ஞாயிறு, 24 ஜூலை, 2016

25 வயது பொருளாதார சீர்திருத்தமும், பின்னோக்கிய பார்வையும்

இந்த வருடம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் 1991ல் தொடங்கி வைத்த பொருளாதார சீர்திருத்தம் 25 வயதை நிறைவு செய்கிறது.


பங்குச்சந்தையை பொறுத்த வரை இந்த இருப்பத்தைந்து வருடங்களும் முக்கியமான வருடங்கள். இரண்டாயிரம் புள்ளிகளின் இருந்த சென்செக்ஸ் இன்று இருபத்து ஏழாயிரம் புள்ளிகளில் நிலை கொண்டுள்ளது என்றால் அதற்கு இந்த சீர்திருந்தங்களும் ஒரு முக்கிய காரணம்,அதனால் சந்தையில் கட்சியின் வருட விழா போல் ஒரு வித கொண்டாட்டம் இருக்கவே செய்கிறது.

இந்த 1991 என்பதன் முந்தைய நாற்பது வருடங்களையும் பார்த்தால் சீனா, ரஷ்யாவிடம் போட்டி போடும் அளவு கம்யூனிச கொள்கைகள் இருந்தன.

அங்குள்ள அளவு மக்களின் சுதந்திரத்தில் கட்டுப்பாடுகள் இல்லையே தவிர பொருளாதரத்தில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இருந்தன.

பிரிட்டிஸ்காரர்கள் துணி வியாபாரம் செய்ய வந்தே நம்மை அடிமைப்படுதினார்கள். அதன் விளைவால் மற்ற நாட்டின் இறக்குமதிகளுக்கு கடுமையான தடைகள் இருந்தன.

அதே போல், எல்லாம் எல்லாருக்கும் சொந்தம் என்ற கம்யூனிச கொள்கை நேருக்கு பிடித்தமான ஒன்றாக இருந்ததால் உள்நாட்டிலும் தனி நபர்கள் பெரிய அளவில் நிறுவனங்கள் துவங்க அனுமதிக்கப்படவில்லை.

அப்படியே அனுமதிக்கப்பட்டாலும் லைசென்ஸ் ராஜ் என்று சொல்லப்படும் முறையில் ஒவ்வொரு துறையிலும் கிளியரன்ஸ் வாங்கியே அலைக்கழிக்க விடுவார்கள். அதற்கு பயந்து பலர் ஒதுங்கி விடுவார்கள்.

ஆனாலும், 47ல் வறுமையில் வாடிய இந்திய சமூகம் பசுமை புரட்சி, வெண்மை புரட்சி போன்ற பல ஐந்தாண்டு திட்டங்கள் காரணமாக மீளத் தொடங்கி இருந்தது என்பது தான் இந்த கொள்கையில் ஒரு நல்ல விடயம்.

அதே நேரத்தில் எல்லா துறைகளிலும் வியாபாரம் உட்பட அனைத்தும் அரசு கையில் இருந்தன. அதனால் அரசு அதிகாரிகள் ஏதோ தேவதூதர்கள் போல் நடந்து கொள்ள எல்லாவற்றிலும் தாமதம், எதற்கும் லஞ்சம் என்பது பிரிட்டிஷ் காலத்தை விட அதிகமாக இருந்தது என்பது கொடுமையான விடயம்.

அணைத்து வியாபாரமும் அரசு மட்டுமே செய்ய முடியும் என்ற சூழ்நிலை வரும் போது அரசால் பெரிய அளவில் நிறுவனங்களை துவக்க முடியவில்லை. அதனால் வேலை வாய்ப்புகளையும் கொடுக்க முடியவில்லை.

இதனை 80களில் வெளிவந்த படங்களிலே பார்க்கலாம். ஊமை விழிகள், வறுமையின் நிறம் சிகப்பு என்று எல்லாமே வேலையின்மை தொடர்பாக தான் இருந்து வந்ததைக் காணலாம்.

மற்ற ஆசிய நாடுகள் எட்டு, பத்து சதவீத வளர்ச்சியில் நாலு கால் பாய்ச்சல் போடும் போது, இந்தியா மட்டும் இரண்டு, ஒன்று என்று எதிர்மறை சதவீத வளர்சிகளை கூட கொடுத்து வந்தது. இதற்கு இந்து பொருளாதார வளர்ச்சி என்று கூட பெயர் வைத்து இருந்தார்கள்.

இப்படி சங்கிலி போல் இணைந்த பிரச்சினைகள் 80களின் இறுதியில் ராஜீவ் காந்தி ஆட்சியை இழந்ததும் அரசியல் குழப்பங்களும் கூடி வந்தன. மெஜாரிட்டி இல்லாத அரசில் கஜானாவும் காலியாக இருந்தது.

அதனால் ரிசர்வ் வங்கியிடம் இருந்த தங்கத்தை அடகு வைத்து தான் பட்ஜெட் போட முடிந்தது. கச்சா எண்ணெய் வாங்குவதற்கு கூட அந்த பணம் தான் பயன்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு தான் மைனாரிட்டி அரசுகள் கவிழ்ந்து, நரசிம்ம ராவ் தலைமையில் காங்கிரஸ் அரசு அமைந்தது. அவர் தான் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த மன்மோகன் சிங்கை நிதி அமைச்சராக நியமித்தார்.

இவ்வளவு தூரம் அரசியல் சார்பு இல்லாத ஒருவரை ஒரு முக்கிய துறை மந்திரியாக நியமித்த ராவின் தில்லை பாராட்டத் தான் வேண்டும். ஆனால் அதனை பாராட்டும் மன நிலையில் தற்போது காங்கிரஸ் இல்லாதது ஒரு வேதனையான விஷயம் தான்.

சிங்கின் முதல் பட்ஜெட்..தேவையில்லாத பல லைசென்ஸ்களை ரத்து செய்கிறார். பல துறைகளில் வெளிநாட்டு முதலீடுகளை திறந்து விடுகிறார்.

அப்பொழுது பலமாக இருந்த கம்யூனிஸ்ட்கள் நாடாளுமன்றத்தில் எதிர்ப்புடன் கூச்சல் போடுகிறார்கள். உங்களது கருதுக்களை ஏற்கிறேன். ஆனால் இந்த சூழ்நிலையில் வேறு ஏதாவது மாற்று உங்களிடம் இருக்கிறதா? ராவ் கேட்கிறார்..

கம்யூனிஸ்ட்கள் அமைதியாகிறார்கள். பொருளாதாரமும் திறந்து விடப்பட்டது.

தற்போது தோராயமாக இருபத்தைந்து வருடங்களில் பொருளாதார ரீதியாக பத்து மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளோம்.

உண்மையில் பார்த்தால், கம்யூனிசம் பெரிதா? கேபிடலிசம் பெரிதா? என்ற கேள்வி வரும் போது இன்னும் யாருக்கும் தெளிவான பதில் இல்லையே என்பதே உண்மை.

எல்லாமே தேவைக்கு ஏற்றால் போல் தான் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை வருகிறது.

90களில் அந்த அளவு சிக்கலான சூழ்நிலை வரா விட்டால் இன்னும் அதே கொள்கைகளைத் தான் பின் பற்றி இருப்போம்.

அதே சமயத்தில் சுதந்திரம் அடைந்த பிறகு உடனடியாக கேபிடலிசம் என்ற முறைக்கு மாறி இருந்தால் இந்த நேரம் பணக்கார்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே உள்ள இடைவெளி தற்போதை விட அதிகமாகி இருக்கும்.

அதனால் நாம் ஓரளவு சரியான நேரத்தில் சரியான கொள்கைகளுக்கு மாறி இருக்கிறோம் என்றும் சொல்லலாம்.

ஆனால் போட்டியான பொருளாதாரம் என்று வரும் போது ஓடிக் கொண்டே இருக்க வேண்டும், தேவைகளும் கூடும். அந்த சமயத்தில் எதற்கு வாழ்கிறோம் என்று தெரியாமலே பணம் ஒன்றை மட்டும் நோக்கி ஓடுவோம்.

அதே போன்றதொரு நிலையை இந்த இருப்பத்தைந்து ஆண்டுகள் முடிவில் எட்டி உள்ளோம் என்று சொன்னாலும் மிகையாகாது.

இந்த ஒரு பெரிய குறையை தனிப்பட்ட வாழ்க்கை முறைகள் மூலம் மாற்றிக் கொண்டால் பொருளாதார சீர்திருத்தத்தின் பலன் நமக்கு சரியாக கிடைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

அடுத்த இருப்பத்தைந்து ஆண்டுகளில் என்ன நடக்கிறது என்பதையும் பார்ப்போம்...


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக