செவ்வாய், 11 மார்ச், 2014

சஹாரா - மற்றொரு இந்திய கார்ப்பரேட் கரும்புள்ளி

இந்த கட்டுரை தற்போதைய பங்குச்சந்தையில் மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டு அகப்பட்டுக் கொண்டுள்ள சஹாரா நிறுவனத்தைப் பற்றியது.

இந்தியாவை வாழ வைப்பது சுய கட்டுப்பாட்டோடு இருக்கும் நடுத்தர வர்க்கத்தினரே தவிர, மஹா பணக்காரர்கள் என்று சொல்லப்படும் கார்பரேட் வியாபாரிகள் அல்ல என்பது பல நேரங்களில் நிரூபணமாகி இருக்கிறது.

மேலை நாடுகளுடன் ஒப்பீடுகையில் இந்திய மேல்தட்டு கார்பரேட் வர்க்கத்தினர் கொஞ்சமும் சமுதாய உணர்வு இல்லாமல் இருப்பது வேதனைக்குரிய ஒன்று.

வாரன் பப்பெட் தமது 80 சதவீத சொத்துக்களை அறக்கட்டளைக்கு கொடுக்கிறார். அதே போல் பில் கேட்ஸ் அறக்கட்டளை ஆரம்பித்து சேவை செய்து வருகிறார். இப்படி பல உதாரணங்களை அங்கு பார்க்கலாம்.

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பணத்தின் மேலான ஈர்ப்பு அவர்களுக்கு குறைந்து வருவதைக் காணலாம்.

ஆனால் இந்திய சூழ்நிலை வேறு. எத்தனை தலைமுறைகளுக்கு சேர்த்து வைத்தாலும் பணத்தின் தாகம் தீராத அளவு உள்ளது.


ஒரு பக்கம் அரசியல் வாதிகள், மறு பக்கம் அரசினைக் கட்டுப்படுத்தும் அதி பணக்கார வர்க்கத்தினர். இவர்களுக்கிடையே இந்த நடுத்தர வர்க்கத்தினர் மாத சம்பளத்தில் சிறுக சேமித்து வைத்ததை கார்பரேட் வியாபாரிகள் மொத்தமாக ஆட்டையைப் போட்டு விடுகின்றனர்.

இதனுடன் தொடர்புடைய, தற்போது பரபரப்பாக இருக்கும் சஹாரா நிறுவனத்தினரின் ஒரு மிகப்பெரிய மோசடி பற்றியதே இந்த கட்டுரை.

சஹாரா கிரிக்கெட் ஆட்ட ஸ்பொன்சராக நமக்கு தெரிந்தது. ஆனால் வட இந்தியாவில் இது ஒரு பெரிய நிதி நிறுவனம். அதாவது கருப்பு பணத்தின் கூடாரம் என்றும் சொல்லலாம். அந்த அளவிற்கு அரசியல்வாதிகளின் பணம் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அந்த பணத்தினை வைத்து ஹோட்டல், சில்லறை வியாபாரம், பொழுது போக்கு மீடியா போன்றவற்றில் முதலீடு செய்து உள்ளார்கள்.

இனி தற்பொழுது நடைபெற்ற மோசடியினை விவரமாக பார்க்கலாம்.

சஹாரா நிறுவனத்தின் துணை நிறுவனங்களாக Sahara Housing Investment Corporation Ltd மற்றும் Sahara Real Estate Corporation Ltd உள்ளன. இந்த இரண்டு நிறுவனங்களும் வருடத்திற்கு 15% வட்டி தருவதாகக் கூறி போது மக்களிடம் பணம் வசூலித்து உள்ளன.

ஆனால் இந்த இரு நிறுவனங்களும் பொது மக்களிடம் வைப்பு நிதிகளை பெறுவதற்காக RBIயிடம் பதிவு செய்யப்பட்டவை அல்ல.

இதனால் பாரத வங்கி இந்த நிறுவனங்கள் பொது மக்களிடம் நிதியை பெறக்கூடாது என்றும், ஏற்கனவே பெறப்பட்ட நிதியை மீண்டும் திருப்பி கொடுக்க வேண்டும் என்று கூறியது.

அதோடு சென்று இருந்தால் இன்று சஹாரா உரிமையாளர் சுப்ரதா ராய் சிறையில் இருக்க தேவை இருந்திருக்காது.

ஆனால் அதன் பிறகு சஹாரா அதிபுத்திசாலித்தனமாக செயல்படுவதாக நினைத்து ஒரு செயல் செய்தது. அதாவது தான் வசூலித்த வைப்பு நிதிகளை OFCD என்ற முறையில் பங்குகளாக மாற்ற முயன்றது.

OFCD என்பது optionally fully convertible debentures. இதன் படி முதலீட்டாளர்கள் தங்கள் வைப்பு நிதிகளை விருப்பப்பட்டால் பங்குகளாக மாற்றி கொள்ளலாம்.

இப்படி செய்ததன் மூலம் RBI நடவடிக்கையில் இருந்து சஹாரா தப்பியது ஏனென்றால் வங்கி தொடர்பான நடவடிக்கைகளை மட்டுமே RBI கட்டுப்படுத்த முடியும்.

ஆனால் சஹாரா இந்த முறை பங்குச்சந்தையை கண்காணிக்கும் செபியிடம் அகப்பட்டுக் கொண்டது. அதாவது மேலே சொல்லப்பட்ட சஹாராவின் துணை நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படவில்லை. அதனால் இது போன்று நிதிகளை இந்த துணை நிறுவனங்கள் வசூலிக்கக் கூடாது என்று செபி சுட்டிக் காட்டியது.

மேலும் சஹாராவின் மூன்று கோடி முதலீட்டாளர்களில் ஐந்து பேர் விவரங்களை முதலில் விசாரித்ததில் ஒருவர் கூட அந்த விலாசத்தில் இல்லை. பல முதலீட்டாளர்களின் விவரங்கள் பெறப்படவே இல்லை. இதனால் Know Your Customer என்ற விதிமுறைகளையும் மீறப்பட்டது. அதாவது எல்லாம் fake முதலீட்டாளர்கள்.

மோசடிகளைக் கண்டுபிடித்த
 செபி அதிகாரி ஆபிரகாம் 
மற்ற வழியில் சொன்னால் பெறப்பட்ட பணத்திற்கு கணக்கு இல்லை. அனைத்தும் கருப்பு பணம் என்பது...

இப்படி தவறை செய்து கொண்டு பல வழிகளில் தப்ப முயன்ற சஹாரா தற்போது கோர்ட்டின் பிடியில் இருந்து தப்ப முடியவில்லை. 36000 கோடியை செபியிடம் கொடுங்கள் .அவர்கள் முதலீட்டாளர்களிடம் திருப்பி கொடுப்பார்கள். அதுவரை ஜெயிலில் இருங்கள் என்று கோர்ட் உத்தரவு இட்டுள்ளது.


தற்பொழுது சஹாரா வசமாக மாட்டிக் கொண்டு உள்ளது. யார் பணத்தை யாரிடம் கொண்டு கொடுக்க? ஆள் இருந்தால் தானே கொடுக்க முடியும்.

இந்தியாவைப் பற்றி பல வேளைகளில் குறை சொல்லும் சமயத்தில், இந்திய அரசு அமைப்புகளான RBI, SEBI மற்றும் தேர்தல் ஆணையம் போன்றவை உலக அளவில் சிறந்த கண்காணிக்கும் அமைப்புகள் என்பதையும் மறுக்க முடியாது. இவர்கள் இல்லை என்றால் இந்தியா என்றோ கூறு போட்டு விற்கப்பட்டிருக்கும்.

இந்திய நீதித் துறையை முழுமையாக நம்ப முடியாது தான்..சுப்ரதா ராய் சட்டத்தின் ஓட்டைகளில் வெளிவந்து விடலாம்.

ஆனால் நாம் தான் இது போன்ற ஏமாற்றுக் காரர்களிடம் இருந்து தப்பிக் கொள்ள வேண்டும். முதலீடு செய்யும் முன் ஒரு முறைக்கு இரு முறை நிறுவன பதிவு விவரங்களை சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

3 கருத்துகள்:

 1. But brother why the indian government or the BCCI never checked the background of Sahara when he applied for Indian team sponsorship?
  Why the RBI was sitting silent when such non listed companies sponsors Indian cricket team?
  Whether this move has any political background?Because till last year Sahara sponsored Indian cricket team?had an IPL team?

  பதிலளிநீக்கு
 2. Dear Friend! Thanks for your comment! RBI role is restricted beyond banking. So they can not control over BCCI.

  பதிலளிநீக்கு
 3. நிறைய விடயங்கள் அறிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு