தொழில் நுட்பம் வந்து நன்மை செய்ததோ இல்லையோ. ஆனால் இன்னும் சிறிது காலத்தில் 99% உலக சொத்தும் 1% பணக்காரர்களிடமும் மீதி 1% சொத்து 99% மற்ற மக்களிடமும் இருந்தாலும் ஆச்சர்யமில்லை.
வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் வியாபாரம் முழுக்க ஒரு வித மையத்தன்மையை நோக்கி நகருவதையம் பார்க்க முடிகிறது. அந்த வகையில் தான் ஜியோவில் Facebook நிறுவனம் முதலீடு செய்வதையும் காணலாம்.
கிட்டத்தட்ட 45,000 கோடி ரூபாய் அளவு முதலீடு செய்து உள்ளார்கள். இது போக சில இதர நிறுவனங்களும் முதலீடு செய்து மொத்தத்தில் 75,000 கோடி அளவு முதலீடு செய்து உள்ளார்கள். அடுத்து, Microsoft நிறுவனமும் வரிசையில் இருப்பதாக செய்திகள் வருகின்றன.
ஏன், இத்தனை வரிசை என்ற கேள்வி வரும் போது, கொரோனோவானது இல்லுமினாட்டி சதியா? அல்லது மருந்து நிறுவனங்கள் சதியா? என்பதை விட மக்களை அதிகம் குழப்பம் செய்யத் தான் வைக்கிறது.
முன்பு ரிலையன்ஸ் நிறுவனம் என்றால் பெட்ரோ-கெமிக்கல் துறையை தான் அதிகம் குறிப்பிடுவார்கள். மற்ற முக்கிய துறைகள் எல்லாம் அணில் அம்பானி கைக்கு சென்று அவர் ஒன்றும் இல்லாமல் செய்து விட்டார். ஆனால் முகேஷ் எதிர்காலத்தை கணிப்பதில் கொஞ்சம் கில்லாடி தான்.
இனி பெட்ரோலை சார்ந்து இருந்தால் வேலைக்கு ஆகாது என்று நினைத்து திட்டமிட்டது தான் ஜியோ. தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடன் 2 லட்சம் கோடி. அதில் ரிலையன்ஸ் இது வரை ஜியோவிற்கு முதலீடு செய்தது என்றால் 1.86 லட்சம் கோடி. கடன் வாங்கியே ஜியோவை ஆரம்பித்து விட்டார்கள்.
இந்த நேரத்தில் முந்தைய டெலிகாம் நிறுவனங்களின் மனசாட்சியற்ற நிலையும் சொல்ல வேண்டும். கொஞ்சமும் ஈவு இரக்கமும் இல்லாமல் 1GB டேட்டாவை 200 ரூபாய் வரை விற்று வந்தனர்.
தற்போது 1GBயின் சராசரி விலை 18 ரூபாய்க்கு வந்துள்ளது. ஆனால் இந்த காலாண்டிலும் பார்தி ஏர்டெல் நிறுவனம் லாபத்தை தான் சந்தித்துள்ளது. அப்படி என்றால் கொள்ளை லாபம் பல வருடங்களாக செய்து உள்ளனர்.
இந்த நேரத்தில் ஜியோ கையில் இருந்து ஒரு பைசாவை இறக்காமல் கடன் தொகையை வைத்தே மக்களுக்கு இலவச டேட்டா சேவை வழங்கியது. மாதத்திற்கு 1000 ரூபாய் வரை ரிசார்ஜிற்கு ஒரு குடும்பம் செலவழித்து வந்த நிலையில் ஒன்றுமில்லை என்றதும் பல வீடு பட்ஜெட்டுகளிலும் ஒரு சிறிய மாற்றம் தெரிந்தது.
அப்படி இப்படியாக தற்போது வரை 30 கோடி வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. அதற்குள் ஆறு, ஏழு டெலிகாம் நிறுவனங்கள் இருந்த இடம் தெரியாமல் காலியாகி உள்ளன என்பதையும் கவனிக்கவும்.
இந்த 30 கோடிக்கு ரிலையன்ஸ் செலவழித்த 1,86 லட்சம் கோடி ரூபாயில் 75000 கோடி ரூபாய் முதலீடாகவே வந்து விட்டது. 20% பங்குகள் தான் விற்று உள்ளார்கள். அதாவது அம்பானிக்கு நான்கு வருடங்களில் மூன்று மடங்கு அதிக லாபம்.
எப்படி சாத்தியமாகி விட்டது என்று பார்த்தால்,
இனி வருங்காலங்களில் உற்பத்தி துறையை தவிர சேவை துறை என்பதற்கு தான் அதிக தேவை இருக்கிறது. மிதமிஞ்சிய வளர்ச்சி என்று போட்டி போட்டுக் கொண்டே சென்றதால் மக்களிடம் அன்றாட தேவைக்கான அணைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டு விட்டன என்றே கருதலாம்.
டிவி, பிரிட்ஜ், கார், பைக் என்று ஒரு முறை வாங்கும் அணைத்து உபகரணங்களும் ஒவ்வொரு வீட்டிலும் வந்து விட்டன. புதிதாக வாங்குவதற்கென்றே பெரிதாக ஒன்றும் தோன்றவில்லை.
அப்படியொரு சூழ்நிலையில் மாதந்தோறும் குடும்ப பட்ஜெட்டில் நிலையாக ஒரு குடும்பம் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் செலவளிக்கிறது என்று பார்த்தால் மளிகை சாமான்களுக்கு தான்.
அதற்காக ஆரம்பிக்கப்பது தான் JioMart.
Amazon, Flipkart போன்றவை ஆரம்பித்து பல வருடங்கள் ஆனாலும் இந்த மாதிரி தினசரி தேவைகளை நிவர்த்தி செய்யுமளவு அவர்களிடம் சக்தி வந்ததாக தெரியவில்லை.
அதனை ஜியோ குறி வைத்துள்ளது.
ஆனாலும் JioMart ஆரம்பித்து பெரிதாக இது வரை மாற்றத்தை கொண்டு வரவில்லை. அதற்கு காரணம் மற்றவர்களை போல் இது வரை ஒரு இணைய தளத்தை அல்லது ஆப்பை மட்டும் தான் வைத்துள்ளார்கள். அதனால் பத்தோடு ஒன்றாக தான் மக்களும் நினைத்து இருந்தார்கள்.
தற்போதைய Facebook முதலீடு இவர்களுக்கு புதிதாக ஒரு வாய்ப்பை ஜியோவிற்கு திறந்து வைத்துள்ளது.
Facebook நிறுவனத்திடம் இருக்கும் முக்கிய செயலி தான் Whatsapp. ஏன், எதற்கு என்று தெரியாமலே இது வரை நமக்கு இலவசமாக Whatsapp சேவைகளை தந்து SMS என்றால் என்னவென்றே மறக்க வைத்து விட்டார்கள்.
அதனை இனி தான் காசு தான் சம்பாதிக்க பயன்படுத்த போகிறார்கள்.
Whatsapp Pay என்ற ஒன்றை ஆரம்பித்தார்கள். ஆனால் இந்திய அரசு இந்த மாதிரி சேவைகளுக்கு டேட்டாவை இந்தியாவில் தான் வைக்க வேண்டும் என்று பல நிபந்தனைகளை விதித்து இருந்தார்கள். அதனால் தான் தள்ளி கொண்டே சென்றது.
ஜியோவில் செய்யப்படும் முதலீடானது இனி அதற்கான வாய்ப்புகளை உருவாக்க போகிறது. ஜியோ நிறுவனம் வழியாக டேட்டாவை பெறவும் எதிர்காலத்தில் வாய்ப்புகள் உள்ளது. அதற்கு இந்திய அரசாங்கத்திடம் லாபி செய்ய வேண்டும் என்றால் அம்பானியின் உதவியும் எளிதில் கிடைத்து விடும்.
அதே நேரத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு என்ன ஆதாயம் என்றால், JioMart என்பதை Whatsapp வழியாக சேர்த்து விடுவது தான். ஆமாம் இனி எல்லா காய்கறி, பழங்களை Whatsapp வழியாக ஆர்டர் செய்து கொள்ளலாம். அதனை JioMart பக்கத்தில் இருக்கும் மளிகை கடையில் இருந்து எடுத்து டெலிவரி செய்யும்.
நேற்று ICICI Bank NetBanking என்பதை Whatsapp வழியாக பார்த்தேன். மிக எளிதாக இருக்கிறது. அந்த வகையில் JioMart கூட சாத்தியமான ஒன்று தான்.
பக்கத்தில் இருக்கும் கிராமத்தில் இருக்கும் கடைகள் கூட எளிதில் Whatsapp வழியாக இணைக்கப்பட்டு விடும். 40 கோடி இந்தியர்கள் வைத்து இருக்கும் Whatsapp 30 கோடி ஜியோ நெட்ஒர்க் வழியாக இணைக்கப்பட்டு விடும். சாத்தியம் தான்.
இப்படி JIO, Facebook என்று இரு நிறுவனங்களுக்கும் ஒரே கல்லில் பல மாங்காய்கள் கிடைக்க போகிறது. Amazon, Flipkart போன்ற ஜாம்பவான்களை எதிர்கொள்வதும் இந்த மிருக பலத்திற்கு எளிதாய் விடுகிறது.
இது போக, நமது வீட்டில் மாதந்தோறும் போடும் பட்ஜெட்டில் எதற்கெல்லாம் செலவளிக்கிறமோ அங்கெல்லாம் JioLearning, JioTV, JioMusic, JioMags என்று JIO இருக்க போகிறது. இனி JIO என்பது டெலிகாம் கம்பனி அல்ல. அது ஒரு டிஜிட்டல் நிறுவனமாக மாற போகிறது.
அதனால் தான் மற்ற நிறுவனங்களும் பணத்தை கொட்ட வரிசையாக காத்திருக்கின்றன.
இப்பொழுது நமது வீட்டில் 30 ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் செலவு ஆவதாக எடுத்துக் கொள்வோம். அதில் 20 ஆயிரம் ரூபாய் வழக்கமாக ஜியோவிற்கு இப்படி கொடுப்பதாக மாறி விட்டால், ஜியோவிற்கு கொடுப்பதற்கென்றே அடுத்த மாதம் வேலைக்கு செல்ல வேண்டும். பணம் ஒரே இடத்தில் குவியும்.
பணத்தை ஒரே இடத்தில குவிய வைப்பதற்கு நாம் ஒவ்வொரு மாதமும் வேலை செய்ய வேண்டும். இதற்கு பழைய ஜமீன்தாரி முறையை பரவாயில்லை.
absolutely right
பதிலளிநீக்கு