ஞாயிறு, 10 மே, 2020

அரசு கடன் பத்திரங்கள் எவ்வாறு செயல்படுகிறது?

நேற்று ஒரு செய்தியை பார்க்க நேரிட்டது.

டாஸ்மாக் வருமானத்தில்  தங்களுக்கும் பங்கு  வேண்டும் என்று மத்திய அரசின் வருமான வரித்துறை நீதி மன்றத்தில்  நீதியை நாடி இருக்கிறார்கள். அதிலும் கடந்த வருடத்தில் மட்டும் 14,000 கோடி ரூபாய் அளவு தர வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்.



தமிழக அரசே பல பேர் ஏச்சு, பேச்சுக்களை கடந்து டாஸ்மாக்கை திறந்தால் அதற்கும் தடை வாங்கி வைத்துள்ளார்கள். இதில் மத்திய அரசுக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என்றால் பிச்சை எடுத்த பெருமாளிடம் திருடி தின்னும் அனுமார் கதை தான்.


கடந்த பதிவில் பார்த்தவாறு எங்கே போனால் பணம் கிடைக்கும் என்று அலையும் நிலையில் தான் மத்திய, மாநில அரசுகள் இருக்கின்றன. அதன் விளைவு தான் நேற்று பேருந்து உயர்வு கட்டண உயர்வுகள் அறிவிக்கப்பட்டது. அடுத்து மின்சார கட்டண உயர்வும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கிறோம்.

ஆதார நிதி மூலங்களின் வலுவற்ற நிலையே இதற்கு காரணம் என்று சொல்லலாம். 18 ரூபாய் உண்மையான பெட்ரோலின் விலைக்கு 75 ரூபாய் கொடுத்து வருகிறோம். அதே நேரம் மக்கள் வெளியே போகாமல், வாகனங்கள் இருந்ததால் பெட்ரோலின் தேவை 50%க்கும் குறைவாக சென்று விட்டது. கிட்டத்தட்ட இரண்டு லட்சம் கோடி அளவு வருவாய் மத்திய அரசுக்கு இதன் மூலமே கிடைத்து வருகிறது. அதில்  தடை ஏற்பட்டுள்ளதால் அரசு இனி அடுத்து அதிகமாக பயன்படுத்தும் பொருள் ஒன்றை யோசித்து வரி போடவும் வாய்ப்புகள் உள்ளன.

மொத்தத்தில் அரசின் இந்த வரி பிடியில் இருந்து தப்ப வேண்டும் என்றால் நமது செலவுகளை அதிக அளவில் குறைத்தால் தான் தப்ப முடியும். இல்லாவிட்டால் நேர்முக வரி, மறைமுக வரி என்று எல்லாவற்றிலும் அடைபட்டு கிடைக்க வேண்டி வரலாம்.

வரி கொடுப்பதை குறைவாக சொல்லவரவில்லை. ஆனால் அந்த வரி என்பது மக்களை வருத்தி வாங்குவதாக இருக்க கூடாது.

இது தவிர, தற்போது பண வருவாய்க்கு அரசு கடைசியாக எடுத்திருக்கும் ஆயுதம் கடன். இந்த வருடம் 7 லட்சம் கோடி அளவுக்கு தான் கடன் வாங்க நிர்மலாஜி திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் நேற்று 12 லட்சம் கோடி கடன் வாங்குவதாக சொல்லி இருக்கிறார்கள். அதாவது 7 லட்சம் கோடியில் 3.5% என்பது பட்ஜெட் நிதி பற்றாகுறை என்றால் 12 லட்சம் கோடியில் 6% என்பதை எட்டலாம். முந்தைய காங்கிரஸ் அரசை கடன் வாங்குவதில் முந்தி விட்டார்கள்.

இந்த கடன் எப்படி வாங்குகிறார்கள் என்பதையும் பார்ப்போம்.

அரசு கடன் பாத்திரங்களை சந்தையில் வெளியீடும். சந்தையில் அதிக அளவு கடன் பத்திரங்கள் புழக்கத்தில் வரும் போது அந்த கடன் பத்திரங்களுக்கான வட்டியும் அதிகமாகும்.

இந்த வட்டி விகிதத்தை அடிப்படையாக வைத்து தான் நமது நிறுவனங்கள்  சர்வதேச சந்தையில் கடன் வாங்குகின்றன.  அதனால் அவர்கள் அதிக வட்டி கொடுக்க வேண்டி வரும். அதிக அளவு கடன் வைத்து இருக்கின்ற நிறுவனங்களுக்கு இது ஒரு எதிர்மறையான செய்தி தான்.

இவ்வாறு வெளியீடும் கடன் பாத்திரங்களை நமது வங்கிகள் தங்களிடம் இருக்கும் Reserved Cash பகுதியில் இருந்து எடுத்து வாங்கி கொள்ளலாம். அதாவது அந்த Reserved Cash என்பதும் மக்களின் டெபாசிட் தொகை தான். அதற்கு அரசு வட்டி கொடுக்கும்.

அவ்வாறு கிடைக்கும் கடன் வருமானத்தை அரசு அதிக அளவு முறையாக செலவிடப்பட்டால் மக்களிடம் பணப் புழக்கம் பெருகும். மக்களிடம் மிதமிஞ்சிய பணம் வந்தால்,  அந்த பணத்தை மீண்டும் வங்கியில் போடுவார்கள். மீண்டும் திருப்பி Reserved Cash பகுதி பெருகும். இப்படி ஒரு வட்டம் உருவாகி பொருளாதாரத்தை சீரமைக்க உதவுகிறது.

ஆனால் இந்த வட்டம் ஒழுங்காக வருவதற்கு அரசு இந்த 12 லட்சம் கோடி  ரூபாயை எப்படி செலவு  செய்ய போகிறது என்பதை பொறுத்தே அமையும்.

பார்க்கலாம்!  நல்லது நடப்பதற்கு வேண்டுவோம், இதற்கு மேல் மக்களிடம் தாங்கும் சக்தி இருப்பதாக தெரிவதில்லை...


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக