்ட நாள் குஜராத்தில் பிஜேபி ஆட்சி செய்தது காரணமாக மாற்றம் விரும்பவும் வாய்ப்பு உள்ளது.

உபியில் பிஜேபிக்கு வாழ்வு கிடைத்தது என்றால், மோடியின் சொந்த மாநிலத்தில் வீழ்ச்சி ஆரம்பித்து விடக் கூடாது என்பதில் பிஜேபி கவனமாக உள்ளது.

இந்த நிலையில் தான் இன்று அருண் ஜெட்லி அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஏழு லட்சம் கோடிக்கு பல கட்டுமான திட்டங்களை அறிவித்து உள்ளார்.

இதன் பெரும்பகுதி நெடுஞ்சாலை,ரயில்வே போன்றவற்றில் முதலீடு செய்யப்பட உள்ளது.

இதனால் நாளைய பங்குச்சந்தை தினத்தில் L&T போன்ற கட்டுமான பங்குகள் கணிசமாக உயர வாய்ப்பு உள்ளது.

அடுத்து, அரசு வங்கிகளில் மட்டும் ஐந்து லட்சம் கோடிக்கு வாராக் கடன்கள் உள்ளன.

இந்த கடன்கள் வாராமலே இருப்பதால் வங்கிகள் புதிதாக கடன் கொடுப்பதற்கு திணறி வருகின்றன.

இவை கடன் கொடுக்கா விட்டால் நிறுவனங்கள் தொழில்களை விரிவாக்குவது கடினமாக உள்ளது.

இதனால் தொழில் துறையில் புதிய முதலீடுகள் வராமல் இருப்பதை வைத்தே ஓட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் அரசு மூன்று லட்சம் கோடி அளவு பொதுத் துறை வங்கிகளுக்கு நிதி திரட்ட உதவுவதாக கூறி உள்ளது.

இதனால் கடுமையான நிதி சிக்கலில் இருக்கும் IOB, Dena Bank போன்றவை அதிக அளவு பலன் பெறும்.

இந்த திட்ட அறிவிப்புகளால் 32 கோடி மனித தின வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார சுணக்கங்கள் ஏற்படும் போது அரசு தான் முதலில் செலவழிக்க ஆரம்பிக்க வேண்டும். அதன் தொடர்ச்சியாகத் தான் நேரடி, மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாகி மக்கள் செலவழிக்க ஆரம்பிப்பார்கள்.

அந்த வகையில் அரசியல் இந்த அறிவிப்புகளில் இருந்தாலும், பங்குச்சந்தையை பொறுத்தவரை ஒரு உற்சாக டானிக் தான்..


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக