திங்கள், 1 ஜனவரி, 2018

புதிய வருடமும், பங்குச்சந்தை எதிர்பார்ப்புகளும்..

நண்பர்கள் அனைவருக்கும் எமது இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

2017ம் ஆண்டை பொறுத்தவரை பொது மக்களுக்கு GST, Demonetization என்று பிரச்சினைகளுக்குள் தான் ஓடிக் கொண்டிருந்தார்கள்.


ஆனால் பங்குச்சந்தை முதலீடுகளுக்கு மிக நன்றதாக இருந்தது. சென்செக்ஸ் கிட்டத்தட்ட 28% உயர்வை சந்தித்தது.உலக அளவில் பெரிதளவு பாதிக்கும் காரணிகள் இல்லை. அப்பப்போ, வட கொரியா மட்டும் குண்டு போட்டிருவோம் என்று மிரட்டிக் கொண்டிருந்தது.

இது போக, வருட இறுதி மாதங்களில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து இந்தியாவிற்கு அதிர்ச்சி அளித்தது.

ஆனாலும் மீண்டும் நேர்மறையில் மீண்டு வந்த நிறுவனங்களின் விற்பனை மற்றும் லாப உயர்வுகள் கச்சா எண்ணெய் விலை உயர்வை தாங்கி கொண்டது என்று சொல்லலாம்.

இறுதியில் குஜராத் தேர்தளில் பிஜேபி வெற்றி பெற, பங்குச்சந்தை உச்சக் கட்ட உயர்வுகளை தக்க வைத்துக் கொண்டது என்று சொல்லலாம்.

அடுத்து, 2018ஆம் வருடத்தை எப்படி எதிர்பார்க்கலாம் என்றும் பார்ப்போம்.

குஜராத்தை பொறுத்தவரை  இந்த அளவிற்கு கஷ்டப்பட்டு வெற்றி பெற்றதை பிஜேபி மறக்கவில்லை.

இந்த வருடம் மத்திய பிரதேசம், கர்நாடகா, சட்டீஸ்கர், ராஜஸ்தான் போன்ற பெரிய மாநிலங்களில் தேர்தல் வருகிறது.

கிட்டத்தட்ட மினி லோக்சபா தேர்தல் என்றும் கூறலாம். மத்திய பிரதேசம் தவிர மற்ற மாநிலங்களில் பிஜேபியின் வெற்றி இன்னும் உறுதிபடுத்த முடியாமலே உள்ளது.

அதனால் பிஜேபி தனது நிலையை மாற்றிக் கொண்ட கட்டாயத்தில் உள்ளது.

இந்த வருடம் கடந்த மூன்று வருடங்களை போல, கட்டமைப்பு போன்ற வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி குறைவாகவே இருக்கும்.

அதே நேரத்தில் விவசாயிகள் மற்றும் குறுந்தொழில்களில் ஏற்பட்டுள்ள கடுமையான அதிருப்தியை சமாளிக்கும் கட்டாயத்தில் உள்ளார்கள்.

அதனால் பெருமளவு நிதி விவசாயம், அரசு திட்டங்கள், மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பான திட்டங்களுக்கு மாற்றி விடப்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

சில சமயங்களில், விவசாயம் தொடர்பான கடன்களுக்கு சில தள்ளுப்படிகள் கூட வழங்கப்படலாம். அதனால் பொதுத்துறை வங்கிகளில் கவனமாக இருப்பது அவசியம்.

அடுத்து, கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்த வருடத்திலும் தொடரும் போலே தெரிகிறது.

அதனால் கச்சா எண்ணெய் மூலப்பொருளை கொண்டுள்ள உரம், பெயிண்ட் போன்ற துறை நிறுவனங்களில் லாப மார்ஜின் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

நிதிப் பற்றாக்குறை, அந்நிய செலாவணி போன்றவற்றை அரசு இந்த வருடத்தில் கண்டு கொள்ளாது என்று எதிர்பார்க்கலாம்.

அவர்களை பொறுத்தவரை அடுத்த லோக்சபா தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கடன் வாங்கி அதிக செலவு செய்வதில் கூட தயக்கம் இருக்காது.

ஆனால் GST இன்னும் ஒழுங்கமைக்கப்படும் போது இந்த வருடத்தைக் காட்டிலும் அதிக வரி வரவுகள் இருக்கலாம் என்பது சாதகமான விடயம்.

வாராக் கடன்களில் ஏற்பட்டுள்ள நேர்மறை மாற்றங்கள் மற்றும் தனிப்பட்ட நிறுவனங்களின் லாப உயர்வுகள் போன்றவை சந்தையை வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கு உதவலாம்.

மொத்தத்தில், இந்த வருட பங்குச்சந்தை பொருளாதாரம் சார்ந்த காரணிகளை மட்டும் சாராமல் அரசியல் காரணிகளை பெரிதளவு சார்ந்து இருக்கும்.

இறுதியாக, 2017 போல் 28% உயர்வுகளை சென்செக்ஸ் பார்ப்பது கடினம்.பதினைந்து சதவீதம் லாபம் என்பதே அதிகம் தான்.

அதனால் பொதுக் காரணிகள், அரசியல் நகர்வுகள் சாராத நிறுவனங்களில் முதலீடு செய்தால் நமது முதலீடுகள் பாதுகாப்பானதாக இருக்கும்.

மீண்டும் எமது புத்தாண்டு வாழ்த்துக்கள்!


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக