வெள்ளி, 29 செப்டம்பர், 2017

தற்போதைய பங்குச்சந்தை சரிவுகள் எவ்வளவு காலம் நீடிக்கும்?

கடந்த பதிவில் பங்குசந்தையை பதற வைத்த காரணிகளை பற்றி எழுதி இருந்தோம்.


இந்தக் காரணிகளால் தொடர்ந்து ஒரு வாரமாக சந்தை எதிர்மறையாகவே இருந்து வருகிறது.



ஆனால் இந்த காரணிகள் தொடர்ந்து நிலையாக எதிர்மறை விளைவை கொடுக்கமா? என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ரூபாய் ஒழிப்பு அல்லது GST அவசியமா என்ற விவாதத்திற்கு அப்பாற்பட்டு ஒரு முதலீட்டாளனாக தற்போது சிந்திக்க வேண்டிய தருணம் இது.

ரூபாய் ஒழிப்பு நடவடிக்கையினால் கருப்பு பணம் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. ஆனால் இனி வரி ஏய்ப்பு செய்வதில் கொஞ்சம் கடினத்தன்மையை தோற்றுவித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

இதனால் வரும் காலங்களில் தனி நபர்க்கான வருமான வரி வசூல் கணிசமாக அதிகரிக்கலாம்.

அடுத்து GST,

GSTயைப் பொறுத்தவரை காங்கிரஸ் காலத்தில் எழுதப்பட்டது தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. அதனால் இதில் வேண்டாம் என்ற விவாதமே வர அவசியமில்லை.

ஆனால் BJPயை பொறுத்தவரை கொஞ்சம் Aggressive அரசாங்கமாகவே எப்பொழுதும் இருந்து வருகிறது.

வாஜ்பாய் காலத்தில் தங்க நாற்கர சாலையும் இதே வேகத்திலே போடப்பட்டது. அந்த வேகம் குறைந்து இருந்தால் இந்த சாலைத் திட்டங்கள் முடிவு பெற்று இருக்காது.

GSTயும் இதே வேகத்தில் தான் கொண்டு வரப்பட்டது. வெகு வேகமாக கொண்டு வரப்பட்டதால் வணிகர்கள் தங்களை இன்னும் தயார்படுத்திக் கொள்ளவில்லை என்றே தெரிகிறது.

ஆனால் பல வணிகர்கள் தங்களை இணைப்பதில் மும்மரமாக இருக்கும் வேளையில் மத்திய அரசு மாநில மொழிகளில் எப்படி GST பதிவு செய்ய வேண்டும் என்பதையும் விளக்க வேண்டும்.

அதே போல், GST இணையதள பதிவு செய்தலிலும் குழப்ப நிலை நீடிக்கவே செய்கிறது.

GSTயை நடைமுறைப் படுத்துதலில் இதே போன்ற பெரிய அளவு திட்டமிடுதல் செய்யாததால் தான் அரசு இன்று தடுமாறிக் கொண்டிருக்கிறது.

தனிநபர் வருமான வரி கூடியுள்ளது. ஆனால் வணிக வரி குறைந்துள்ளது.

ஆனால் இந்த நிகழ்வு என்பதே இன்னும் இரு காலாண்டுகள் மட்டும் இருக்கலாம். அதன் பிறகு GSTயின் பலனும் எதிரொலிக்க ஆரம்பிக்கும்.

இதற்கு இடையே மோடி இன்னும் வேறு ஏதாவது பெரிய நிகழ்வையும் உடனே நடத்திக் காட்ட முற்பட்டால் மக்கள் தாங்க மாட்டார்கள்.

மாற்றங்கள் என்பது அவசியமே. ஆனால் அவை தொடர்ச்சியாகக் கொண்டு வரப்பட்டு யானை புகுந்த விளை நிலம் போல் வருத்தக் கூடாது.

இந்த நிலையில் இன்னொரு கவலையும் பங்குச்சந்தைக்குள் வருகிறது.

கடந்த 2014ம் ஆண்டில் மோடி வேற்று பெறுவார் என்ற எதிர்பார்ப்பிலும், பெற்ற வெற்றியிலுமே சந்தை பல உயரங்களை தொட்டது.

ஆனால் இந்த வெற்றியை வரும் 2019ம் ஆண்டில் தேர்தலில் பெறுவாரா? என்பதும் ஒரு கேள்வியாக எழுகிறது.

கடந்த தேர்தலில் இந்தி பெல்ட் மாநிலங்களில் மட்டுமே கிட்டத்தட்ட 80% இடங்களை பெற்று ஆட்சியை பிடித்தார்.

இந்த உச்சக்கட்ட நிலையில் மேலும் கூடுவதற்கு வாய்ப்பில்லை. ஆனால் குறைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

டெல்லி, குஜராத் போன்ற மாநிலங்களில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில்களில் பிஜேபியின் வெற்றி மிகக் குறைவே. இந்த நிலை மற்ற இந்தி பேசும் மாநிலங்களில் தொடருமானால் இப்பொழுதுள்ள அறுதி பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை.

சரி. இந்த பாதகத்தை தென் மாநிலங்களில் சரி செய்து கொள்ளலாமா? என்றால் கர்நாடகாவை தவிர மற்ற இடங்களில் பெரிய மாற்றங்கள் இருக்காது.

ஆக, அடுத்த தேர்தலில் பிஜேபி தலைமையில் கூட்டாட்சி வரலாம். அல்லது காங்கிரஸ் தலைமையில் கூட்டாட்சி வரலாம்.

இந்தக் கூட்டாட்சியை பங்குச்சந்தை எதிர்மறையாக எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் அதுவும் தற்காலிகமே.

இன்று முன்னாள் ஆர்பிஐ கவர்னர் எழுதிய கட்டுரையை படிக்க நேரிட்டது.

1990 முதல் 2014 வரை கூட்டாட்சி நடந்த காலக்கட்டங்களில் தான் இந்தியா உச்சக் கட்ட அளவில் GDP வளர்ச்சி பெற்றதாம்.

ஆக, இந்திய பங்குச்சந்தையை பொறுத்தவரை ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் சூழ்நிலை தான் அதிக முக்கியத் துவம் பெறுகிறது.

அதனால் கவலையில்லாத நீண்ட கால முதலீடுகளை தற்போதைய சந்தை திருத்தங்களில் ஆரம்பிக்கலாம்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக