திங்கள், 14 மே, 2018

நாளை கர்நாடகா தேர்தல் முடிவுகள், என்ன செய்வது?

நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு பதிவு. நிறைய மின் அஞ்சல்கள், ஏன் எழுதவில்லை என்று...


இந்த பகுதியை தொடர்ச்சியாக எழுத வேண்டும் என்பது ஆவல் தான்.

ஆனால் சில முக்கியமான அலுவலக வேலைகளில் சிக்கும் போது இந்த இடைவெளி தவிர்க்க முடியாததாக மாறி விடுகிறது.

அநேகமாக இன்னும் சில மாதங்களில் வாரத்திற்கு ஒரு பதிவாவது எழுதும் வகையில் எமது பிற வேலைகளை மாற்றி வைத்துக் கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.அடுத்து சந்தைக்கு வருவோம்.

யாவரும் எதிர்பார்த்த கர்நாடக தேர்தல் முடிந்து விட்டது. நாளை தேர்தல் முடிவுகள்.

எச்சிட் கருத்துக் கணிப்பில் எதுவுமே தெளிவில்லை. யாரும் வரலாம், வராமலும் போகலாம் என்று தான் இருக்கிறது.

இதில் நாம் அதிக அளவில் குழம்பிக் கொள்வதை விட சந்தை என்ன எதிர்பார்க்கிறது என்பதை பார்ப்போம்.

மோடிக்கு கடந்த முறை நூறு சதவீத வெற்றியைக் கொடுத்த ஹிந்தி பேசும் ஐந்து வட இந்திய மாநிலங்கள் இந்த முறை அதே வெற்றியைக் கொடுக்க வாய்ப்பில்லை.

அதை ஓரளவாவது சமநிலைப்படுத்த வேண்டும் என்றால் பிஜேபி வலுவாக இருக்கும் கர்நாடாகா போன்ற பெரிய மாநிலங்கள் கொஞ்சம் உதவி செய்ய வேண்டும்.

அந்த உதவி கிடைக்குமா? என்பதை அறியத் தான் இந்த தேர்தல் எதிர்பார்ப்புகள்.

கடந்த முறை சட்டசபை தேர்தலில் 40 இடங்களை மட்டுமே பெற்றது.

இதில் பெரிய அளவில் மாற்றம் வருமாயின், அது அடுத்த லோக்சபா தேர்தலில் அதிக இடங்கள் கிடைக்க பிஜேபிக்கு கிடைக்க உதவும்.

அதனால் கர்நாடகாவில் யார் ஆட்சி அமைக்கிறார்கள் என்பதை விட பிஜேபிக்கு எவ்வளவு இடங்கள் கிடைக்கிறது? என்பது தான் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.

மாறுபட்ட கருத்துக் கணிப்புகள் அடிப்படையில் பார்த்தாலும் பிஜேபிக்கு 120 அல்லது 100 அல்லது 80 என்ற இடைவெளியில் இடங்கள் கிடைக்கலாம்.

ஏற்கனவே சந்தை சமீப காலத்தில் அதிகமாக உயர்ந்து விட்ட சூழ்நிலையில் பிஜேபியின் வெற்றி என்பது சந்தையில் ஏற்கனவே அடக்கப்பட்டு விட்டது.

அதனால் உச்சகட்டமாக 120 இடங்களில் வெற்றி பெற்றால் மேலும் 2% உயர்ந்து 11,000 நிப்டி புள்ளிகளில் நிலை பெறலாம்.

அடுத்து, 100 இடங்களில் வெற்றி பெற்றால் இதே நிலையில் நீடிக்கலாம்.

மேலும் கீழே, 80 இடங்களுக்கு கீழே சென்றால் சந்தையில் ஐந்து சதவீத அளவு வீழ்ச்சி ஏற்பட்டு 10,400 புள்ளிகளுக்கு செல்லலாம்.

இதில் ஒன்று தான் நடக்கப் போகிறது. அதனால் பெரிதளவு பதற்றப்பட வேண்டாம்.

என்னவாக இருந்தாலும், இரண்டு நாட்கள் கழித்து சந்தை மீண்டும் அரசியல் காரணங்களை விட்டு விட்டு பொருளாதார காரணங்களை பார்க்க முற்படும்.

அப்பொழுது எண்ணெய் விலை, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, செலாவணி பற்றாக்குறை போன்றவை சாதகமாக இல்லை. அதனால் வீழ்ச்சியை தக்க வைத்துக் கொள்ளலாம்.

அதே நேரத்தில் நிறுவனங்களில் நிதி இறுதி ஆண்டின் முடிவுகள் சாதகமாக அமைந்தால் மீண்டும் உயர்வுகளை காண முடியும்.

அது வரை நிதி முடிவுகள் அடிப்படையில் நிறுவனங்களை தேர்ந்துடுத்து முதலீடு செய்யுங்கள்!


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக