புதன், 20 டிசம்பர், 2017

வங்கியில் போடும் பணத்திற்கு எவ்வளவு உத்தரவாதம்?

வங்கி வைப்பு திட்டங்கள் தொடர்பாக அரசு திட்டங்கள் புதிய அணுகுமுறையைக் கொண்டு வரவுள்ளது. இதனால் வைப்பு நிதி பற்றி தற்போது பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.


பல நண்பர்களிடம் இருந்து இது தொடர்பாக எழுதுமாறு மின் அஞ்சல்கள் வந்தன. அவ்வாறு வராவிட்டாலும் கூட இது தொடர்பாக எழுதுவது என்பது எமது கடமையே. அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த விடயம்.



பணமாக வைத்து இருப்பது என்றால் இந்தியர்கள் அதிகம் விரும்புவது Fixed Deposit என்று சொல்லப்படும் வைப்பு நிதிகள் தான்.

ஒரு பக்கம் வட்டி விகிதங்கள் குறைந்தாலும், இன்னும் பலர் நம்பிக்கையுடன் வைத்து இருப்பது இங்கே தான்.

அதற்கு காரணம் இந்திராகாந்தி வங்கிகளை நாட்டுடமையாக்கிய பிறகு மக்களுக்கு வங்கிகள் மீது ஏற்பட்ட ஒரு அபரிமிதமான நம்பிக்கை என்று கூட சொல்லலாம்.


அப்பொழுது தேசியமயமாக்கப்பட்ட அரசு வங்கிகள் மட்டுமே இருந்ததால் மத்திய அரசு மக்களின் முதலீடுகளுக்கு மறைமுகமாக ஒரு வித உத்தரவாதம் கொடுத்தது.

இதனை மறைமுகம் என்று சொல்லக் காரணம். நாம் போடும் எந்த முதலீடுகளுக்கும் வங்கி விதிகள் படி ஒரு லட்ச ரூபாய் தான் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அதாவது ஒருவர் 1 லட்ச ரூபாய் வைத்து இருந்தாலும் ஒரு லட்ச ரூபாய் தான் உத்தரவாதம். 10 லட்ச ரூபாய் வைத்து இருந்தாலும் ஒரு லட்ச ரூபாய் தான் உத்தரவாதம். இந்த தொகை 1993க்கு முன்னாள் வெறும் 1500 ரூபாய் தான் இருந்தது என்பதையும் நினைவில் வைக்க.

ஆக, 10 லட்ச ரூபாய் முதலீடு செய்பவர் வங்கி திவாலானால் 1 லட்ச ரூபாய் தான் திரும்ப பெறுவார். மீதி தொகைக்கு திவாலான வங்கியின் சொத்துக்களை பிரிக்கும் போது எவ்வளவு மீதி வருகிறதோ அந்த  விகிதத்தில் பிரித்து கொடுக்கப்படும்.

ஆனால் தங்களின் இந்த பலமற்ற தன்மை வெளியில் பெரிய அளவில் தெரியாமல் இருப்பதற்காக இது வரை ரிசர்வ் வங்கியோ, மத்திய அரசோ எந்த வங்கியையும் வீழ வைத்ததில்லை.

அதற்கு பதிலாக அந்த சமயத்தில் வலுவான ஒரு வங்கியில் இணைத்து விடுவார்கள். இங்கு மொத்த நஷ்டமும் இணைக்கப்பட்ட வங்கியின் தலையில் விழும்.

இதற்கு முன்னால் வங்கிகள் அரசு கையிலே பெரும்பாலும் இருந்ததால் இந்த இணைப்பில் பெரிய அளவில் பிரச்சினைகள் வந்ததில்லை.

அதே போல், NPA என்று சொல்லப்படும் வாராக் கடன்கள் பல வங்கிகளில் 20% அளவைத் தொட்டதால் பல அரசு வங்கிகள் மேலும் கடன் கொடுக்க பணமில்லை. இது முன் எப்பொழுதும் இல்லாத நிலை.

அவர்களுக்கு தான் அரசு தற்போது 4 லட்சம் கோடிக்கு பல திட்டங்களை அறிவித்து உள்ளது. அப்படி என்றால் நாம் செலுத்தும் வரிப் பணம் தான் இங்கு செல்கிறது. அதனால் இங்கும் இழப்பு என்பது பொது மக்களுக்கு தான்.

இந்த நிலையில் தற்போதைய அரசு ஒரு வங்கி திவாலானால் என்ன செய்வது என்பதற்கு புதிய வழிமுறைகளை வகுத்து சட்டங்களை கொண்டு வர திட்டமிட்டு உள்ளது.

இதனை Financial Resolution and Deposit Insurance (FRDI)  என்று அழைக்கிறார்கள்.

இந்த திட்டத்தில் முக்கிய அம்சமாக காப்பீடு தரும் தொகை மட்டும் உடனடியாக திருப்பி கொடுக்கப்படும். மீதியை வங்கியின் பங்குகளாக மாற்றிக் கொள்ளலாம் என்று ஒரு விதி சொல்கிறது. பங்குகளாக மாற்றிக் கொள்வதற்கு வைப்பு நிதி எதற்கு? என்ற கேள்வியும் இங்கு வருகிறது.

அடுத்ததாக வங்கி திவாலானால் முன்பு யார், யாருக்கு எந்த வரிசையில் பணம் கொடுக்க வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது.

அதில் பழைய திட்டத்தில்  காப்பீடு இல்லாத வைப்பு நிதிகளான Unsecured Deposits முன் வரிசையில் இருக்கும். அதாவது டெபாசிட் செய்தவர்களுக்கு பிரித்து கொடுத்த பிறகு தான் மற்ற கடன் கொடுத்தவர்களுக்கு பணம் திருப்பிக் கொடுப்பார்கள்.

ஆனால் FRDI விதிமுறையில்  Unsecured Deposits என்ற இந்த வைப்பு நிதிகள் ஆறாவது இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது. அதாவது சம்பளம் போன்ற இதர சில செலவுகளை கொடுத்த பிறகு இருக்கும் பணத்தில் தான் நமக்கு பிரித்து கொடுப்பார்கள்.

இறுதியாக அரசு வங்கிகளுக்கு மத்திய அரசு கொடுக்கும் உத்தரவாதமும் நீக்கப்பட வேண்டும் என்றும்  சொல்லியுள்ளது. ஆக, நிலையான வைப்பு நிதிகளின் பாதுகாப்பு இங்கு முன்பை விட பல மடங்கு பலவீனமாக மாறுகிறது.

இதனால் தான் FRDI சட்டமும்  கடுமையாக எதிர்க்கப்படுகிறது. அரசும் இதுவரை உருப்படியான பதில்களை சொல்லியதாக தெரியவில்லை.

இந்த விடயத்தில் தடுமாறும் அரசு FRDI விதி முறையை பார்லிமென்ட் நிலைக் குழுவிற்கு அனுப்புவதை தள்ளி வைத்துள்ளது. தள்ளி மட்டும் தான் வைக்கப்பட்டுள்ளது என்பதையும் கவனிக்க..

சரி..இனி அரசு என்ன செய்தாலும் நாம் நமது பணத்தை எப்படி பாதுகாக்கலாம் என்பதையும் பார்ப்போம்.

முதலில் முதலீடு என்பதை பல கூடைகளில் போட்டு வைக்க வேண்டும் என்று முன்பே பல முறை சொல்லி இருக்கிறோம். அது தங்கம், நிலம், ம்யூச்சல் பாண்ட், வைப்பு நிதி, பங்குகள் என்று இருக்கலாம். சீரான வருமானம் வருவதற்கு இது உதவும்.

பார்க்க:  முதலீடை பிரிப்பது எப்படி?

அடுத்து வைப்பு நிதியை மட்டும் எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம் என்று பார்த்தால்,

ஒரு வங்கியில் ஒருவர் கணக்கிற்கு மட்டும் தான் ஒரு லட்ச ரூபாய் காப்பீடு என்பது அதிகபட்சம். அதனால் மனைவி, பிள்ளைகள், பெற்றோர் பெயர்களில் பிரித்து போடலாம். ஒவ்வொருவர் வங்கி கணக்கிற்கும் ஒரு லட்ச ரூபாய் காப்பீடு தனித்தனியே கிடைக்கும்.

அதே போல், ஒரே வங்கியில் அவ்வளவு பணத்தையும் வைத்து இருக்காமால் வேறு வேறு வங்கிகளில் வைத்துக் கொள்ளலாம். அதனால் ஒவ்வொரு வங்கி வைப்புக் கணக்கிற்கும் தனித்தனியே ஒரு லட்ச ரூபாய் காப்பீடு கிடைக்கும்.

அடுத்து, வங்கிகளை விட அஞ்சலகங்களில் இருக்கும் பணத்திற்கு அரசின் உத்தரவாதமும் அதிகம். அதனால் போஸ்ட் ஆபீஸ் வைப்பு நிதிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.



இறுதியாக, வாராக் கடன்கள் அதிகமாக இருக்கும்  IOB, IDBI, Dena Bank, UCO Bank போன்ற வங்கிகளில் பிக்ஸ்ட் டெபாசிட் போடுவதை தவிர்க்கலாம்.

அதே நேரத்தில் SBI, HDFC போன்ற வங்கிகள் வராக் கடன்கள் குறைவாக இருப்பதால் அந்த வங்கிகளை பாதுகாப்பானதாக கருதிக் கொள்ளலாம்.

இந்தியாவும் அமெரிக்கா போன்று கேபிடலிச முறைக்கு வேகமாக மாறி வருகிறது. இங்கு பாதுகாப்பு என்பது வெளியில் இருந்து கிடைக்காது. அந்த சூழ்நிலையில் நமது ஒவ்வொரு முதலீடையும் நாம் தான் திட்டமிட்டு பாதுகாக்க வேண்டும்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

1 கருத்து:

  1. அருமை! தெளிவான விளக்கத்திற்கு நன்றி! இதில் முக்கியமாக கூட்டுறவு வங்கிகள் பாதிப்பாக வாய்புள்ளதல்லவா? மேலும் இது வங்கிகளை தனியார்மயமாக்கலுக்கான ஒரு வழியாக காணலாம் என்று ஒருவர் கூறினார்! அதற்கு வாய்ப்புகள் உண்டா?

    பதிலளிநீக்கு