புதன், 6 மே, 2020

வருமானத்திற்கு குறுக்கு வழியை நாடும் மாநில அரசுகள்

கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி அரசுக்கு 3500 கோடி அளவு வரும் வருவாய் 300 கோடியாக குறைந்துள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார். பல மாநிலங்களுக்கும் கிட்டத்தட்ட இதே நிலை தான்.

GST கொண்டு வரப்பட்ட பிறகு மாநிலங்களின் கையில் இருக்கும் வருவாய் என்பது மதுவும், பெட்ரோலும் தான். மீதி எல்லாமே மத்திய அரசின் கைக்கு சென்று விட்டது.

மத்திய அரசு அள்ளிக் கொடுக்கும் நிலையில் இருந்தாலும் கிள்ளி தான் கொடுத்து வருகிறது. இது போக மாநில அரசுகளுக்கு மத்திய அரசிடம் நிலுவையில் இருக்கும் தொகை கூட கையில் கொடுக்கப்பட வில்லை. இந்த நிலையில் மாநில அரசுகள் எங்கே போகும்?

இதன் விளைவு  தான் நேற்று  டெல்லி மற்றும் பெங்களுருவில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. ஏதோ திருவிழா கொண்டாட்டம் போல் இருந்தது. நாளை தமிழகத்தில் திறக்கப்படுகின்றன. அதை விட அதிகமாகவே எதிர்பார்க்கலாம்.

தமிழக அரசுக்கு வருடத்திற்கு ஒன்றே கால் லட்சம் கோடி ரூபாய் வருமானம் வருகிறது என்றால் அதில் முப்பதாயிரம் கோடி டாஸ்மாக் வழியாகவே வருகிறது. எவ்வளவு தவறான வழியில் வருமானத்தை காட்டி இருக்கிறோம் என்பதை காண முடிகிறது.

இது போக, கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் 90% அளவு சரிந்து விட்டது. ஆனால் இங்கு விலை கூடிக் கொண்டே செல்கிறது. இனி பெட்ரோலை சவூதி நாடுகள் சும்மா கொடுத்தாலும் நமது அரசு இதே விலைக்கு தான் விற்கும்.

அதாவது சரியான வழியில் அரசின் நிதி வரவுகள் இது வரை இல்லை என்பதை தான் கொரோனா எடுத்துக் காட்டி இருக்கிறது. வல்லரசாவதற்கு வெகு தூர நிலையில் இருக்கிறோம்!

இது போக, மத்திய அரசுக்கு வழக்கமாக மாதத்திற்கு ஒரு லட்சம் கோடி அளவு GST வருமானம் வரும். அதுவும் 28,000 கோடியாக சுருங்கி உள்ளது.

தற்போதைய நிலையில் இதற்கு மேலும் தாங்க முடியாது என்று அரசுகள் கொரோனாவை கைவிட்டு விட்டதாக தெரிகிறது. நாம் தான் நம்மை பார்த்துக் கொள்ள வேண்டும்.

இனி வரும் மாதங்களில் பெரிய அளவு வரிச்சுமை குடிமகன்கள் தலையில் ஏறலாம். அதை தாங்கும் அளவிற்கு வல்லமையை, வேலையை தக்க வைக்கும் வாய்ப்பை இறைவனை வழங்க பிரார்த்திப்போம்!

வேறு வழியில்லை!

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக