வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

விஷால் சிக்கா விலகலும், தொடரும் குழாயடி சண்டையும்

இன்போசிஸ் நேற்று தான் தமது பங்குகளை BuyBack முறையில் வாங்குவதாக அறிவித்து இருந்தது.


இதனால் சந்தையில் இன்போசிஸ் பங்குகள் மூன்று சதவீதம் வரை ஏற்றத்தை சந்தித்தன.ஆனால் அதன் பிறகு நடந்தவை எல்லாம் இன்போசிஸ் சிஇஒ விஷால் சிக்காவை விலக செய்யும் அளவிற்கு சென்று விட்டன.

இன்பி நிறுவனர் நாராயண மூர்த்தியால் உள்ளே கொண்டு வரப்பட்டவர் தான் தற்போதைய சிஇஒ விஷால் சிக்கா.

SAP நிறுவனத்தில் இவரது தலைமையில் உருவாகிய மென்பொருள்கள் பிரபலம் அடைந்ததால் மூர்த்தியால் அதிக சம்பளத்திற்கு கொண்டு வரப்பட்டார்.

அவர் முன் வைக்கப்பட்ட முக்கிய இலக்கு என்பதே இன்போசிஸ் நிறுவனத்தை 2020க்குள் 20 மில்லியன் வருமானம் தரும் நிறுவனமாக 2020க்குள் மாற்ற வேண்டும் என்பது தான்.

ஆனால் தொடர்ச்சியாக ஐடி நிறுவனங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளால் இந்த இலக்கு அடைய முடியாது என்பது தற்போதே தெரிய ஆரம்பித்து விட்டது.

இந்த நிலையில் விஷால் நிர்வாகம் தொடர்ந்து உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு அதிக ஊதிய பலன்களை கொடுத்து வந்தது.

இது சராசரி பணியாளரின் சம்பளத்தை விட பல நூறு மடங்குகள் இருந்தது. இந்த நிலை கடை நிலை பொறியாளர்கள் முதல் நிறுவனர்கள் வரை அதிருப்தியை உருவாக்கியது.

அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட புகைச்சல்கள் பரவலாக பொது வெளியில் நிறுவனர்களால் ஊடகங்களில் பேசப்பட்டு வந்தது.

இதன் உச்சக்கட்டமாகத் தான் நேற்று மூர்த்தி விஷால் சிக்கா தலைமை பொறுப்புக்கு தகுதியானவர் அல்ல, தொழில் நுட்ப பிரிவிற்கே தகுதியானவர் என்று குறிப்பிட்டார்.

யாராக இருந்தாலும், தன்மானம் என்ற ஒன்று இருந்தால் இந்த முடிவைத் தான் எடுத்து இருப்பார்.

விஷால் சிக்கா எப்படிப்பட்டவராக இருந்தாலும் அவரைத் தேர்ந்தெடுக்கும் முன் மூர்த்தி யோசித்து இருக்க வேண்டும்.

தற்போது பொது வெளியில் பேசும் போது நிறுவனம், முதலீட்டாளர்கள் என்று பல விதங்களில் பாதிப்பு இருக்கத் தான் செய்கிறது.

விஷால் சிக்கா இந்தியராக இருந்தாலும், அவரது பணி முறை என்பது அமெரிக்காவின் சிலிகான் வேலியை ஒத்தே இருந்து வந்துள்ளது என்று சொல்லலாம்.

அதனால் முழுமையான சேவை சார்ந்த இந்திய நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்த கலாசார வேறுபாடுகள் பல கருத்து வேறுபாடுகளை இயற்கையாக தோற்றுவித்தது.

புதிதாக மாற்றத்தில் இறங்குபவர்கள் ஏற்கனவே இருக்கும் கட்டமைப்பு முறைகளையும் தங்களது எண்ணங்களையும் சரி சம விகிதத்தில் கலந்து எடுத்து சென்றால் தான் முழு வெற்றியை பெற முடியும்.

ஆனால் விஷால் சிக்கா முழுமையாக மாற்றங்களை உருவாக்க நினைத்தது தவறாக சென்று விட்டது.

இப்பொழுது விஷால் சிக்கா விலகி விட்டாலும், இன்போசிஸ் நிறுவனம் சார்பில் பங்குச்சந்தைக்கு கொடுக்கப்பட்ட அறிக்கை குழாயடி சண்டையை விட மோசமாக உள்ளது.

அதில் நாராயண மூர்த்தியை கடுமையாக விமர்சித்தும், அவருக்கு இனி இங்கு இடம் இல்லை என்று சொல்வது போல் தான் அறிக்கை உள்ளது.

மூர்த்தியின் பொது வெளி விமர்சனங்களை தவறு என்று கூறும் போது இதனையும் தவறாக தான் கருத வேண்டி உள்ளது.

தற்போது அந்த அறிக்கைக்கு பதில் கொடுக்கும் விதமாக திருப்பியும் நாராயண மூர்த்தி ஊடகம் வழியாக தாக்கி உள்ளார்.

விஷால் சிக்கா பதவியேற்ற பிறகு கடந்த காலாண்டில் தான் இன்போசிஸ் நல்ல நிதி அறிக்கையைக் கொடுத்து இருந்தது.

ஆனால் தற்போது நிறுவனத்திற்குள் நடந்து வரும் பனிப்போருக்கு தீர்வு கிடைக்காத வரையில் அடுத்தக் கட்ட வளர்ச்சி என்பது கேள்விக் குறிதான்!

அதனால் இன்போசிஸ் பங்குகளை தவிர்க்கவும்!


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக