செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

ஏற,ஏற அடி வாங்கும் சந்தை

எமது கடந்த பதிவில் திசை மாற்றும் பிரச்சினைகள் என்ற தலைப்பில் காஷ்மீர் தொடர்பாக எழுதி இருந்தோம்.


இதற்கு ஆதரவும், எதிர்த்தும் சரி சம விகிதத்தில் இருந்தன.ஒரு சிறு தன்னிலை விளக்கம்.

இந்த தளம் அரசியல் தளமல்ல. நாமும் எந்த கட்சியை சார்தவருமல்ல. பொருளாதார, முதலீடுகள் தொடர்பான தகவல்களை தருவது தான் எமது நோக்கம்.


இது வரை காங்கிரஸ், பிஜேபி, திராவிட கட்சிகள் எல்லாவற்றையும் தான் விமர்சனம் செய்து இருக்கிறோம். விமர்சனம் செல்லாமல் செல்வதும் நடுநிலைத்தனமல்ல.

கடந்த பதிவில் விடுபட்ட சில அரசியல் ரீதியாக பதிலை சுருக்கமாக தருகிறோம்.

#1
"காஷ்மீர் ஒப்பந்தம் என்பது இந்திய, காஷ்மீர் தலைவர்களால் செய்யப்பட்ட ஒரு ஒப்பந்தம்.

அதனை முழுமையாக நீக்க வேண்டும் என்றால் காஷ்மீர் சட்டசபையின் ஒப்புதல் பெறப்பட்டு இவ்வாறு இணைத்து இருந்தால் மகிழ்வே.

ஆனால் திட்டமிட்டு காஷ்மீர் சட்டசபையை செயல்பட விடாமல் செய்து அதன் மூலம் ஒப்பந்தத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்துவது இந்திய நேர்மைக்கு விடப்படும் சவால்"

#2
எப்படி காங்கிரஸ் சிறும்பான்மை, சிறும்பான்மை என்று சொல்லி பெரும்பான்மை மக்களை உசுப்பி விட்டதோ, அதே தவறை பிஜேபி நேர்மாறாக செய்கிறது.

2013ல் வளர்ச்சி என்பதை சொல்லி ஒட்டு கேட்ட பிஜேபி அண்மைய தேர்தலை முழுமையாக மத ரீதியாகவே அணுகியது.

அமெரிக்கா உட்பட எந்த வளர்ந்த நாடுகளும் மதத்தை தங்கள் அரசியலில் கலக்காமலே வளர்ந்து உள்ளன.

அந்த நிலையில் தற்போதைய நமது அரசியல் முதலீடுகளையும் பாதிக்கும் என்பதால் தான் இந்த பிரச்சினையை தொட வேண்டியதாகிறது.

எப்பொழுதெல்லாம் பொருளாதார வளர்ச்சி மந்தமாகிறதோ அப்பொழுதெல்லாம் ஒரு பரபரப்பான அரசியல் நிகழ்வை கொண்டு வந்து எதிர்மறையை பிஜேபி மறக்க செய்து விடுகிறது.

நேற்று முன்தினம் வரை இறக்கத்தில் இருந்த சந்தை நேற்றும், இன்றும் பச்சையில் இருக்கிறது.

அமெரிக்க சந்தை பெருமளவு சரிந்தது கூட சந்தையில் எதிரொலிக்கவில்லை.

அதற்கு காஸ்மீரும் ஒரு காரணம். இது தவிர, இன்று ரிசர்வ் வங்கி வட்டியை குறைப்பது தொடர்பாக ஒரு முடிவு எடுக்க இருக்கிறது.

அதில் வட்டி குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் ஒரு காரணம்.

ரிசர்வ் வங்கி கடந்த நான்கு மாதங்களாக தொடர்ந்து வட்டியை குறைத்து வருகிறது.

ஆனால் உண்மையான வங்கி சந்தையில் இந்த வட்டி குறைப்பு எதிரொலிக்கவில்லை.

பத்து வருடங்களுக்கு முன்பு 10.5%க்கு எடுக்கப்பட்ட எமது வீட்டு வங்கி கடன் தற்போது 9.55% என்ற அளவில் தான் குறைந்துள்ளது.

ரிசர்வ் வங்கி இந்த இடைப்பட்ட காலத்தில் குறைத்த வேகத்தை பார்த்தால் 7.5%க்குள் வந்து இருக்க வேண்டும்.

ஆனால் பணப் புழக்கம் என்பது சீராததால் நிகழ் வாழ்வில் இதன் தாக்கம் எதிரொலிக்கவில்லை.

அதனால் இன்று வட்டியை குறைத்தாலும் ஓரிரு நாட்களில் சந்தை 10,500 நிப்டி புள்ளிகளை நோக்கி தான் பயணிக்க வாய்ப்புகள் உள்ளது.

அண்மை காலமாக சந்தையை கவனித்து வந்தால்,

100 புள்ளிகள் கூடினால் ஒரு பெருங்கூட்டம் வந்து பங்குகளை விற்று கிடைத்த லாபம் போதும் என்று சென்று விடுகிறது.

அதனால் தான் 100 புள்ளிகள் கூடினால் அடுத்து 300 புள்ளிகள் வரை இறங்கி வருகிறது.

இதனை Short Covering என்று தான் சொல்ல முடியுமே, தவிர Buying interest என்ற ஒன்றை காண முடியவில்லை.

இன்னும் தரை தளத்தில் மீனை பிடிக்கும் காலம் சந்தையில் கனியவில்லை என்பதே உண்மை.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக