ஞாயிறு, 29 நவம்பர், 2015

நேர், எதிர்மறைகள் கலந்து டிசம்பர் மாத பங்குச்சந்தை

கடந்த இரு மாதங்களாக தள்ளாடிக் கொண்டிருந்த சந்தை நவம்பர் இறுதியில் சில எதிர்பார்ப்புகளுடன் கொஞ்சம் உச்சத்தில் சென்றது.


இனி டிசம்பர் மாதத்தை பார்த்தால் ஓரளவு உள்நாட்டுக் காரணிகள் சாதகமாகவும், அதே நேரத்தில் வெளிநாட்டுக் காரணிகள் பாதகமாகவும் அமைய வாய்ப்பு இருக்கிறது.நாளை ரிசர்வ் வங்கி தனது வட்டிக் கொள்கையை மறு ஆய்வு செய்யும் கூட்டம் வருகிறது.

ஏற்கனவே கணிசமாக வட்டி விகிதங்களைக் குறைத்து விட்டதால் கிட்டத்தட்ட நூறு சதவீதம் சொல்லி விடலாம். வட்டி விகிதங்கள் குறைக்க வாய்ப்பு இல்லை என்று.

அதே நேரத்தில் இந்த மாதத்தில் அமெரிக்க பெடரல் வங்கியும் தமது வட்டிக் கொள்கைகளை தீர்மானிக்க உள்ளது.

மிக நீண்ட காலம் மாற்றப்படாமல் இருந்ததால் இந்த முறை எப்படியும் வட்டியைக் கூட்டி விடுவார்கள் என்று ஒரு சாரார் சொல்ல, மறு பிரிவினர் இன்னும் கொஞ்சம் அமெரிக்க பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்தால் தான் கூட்டுவார்கள் என்று கருதுகிறார்கள்.

இது கணிக்க முடியாத ஒன்று. 50-50 தான்.

அவ்வாறு வட்டி விகிதங்கள் கூட்டப்பட்டால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை கொஞ்சம் திருப்பி பெறுவார்கள். அது சந்தையில் எதிர்மறையாக எதிரொலிக்கலாம்.

அடுத்து, GST வரி கொண்டு வருவதற்கு தடையாக இருக்கும் பார்லிமென்ட் கூட்டம் நீண்ட கால முதலீட்டிற்கு அதிக முக்கியத்துவம் பெறுகிறது. ஏனென்றால், கிட்டத்தட்ட அணைத்து துறைகளுமே நேர் மற்றும் மறைமுக வழிகளில் அதிக பயனைப் பெற வாய்ப்பு உள்ளது.

பிஜேபி கட்சியினர் மோடியின் டீ பார்ட்டிக்கு பிறகு அதிக நம்பிக்கையில் உள்ளனர். பிஜேபியும் சுமூகமாக செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்து உள்ளதால் GST வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

இந்த எதிர்பார்ப்பில் தான் ஏற்கனவே 26,000 சென்செக்ஸ் புள்ளிகளை சந்தை தாண்டியுள்ளது. GST மசோதா கொண்டு வரப்படுமாயின் 26,000 நிலைகளை அடிப்படையாக கொண்டு சந்தை இயங்கலாம்.

அடுத்து, மத்திய ஆசியாவில் ரஷ்யா, ISIS, துருக்கி என்று பதற்றம் தொடர்வதால் இது ஒரு எதிர்மறை காரணியாக அமைய வாய்ப்புள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலையில் மாறுதல்கள் ஏற்படுமாயின் அதுவும் சந்தையை பாதிக்கலாம்.

மொத்தத்தில் இந்த மாதம் சந்தை புறக்காரணிகளின் நிலையை பொறுத்தே அதிகம் செயல்பட வாய்ப்பு உள்ளது.

கடந்த இரண்டு மூன்று மாதங்களாக கொடுத்த போர்ட்போலியோ பரிந்துரைகளில் சந்தை சரிவுகளிலும் சில பங்குகள் 50% வரை உயர்வை சந்தித்து உள்ளன.

அதனால் எதுவாக இருந்தாலும் தனிப்பட்ட பங்கு தேர்ந்தெடுத்தலே இந்த புறக்காரணிகளை விட அதிக அளவில் முக்கியத்துவம் பெறுகிறது. நீண்ட கால முறையில் இன்னும் சில பங்குகள் மலிவாகவே உள்ளன.« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக