செவ்வாய், 1 டிசம்பர், 2015

தனியார் மயமாக்கமலால் எகிறும் IDBI பங்கு

இந்திரா காந்தி காலத்தின் போது பல தனியார் வங்கிகள் அரசு உடைமையாக்கப்பட்டன. அதன் பிறகு தற்போது எதிர்திசையில் அரசு பயணிக்க வேண்டிய நிலை வந்துள்ளது.


இதற்கு ஏகப்பட்ட அரசியல் குறுக்கீடுகள் தான் முக்கிய காரணமாக அமைந்து உள்ளன.ஒரு முறை ஐஒபி வங்கி மண்டல மேலாளர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது ஏன் உங்க வங்கியில் மட்டும் இவ்வளவு வாராக்கடன்கள் இருக்கிறது? என்று கேட்டோம்.

அதற்கு ஒரு வங்கி மேலாளராக அல்லது ஊழியராக தங்களுக்கு அதனைத் தடுக்கும் எந்த அதிகாரம் இல்லை என்று கூறினார்.

ஒரு மந்திரியே நேரில் போன் செய்து இவருக்கு லோன் கொடுங்கள் என்று சொல்லும் போது நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்றார்.

அதுவும் உண்மை தான்.

பொதுத் துறை வங்கிகளில் கடன் வாங்கும் போது ரிஸ்க்கிற்கு ஏற்ற அளவு கடன் என்ற முறை சாமானிய மக்களுக்கு தான் பயன்படுத்தப்படுகிறது தவிர அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு கொஞ்சமும் கிடையாது.

இதனால் தான் பல பொதுத் துறை வங்கிகள் தனியார் வங்கிகளை விட கணிசமான அளவில் வாராக்கடன்களை கொண்டிருக்கின்றன.

இப்படியே நல்ல திறனுடன் செயல்படாத 27 பொதுத்துறை வங்கிகளை அரசு தலையில் சுமக்க வேண்டி உள்ளது. அதனால் அரசு சில வங்கிகளை கைவிட முடிவு செய்துள்ளது.

இதன் தொடர்ச்சியாகத் தான் அரசு IDBI வங்கியில் தற்போது கை வைத்துள்ளது.

தற்போது அரசு 76% பங்குகளை வைத்துள்ளது. பொதுவாக அதிகாரம் அரசின் கையில் இருக்க வேண்டும் என்றால் குறைந்தது ஐம்பது சதவீத பங்குகளை வைத்திருக்க வேண்டும்.

ஆனால் அதனினும் குறைவான IDBI பங்குகளை வைக்க தற்போது திட்டமிட்டுள்ளதால் மறைமுகமாக தனியார் வங்கியாக மாற உள்ளது.

இது கிட்டத்தட்ட AXIS வங்கியை அரசு தனியார் வங்கியாக மாற்றியது போல் தான்.

UTI Bank என்ற பெயரில் அரசு வங்கியாக இருந்த AXIS வங்கியில் தற்போது அரசு 34% பங்குகளை தான் கொண்டுள்ளது. அதுவும் LIC, UTI போன்ற அரசு ட்ரஸ்ட்கள் மூலம் மறைமுகமாக தான் உள்ளது.

இந்த அமைப்புகள் முதலீட்டு அமைப்புகள் என்பதால் வங்கியின் நிர்வாக முடிவுகளில் தலையிடுவதில்லை. இதனால் வங்கி நிர்வாகமும் தனியார் வங்கி அளவு நன்றாக உள்ளது.

இதே போன்று தான் IDBI வங்கியையும் அரசு மாற்ற திட்டமிட்டு உள்ளது.

அரசு விற்கும் IDBI பங்குகளை உலக வங்கியின் துணை அமைப்பு ஒன்று வாங்க திட்டமிட்டு உள்ளது. இது போக, பல முதலீட்டு நிறுவனங்களும் வாங்க ஆர்வம் காட்டுகின்றன.

இதனால் IDBI வங்கியின் பங்கு கடந்த சில வாரங்களில் மட்டும் 20% அளவு உயர்வை சந்தித்து உள்ளது.

தற்போது மற்ற அரசு வங்கிகளை விட கணிசமாக இந்த பங்கு உயர்ந்து விட்டதால் தவிர்க்கலாம்.

இந்த தனியார் மயமாக்கல் என்பது உடனடியாக நடந்து விடாததால் மீண்டும் விலை இறங்க வாய்ப்புகள் உள்ளன. இது போக, வாராக் கடன்கள் இன்னும் அதிகமாகவே உள்ளது.இதனால் கடந்த சில ஆண்டுகளாக லாபம் குறைவாக வந்துள்ளது.

இந்த நிலை மாறுவதற்கு இன்னும் சிறிது காலம் ஆகலாம். அதனால் தற்போதைய அதிக பட்ச விலை IDBI பங்கிற்கு உகந்ததல்ல...


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக