ஞாயிறு, 16 ஜூலை, 2017

வரலாற்று குறைவு பணவீக்கத்தால் துள்ளும் சந்தை, என்ன செய்வது?

கடந்த வாரம் வெளிவந்த பணவீக்க தரவுகள் சந்தைக்கு உற்சாகத்தை அளித்தன.


அதாவது ரிசர்வ் வங்கி எதிர்பார்த்த அளவுகோலான இரண்டு சதவீதத்தை விட குறைந்து 1.2% என்ற அளவில் வந்து விட்டது.




கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு பிறகு பணவீக்கம் இவ்வளவு குறைந்ததால் இந்திய பங்குச்சந்தையும் அதிக அளவில் மகிழ்வாக எடுத்துக் கொண்டது.

ஆனால் நேற்று சந்தையில் தக்காளி வாங்கும் போது மூன்று மடங்கு விலை கூடி இருந்தது. பொடி வெங்காயம் விலை இரண்டு மடங்கு கூடி இருந்தது. இலக்கி வாழை பழம் விலை 20% அளவு கூடி இருந்தது.

இதற்கெல்லாம் அண்மையில் மழை பொய்த்ததை காரணமாக கூடினார்கள்.

ஆனால் பணவீக்கத்தை தரவுகளாக பார்த்தால் விலைவாசி கூடவே இல்லை என்பது போல் தெரிகிறது.

இன்னமும், காகிதத்தில் வரும் தரவுகள் உண்மையில் கள நிலவரத்தை எதிரொலிக்கிறதா? என்ற சந்தேகமும் கூடவே வருகிறது.

அதனால் கொஞ்சம் நேரம் கிடைக்கும் போது இந்திய பணவீக்கம் கணக்கிடல் பற்றி விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் என்று எண்ணி உள்ளோம்.

நிதி மற்றும் மேலாண்மை படிக்கும் மாணவர்களுக்கு இது ஒரு நல்ல ப்ராஜெக்ட் ஐடியாவாக பரிந்துரை செய்கிறோம்.

சரி. இனி பங்குச்சந்தைக்கு வருவோம்.

பணவீக்கம் குறைந்தால் அடுத்த ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி கொஞ்சம் குறையும் என்று சந்தை எதிர்பார்க்கிறது. அதனால் தான் சந்தை பத்தாயிரம் நிப்டி புள்ளிகளை நோக்கி வேகமாக நகருகிறது.

ஆனால் ரிசர்வ் வங்கி நம்மை விட அதிகமாக குழம்பி உள்ளது போல் தான் கடைசியாக நடந்த கூட்ட முடிவுகளை பார்க்கும் போது தெரிகிறது.

பணவீக்கம் குறைந்தால் ரூபாய் ஒழிப்பு காரணமாக இருக்கலாம், வறட்சி காரணமாக இருக்கலாம், அல்லது பொருளாதார தேக்கம் காரணமாக இருக்கலாம் என்று பல வித காரணங்களை தொடர்ந்து கூறி வருகிறது.

அதனால் இதில் ஒரு தெளிவு கிடைக்கும் வரை இன்னும் பொறுமை கூட காக்கலாம்.

சந்தையை நிப்டியின் வடிவில் பார்த்தால் 25க்கும் அதிகமாக P/E வடிவத்தில் சென்று வருகிறது. இது வரலாற்று அளவில் மதிப்பீடலில் மிக உச்ச நிலையாகும்.

அதனால் ஜூன் முடிந்த காலாண்டு முடிவுகள் தான் இந்த மதிப்பீடலை நியாயாமா என்று தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. அது வரை நிதானத்துடன் சந்தையில் பொறுமை காப்பது அவசியம்.

அதனால் பங்கு அல்லது தனிப்பட்ட நிறுவனங்கள் சார்ந்து முடிவுகளை தற்போது எடுக்கலாம்.

பொத்தாம் பொதுவாக எடுத்தால் சிக்கல்கள் வர வாய்ப்பு உள்ளது.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

1 கருத்து:

  1. சரியான ஆய்வு.பொது சந்தையில் விலைவாசி ஏகத்துக்கும் உயர்திருக்கையில் அரசு அறி்க்கையோ நேர்மாறாக உள்ளது.
    போலியான முன்னேற்றத்தைதான் புதிய இந்தியா காண்கிறது.கடந்த முறை உலகம் எங்கும் கடும் பொருளாதார வீழ்ச்சியில் அமெரிக்காவே தள்ளாடிய போது இந்தியா பாதிப்படையாமல் இருந்த்து.காரணம்.பொதுத்துறை,அரசு வங்கிகள் செயல்பாடு.ஆனால் இன்று அப்படி ஒரு நிலை வந்தால் அதிகம் பாதிப்படையும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும்.காரணம் ஜெட்லியின் பொருளாதாரம் ஒரு மோடி வித்தை.

    பதிலளிநீக்கு