திங்கள், 9 அக்டோபர், 2017

திசை அறியாமல் தடுமாறும் சந்தை

கடந்த ஒரு வாரமாக சில அலுவல் பளு காரணமாக பதிவுகளை எழுத முடியவில்லை.


அதற்கிடையே நண்பர்களிடம் இருந்து பல கேள்விகள் வந்து இருந்தன.

அதில் சந்தை சரிகிறது. என்ன செய்வது? என்பது தொடர்பானது தான் அதிகமாக இருந்தது.தனிப்பட்ட முறையில்  நீண்ட கால பங்கு முதலீட்டில் ஈடுபடுவதால் சந்தையின் ஏற்ற, இறக்கங்களில் அதிக கவனம் கொள்வதில்லை.

அதனால் இறக்கம் என்பது வாங்குவதற்கானது, ஏற்றங்கள் சமயத்தில் தேவை இருந்தால் மட்டுமே விற்போம். அல்லது ஒரு நிறுவனம் தொடர்ச்சியாக நான்கு காலாண்டுகள் மோசமான நிதி முடிவுகளை கொடுத்தால் விற்போம்.

இந்த எளிமையான கொள்கை உண்மையில் பதற்றத்தில் ஏற்படும் பிபியை பெருமளவு குறைக்க உதவுகிறது.

இது நமக்கு முன்னால் வெற்றி பெற்ற  முன்னோர்கள் கற்பித்த பாடம் தான்.

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா , பப்பெட் போன்ற பங்குச்சந்தையில் கரை கண்டு வெற்றி பெற்றவர்கள் தினசரி  ஒரு முறை தான் பங்கு விலைகளை பார்ப்பார்களாம்.

ஆனால் பங்குச்சந்தையை பொறுத்தவரை நாம் சும்மாக இருந்தாலும் பங்குச்சந்தை அனாலிஸ்ட் என்று வருபவர்கள் சும்மா இருக்க விடுவதில்லை.

இவர்கள் பங்குச்சந்தை வர்த்தகத்திற்கு சொல்கிறார்களா? அல்லது முதலீட்டிற்கு சொல்கிறார்களா? என்ற தெளிவு இல்லாமலே சில அறிவுரைகள் வருவது தான் இந்த குழப்பத்திற்கு காரணம் என்று கூட சொல்லலாம்.

அடுத்து,

தற்போதைய பங்குச்சந்தை நிலவரத்திற்கு வருவோம்.

கடந்த கட்டுரையில் பங்குச்சந்தையில் தற்போதைய சரிவிற்கு காரணம் என்பதை விளக்கமாக எழுதி இருந்தோம். முடிவில் இது தற்காலிகம் தான் என்றும் முடித்து இருந்தோம்.

அது இனி வரப்போகும் சரிவுகளுக்கும் சாலப் பொருந்தும் என்று கூட எடுத்துக் கொள்ளலாம்.

நமது ஹீரோ கிம் ஜாங் அடுத்த ராக்கெட் அமெரிக்காவிற்கு தான் என்று ரஷ்ய எம்பிக்களை கூட்டி வைத்து  கணக்கு சூத்திரங்களை வைத்துக் காட்டி உள்ளார்.

ஆனால் அமெரிக்காவிற்கும் வட கொரியாவிற்கும் இடையே சீனா வழியாக ரகசியமாக சில பேச்சுக்கள் சென்று கொண்டு இருக்கின்றன என்பது அமெரிக்க வெளியுறவு துறை செயலரின் சீன பயணத்திலே அறிந்து கொள்ளலாம்.

இது போக, கொரியாவில் கடுமையான குளிர் காலம் வேறு ஆரம்பிக்க உள்ளது. இந்த நேரத்தில் போர் என்பதை இரு நாடுகள் கூட தவிர்க்க வாய்ப்பு உள்ளது.

ஆக, வாய் ஜாலத்திலே சண்டை போட்டுக் கொண்டால் நமக்கும் நல்லது கூட.

அடுத்து,

இந்திய சந்தையில் FII என்று சொல்லப்படும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியே செல்கிறார்கள் என்பது ஒரு பதற்றமாகவே பார்க்கப்படுகிறது.

FIIயை பொறுத்தவரை நீண்ட கால முதலீட்டாளர்கள் இல்லை என்று சொல்லலாம். எங்கு லாபம் கிடைக்கிறதோ அங்கு செல்வார்கள். அவர்களுக்கு இருக்கும் வாய்ப்புகள் பல நாடுகளில் உள்ளன.

இந்திய சந்தையை பொறுத்தவரை மூன்று ஆண்டுகளில் 16,000 சென்செக்ஸ் புள்ளிகளில் இருந்து தற்போது 32,000 புள்ளிகளை வந்து சேர்ந்துள்ளது.

இதனை தற்போது நிதி முடிவுகளை தரும் நிறுவனங்களின் லாபத்தில் பார்த்தால் P/E என்பது 10~20% அதிக மதிப்பு உடையதாக உள்ளது. இந்த அதிகபட்ச மதிப்பு தான் அவர்களை வெளியே செல்ல தூண்டுகிறது.

ஆனால் இந்த வருடம் முழுவதும் GST, Demontization என்று நிறுவனங்கள் பிஸியாக இருந்து விட்டன. அந்த சூழ்நிலையில் வியாபாரத்தில் கவனம் செலுத்த முடியாதது கூட இந்த வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கலாம்.

ஆனால் இந்த ஒரு முறை நிகழ்வுகள் என்பது நிரந்தரம் இல்லை. அடுத்த வருடத்தில் இந்த 10~20% உச்ச மதிப்பு சரி செய்யப்பட்டு விடும் என்றே நினைக்கிறோம்.

முடிவாக,

இடையில் ஒரு புள்ளி விவரத்தை பார்க்க நேரிட்டது. பங்குசந்தையில் ஒரு வருடத்தில் செய்யும் முதலீடு நஷ்டமடையும் நிகழ்தகவு 17% என்பதாகும். அதே நேரத்தில் 10 வருடங்கள் என்று பார்த்தால் அது 0% ஆகும்.

அதாவது நீண்ட கால முதலீட்டில் நஷ்டமடையும் வாய்ப்புகள் என்பது மிகக் குறைவே.

அதனால் கவலையின்றி முதலீட்டினை தொடர்க!


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக