வியாழன், 22 ஆகஸ்ட், 2019

நேர்மையை நம்ப மறுக்கும் நிறுவனங்கள்

இன்று எமது நெருங்கிய நண்பர் அவர்கள் தாம் முதலீடு செய்த ஒரு நிறுவனத்தின் பங்குகளை விற்க முடியாமல் இருக்கும் நிலையை கவனத்திற்கு கொண்டு வந்தார்.


என்னவென்று பார்த்தால், அந்த நிறுவனம் கடந்த வருடமே NCLT மன்றத்திற்கு சென்று திவாலான நிலைக்கு சென்று விட்டது.



தற்போது ட்ரேடிங்கும் நிறுத்தப்பட்டது.

நிறுவனத்திடம் இருக்கும் சொத்தை கடனில் கழித்து பார்த்தால் எதிர்மறையிலே செல்கிறது.

அதனால் அந்த நிறுவனத்தின் பங்குகள் மதிப்பில்லாதவை என்றே கருத வேண்டியுள்ளது.


எதுவும் தெரியாத முதலீட்டாளர்களுக்கு தவறான கணக்கை போலி ஆடிட்டர்கள் வழியாக ஏமாற்றுவது என்பது அண்மைய காலமாக அதிகமாகி கொண்டே வருகிறது.

அதற்கு ஒரு வகையில் மீடியா நிறுவனங்களை கூட குறையாக சொல்லலாம்.

நமக்கும் நிறுவனங்களுக்கும் இடையே பாலமாக இருக்க வேண்டிய மீடியா நிறுவனங்கள் அந்த அளவிற்கு வெளிப்படையான விவரங்களை கொண்டு வருவதில்லை.

அந்த வகையில் மோடி அரசின் ஒரு நடவடிக்கையை பாராட்டலாம்.

கடந்த சில பதிவுகளாக தொடர்ந்து இந்த அரசினை விமர்சனம் செய்து வரும் நிலையில் இது ஒரு சிறிய மாற்றம்.

ILFS நிறுவனம் வீழ்ந்த நிலையில் DHFL, IndiaBulls, Oberoi என்று பாகுபாடு காட்டாமல் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக Oberoi, DLF போன்ற நிறுவனங்களும் நீதி மன்றத்தின் பார்வையில் சிக்கி உள்ளன.

இவை ஒரு மாதத்திற்கு முன்னால் பார்த்தால் செய்திகள் வழியாக பரிந்துரையும் செய்யப்பட்டுள்ளன என்பது வேடிக்கையானது.

CG Power என்ற நிறுவனம் கணக்கில் ஆயிரம் கோடிக்கு மேல் பணத்தை வேறு எங்கோ திருப்பி அனுப்பியுள்ளது.

அதற்கு கடன் கொடுத்த YES Bank மாட்டி உள்ளது.

சரி. YES Bank வங்கியாவது ஒழுங்கு என்றால் அதுவும் இல்லை. பல வருடங்களாக கள்ளக் கணக்கு காட்டி வந்துள்ளார்கள்.

பத்து வருடங்களுக்கு முன்னால் பொருளாதார நெருக்கடி வந்த ஒரு சில நிறுவனங்கள் திவாலாகி வந்தன.

ஆனால் தற்போது சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 500 நிறுவனங்களாவது இந்த பட்டியலில் வரும் போல் தெரிகிறது.

அதாவது நான்கில் ஒரு நிறுவனம் மோசடி செய்கிறது.

அப்படி என்றால், நேர்மை எங்கே இருக்கிறது? எதை நம்பி முதலீடு செய்வது?

ஆடிட்டர் அறிக்கை உண்மையானதா? என்பது பார்க்க இன்னொரு ஆடிட்டர் போட வேண்டிய நிலைமை.

வியாபாரத்தில் நஷ்டம் வந்து மூடினால் அது வேறு. திட்டமிட்டு மூடுவதற்காகவே நிறுவனங்கள் தொடங்கப்படுகின்றன.

நேர்மையின் விலை மதிப்பில்லாதது. அதனை நிறுவனங்கள் நம்ப மறுக்கின்றன.

ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் போன்ற பென்னி பங்குகளை தவிர்க்கும் நேரமிது.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

4 கருத்துகள்: