ஞாயிறு, 17 மே, 2020

20 லட்சம் கோடிக்கு கணக்கு வந்தாச்சு..

மோடி சொன்ன பிறகு கொரோனா உதவி தொகை பற்றி அதிக பேச்சு எழுந்தது. பங்குசந்தையில் கூட உயர்வை எதிர்பார்த்தார்கள். ஆனால் வெறும் 200 புள்ளிகள் உயர்வை மட்டும் பார்த்தது. அதன் பிறகு மேலும் கீழே வந்து விட்டது.

நண்பர்கள் கூட இது தொடர்பாக கட்டுரை எழுத கேட்டு இருந்தார்கள். அதனால் வெள்ளியன்றே எழுத வேண்டிய கட்டுரை. ஆனால் புரியாமல் இருந்ததால் என்ன எழுதவென்றே தெரியவில்லை. சரி மூன்று நாளும் உட்கார்ந்து கேட்போம் என்று இருந்தோம். அது நான்கு நாளானது. இன்று ஐந்தாவது நாளோடு வில்லிசை முடிந்தது.இறுதியில் நிர்மலாஜி ஒரு புன் முறுவலோடு நீங்கள் கேட்ட 20 லட்சம் கோடிக்கு கணக்கு கொடுக்குறேன் என்று சொல்லிய போது அவர்களுக்கே மீம்ஸ் தாக்கம் புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஒரு படத்தில் சத்யராஜிடம் வடிவேலு தியேட்டரில் வேலை பார்ப்பதற்கு சம்பளம் கேட்பார். வடிவேலு தூங்கியது, சாப்பிட்டது போக நீ தான் 200 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று சொல்வார். அது போல் தான் இந்திய அரசின் கோரோனோ நிதியும்.

3 லட்சம் கோடிக்கு MSME நிறுவனங்களுக்கு கடன் கொடுக்கிறார்கள். அந்த தொகையும் இதில் அடங்கும். அதற்கு அரசு மூலதன தொகையும் வங்கிகளுக்கு கொடுக்காது. ஆனால் உத்தரவாதம் மட்டும் கொடுப்பார்கள். முதலில் வங்கிகளிடம் இதற்கு காசு இருக்கிறதா என்று தெரியாது. அப்படியே இருந்தாலும் அரசை நம்பி எல்லாம் சீக்கிரமாக கொடுக்க மாட்டார்கள். இப்படி நடைமுறைக்கு வராத நிறைய வேலைகள் இந்த 20 லட்சம் கோடியில் வந்து விடுகிறது.

இதே போல் விமான நிறுவனங்களுக்கு நேரே போகுமாறு வழித்தடங்கள் மாற்றப்படுகின்றன. இதனால் ஆயிரம் கோடி மிச்சமாகும். அதுவும் இதில் அடங்கும்.

அடுத்து P.F தொகையில் சிறிது குறைவாக காட்டினால் போதும். அதாவது நாம் கட்டிய தொகை தான் பிறகு நமக்கு கையில் கிடைக்கும். அதுவும் 20 லட்சம் கோடியில் வருகிறது.

விவசாயிகளுக்கு வழக்கமாக கொடுக்க கூடிய அந்த உதவி தொகை இரண்டு மாதத்திற்கு முன்னர் கொடுத்து விடுகிறோம். அதுவும் சேர்ந்து விடும்.

ஒரு பக்கம் சுதேசி கொள்கை இந்த பேச்சின் பிரதானம். ஆனால் பல துறைகளில் அந்நிய முதலீடுகள் திறந்து விடப்பட்டுள்ளன. அதிலும் பாதுகாப்பு துறையில் 49% திறந்து விட்ட போதே வெளிநாட்டு நிருவனங்கள் முதலீடு செய்யவில்லை. தற்போது 74% திறந்து விடப்பட்டுள்ளது. அந்த அளவு சாத்தியம் இந்த கொரோனா சூழ்நிலையில் என்று தெரியவில்லை.

ஆக, இப்படி கணக்கை ஒன்றாம் நாள், இரண்டாம் நாள், ...ஐந்தாம் நாள் என்று கூட்டியதில் 20 லட்சத்து 91 ஆயிரம் கோடி வந்துள்ளது. அதாவது சத்யராஜ் - வடிவேலு காமெடி போல் நாம் தான் இந்த அதிகபட்ச 91 ஆயிரம் கோடியை அரசுக்கு கொடுக்க வேண்டிய கடன்பட்ட சூழ்நிலையில் இருக்கிறோம்.

நிர்மலா சீதாராமனின் இந்த கூட்டங்களை பார்க்கும் போது நடைமுறை பிரச்சினைகளுக்கும் அவரது தீர்வுகளுக்கும் இடையே உள்ள இடைவெளி தான் அதிகமாக தெரிகிறது.

இப்போதைய முக்கிய பிரச்சினையே Demand என்ற தேவை தான். எதனையும் வாங்கும் அளவிற்கு மக்களிடம் பணப் புழக்கம் இல்லை. வீடு வாங்க வேண்டும் என்று நினைத்தவன் கூட கொரோனாவை பார்த்தவுடன் உயிர் வாழ்தல் போதும் என்ற நிலைக்கு தான் தள்ளப்பட்டுள்ளான். அந்த சூழ்நிலையில் மக்களிடம் நம்பிக்கை கொடுத்து பணப் புழக்கத்தை கூட்டும் எந்த நடவடிக்கையும் இந்த 20 லட்சம் கோடியில் இல்லை.

அதே போல் Demand கூடாத வரை நிறுவனங்கள் எந்த சலுகை கொடுத்தாலும் முதலீடு செய்ய முன் வராது. அதான் கடந்த வருடம் கார்பரேட் நிறுவனங்களுக்கு வரி சலுகை கொடுத்தது முதல் தொடர்கிறது. தற்போதும் அது தான் தொடர வாய்ப்பு உள்ளது.

ஆக, மொத்தத்தில் பொருளாதார உலகில் வாங்குபவர், விற்பவர் என்று இரண்டு பேருக்குமே திருப்தி கொடுக்காத Stimulus தான் இந்த 20 லட்சம் கோடி. இதற்கு மேல் எதுவும் வாய்ப்பு இல்லாததால் சந்தையில் அடுத்த கட்ட சரிவுகளை நாம் தவிர்க்க இயலாது.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்:

  1. அருமை. மோடி அரசில் அறிவு பற்றாக்குறை நிலவுகிறதை அவர்களது அறிவிப்புகள் காட்டுகின்றன.

    பதிலளிநீக்கு
  2. எஸ்......கணக்கு மட்டும் காட்டியாச்சு....... காரியத்தை காணோம் ......

    பதிலளிநீக்கு