வெள்ளி, 23 மார்ச், 2018

அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர், பாதிப்பு யாருக்கு?

அமெரிக்கா-சீனா வர்த்தகப் போரினால் ஏற்பட்ட  சரிவு நிப்டியின் முக்கிய சைக்கலாஜிகல் சப்போர்ட் நிலையான 10000 புள்ளிகளுக்கு கீழே இழுத்து சென்றது.


இனியும் சந்தை சரிவிற்கான வாய்ப்புகள் குறைவு என்று தோன்றினாலும், 9800 வரை சரிவிற்கு சில வாய்ப்புகள் உள்ளது.



இதுவெல்லாம் தற்காலிகம் என்பதால் நாம் இந்த வர்த்தகப் போரை முழுமையாக அறிவு சார்ந்த முறையில் அணுகுவோம்.

ஒரு நாட்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு இடையே உள்ள வித்தியாசத்தை அந்நிய செலாவணி பற்றாக்குறை என்று அழைக்கிறோம்.

இந்த பற்றாக்குறை தொகை தான் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு அப்படியே போகிறது.

பற்றாகுறையானது பத்து சதவீதத்திற்குள் இருந்தால் இழக்கும் நாடுகள் பெரிதாக கண்டு கொள்வதில்லை.

ஆனால் அமெரிக்காவை பொறுத்தவரை சீனா விவகாரத்தில் இது கையை மீறி சென்று விட்டது.

636 பில்லியன் டாலர் அளவிற்கு சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்யும் அமெரிக்கா 261 பில்லியன் டாலர் அளவிற்கே ஏற்றுமதி செய்கிறது.

அதாவது கிட்டத்தட்ட 375 பில்லியன் டாலர் பற்றாக்குறை. இது அமெரிக்காவின் மொத்த வர்த்தக பற்றாக்குறையில் 66% என்பதாகும்.

அதனால் தான் அமெரிக்காவின் ட்ரம்ப் இதில் கொதித்து எழுவதற்கும் காரணம்.

ஆனால் இந்த சீனா பற்றாகுறை என்பது தற்போது தான் ஏற்பட்டது என்று சொல்ல முடியாது.

இது கிட்டத்தட்ட இருபது, முப்பது வருடங்களாக சேர்த்து சேர்த்து வைக்கப்பட்ட பற்றாகுறை. அதனால் கையை மீறி சென்று விட்டது.

இதற்கு எமது முந்தைய ஒரு கட்டுரை தொடரை படித்து பார்த்தால் இன்னும் கொஞ்சம் தெளிவு கிடைக்கும்.

பார்க்க:சீனாவின் பங்குச்சந்தை குமிழ் வெடிப்பிற்கு காரணம் என்ன?

அமெரிக்காவின் சோம்பேறித் தனமான உற்பத்தி திறன் குறைவும், சீனாவின் அதிரடியான ஏற்றுமதி கொள்கையும் தான் இந்த நிலைக்கு சென்று விட்டது.

தற்போது அமெரிக்காவின் 40% ஸ்டீல் உற்பத்தி நிறுவன திறனும், 60% அலுமினிய உற்பத்தி திறனும் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது.

இதனால் ஏகப்பட்ட வேலை இழப்புகளும் கூட...

இதற்கு அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட ஸ்டீல், அலுமினியம் விலைகள் சீனாவில் இறக்குமதி செய்யப்படுவதை விட பெரிய அளவில் விலை அதிகமாக இருப்பதும் ஒரு காரணம்.

அதனால் முதல் கட்டமாக ட்ரம்ப் ஸ்டீல் இறக்குமதிக்கு 25% அதிக வரியும், அலுமினிய உற்பத்திக்கு 10% அதிக வரியும் விதித்தார்.

அதற்கு தான் சந்தையில் ஸ்டீல், மெடல் நிறுவன பங்குகள் எதிர்மறை வினையை காட்டின.

அதன் தொடர்ச்சியாக நேற்று சீனாவில் இருந்து அதிக அளவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாக அறிவித்தார்.

இதற்கு சீனா பணியும் என்று நினைத்திருப்பார் போல..

ஆனால், சீனாவோ  அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோயாபீன்ஸ், பன்றி இறைச்சி போன்றவற்றிற்கு அதிக இறக்குமதி வரி விதிப்பதாக அறிவித்தது.

இதில் தான் சீனா தனது ராஜதந்திரத்தைக் காட்டியது.




இதனை வெறும் வர்த்தகப் போராக மட்டும் காட்டாமல் அரசியல் ரீதியாக ட்ரம்ப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்த முனைந்துள்ளது.

கடந்த அமெரிக்க தேர்தலில் ட்ரம்ப்பிற்கு ஓட்டு போட்ட மாநிலங்களில் உற்பத்தியாகும் பெரும்பான்மையான பொருள்கள் தான் சோயாபீன்ஸ் மற்றும் பன்றி இறைச்சி.

இங்கு விளையும்  மூன்றில் இரண்டு பகுதி சோயா பீன்ஸ் சீனாவிற்கு தான் இறக்குமதி செய்யப்படுகிறது.

அதனால் இந்த பகுதி விவசாயிகள் ட்ரம்ப்பிடம் பேச்சு வார்த்தைக்கு செல்லுமாறு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்து உள்ளனர்.

இது போக, அடுத்தக் கட்டமாக சீனா ஆப்பிள் போன்ற டெக்னாலாஜி பொருட்களுக்கும் வரி விதிப்போம் என்று கூறியுள்ளது.

பெரிய அளவில் போயிங் விமான நிறுவனங்களை ஆர்டர் செய்வதாக சீனா இருந்தது. அதனையும் மாற்றி ஐரோப்பிய ஏர் பஸ் நிறுவனத்திற்கு மாற்றி விடுவோம் என்று மிரட்டி உள்ளது.

மற்றொரு கோணத்தில் பார்த்தால்,

அமெரிக்க  நடுத்தர வீடுகளில் அதிக அளவில் சீன தயாரிப்புகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றின் விலையும் கூடினால் விலைவாசியும் கூடி விடும்.

இதுவும் அடுத்த தேர்தலில் எதிர்மறையாக எதிரொலிக்கலாம்.

மெதுவாக தீர்க்க வேண்டிய ராஜ தந்திர பிரச்சினையை ட்ரம்ப் அதிரடி செய்கிறேன் என்று குழப்பி விட்டார். அதனை சீனா ராஜ தந்திர ரீதியாக பயன்படுத்திக் கொண்டது.

ஐந்து வருடங்களுக்கு முன்னால் ஐரோப்பிய பொருட்களுக்கு இப்படி தான் வரி போட, அவர்கள் ப்ளோரிடா ஆரஞ்சிற்கு வரி போட்டு வழிக்கு கொண்டு வந்து விட்டார்கள்.

அது போல், தற்போது நடப்பதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக