திங்கள், 7 ஆகஸ்ட், 2017

Bharat 22, அரசே வழங்கும் ம்யூச்சல் பண்ட், வாங்கலாமா?

தற்போதைய மத்திய அரசு பொது துறை நிறுவனங்களில் இருக்கும் பங்குகளை விற்று நிதி திரட்டி வருகிறது என்பது நாம் அறிந்ததே.


பொதுவாக இந்த நிதியை பங்குச்சந்தை வழியாக தான் திரட்ட வேண்டி உள்ளது.



ஆனால் பல வித எதிர்ப்புகள் காரணமாக பங்குச்சந்தை வழியாக நிதி திரட்டுதல் என்பது பெரும்பான்மையாக தோல்வியிலே முடிந்து வருகிறது.

அதனை சரி கட்ட அரசு கொண்டு வந்த திட்டம் தான் Bharat 22.

கடந்த இரு நாட்களுக்கு முன்னர் தான் ஜெட்லி இந்த திட்டத்தை பற்றி அறிவித்தார்.


இது பின்வாசல் வழியாக நிதி திரட்டும் திட்டம் தான். ஆனால் மக்களுக்கும் பயன்படும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

மத்திய அரசு எங்கெல்லாம் பங்குகளை வைத்து இருக்கிறதோ அதில் சிறப்பாக செயல்படும் 22 நிறுவனங்களை தேர்ந்தெடுத்து இந்த நிதியை உருவாக்கி உள்ளார்கள். அதனால் தான்  Bharat 22 என்று அழைக்கப்படுகிறது.

இது ETF நிதியாக இருப்பதால் பங்குச்சந்தை வர்த்தகங்கள் மூலமே வாங்கி கொள்ளலாம்.

ஆனாலும் இந்த நிதியின் தன்மைகள் ம்யூச்சல் பண்ட்டை ஒத்தே வருகின்றன.

இந்த நிதியில் ஒரு துறையில் 20% க்கும் மேல் நிதி ஒதுக்கப்படாது. அதே போல் எந்த ஒரு தனி பங்கு நிறுவனத்திலும் 15%க்கு மேல் நிதி முதலீடு செய்யப்படாது.

இதனால் பல துறைகள், பல நிறுவனங்கள் ஒரு வித சமச்சீர் விகிதத்தில் வளர்ச்சிக்கு தகுந்தவாறு இருக்கும்.

இதற்கு முன்பும் அரசு 2014ல் மத்திய பொது துறை நிறுவனங்களை மட்டும் வைத்து CPSE-ETF என்ற நிதியை வெளியிட்டது.

அந்த நிதியும் 2015ம் வருடத்தை தவிர மற்ற வருடங்களில் இருபது சதவீத அளவில் வருடத்திற்கு வருமானத்தை கொடுத்து வந்தது.

ஆனால் CPSE-ETF நிதியில் 60% பணம் மின் மற்றும் ஆற்றல் துறைகளிலே முதலீடு செய்யப்பட்டது. அதனால் ஒரு போர்ட்போலியோ சமநிலை இல்லாமல் இருந்தது.

அதே நேரத்தில் தற்போதைய Bharat 22 இந்த பிரச்சினையை சரி செய்துள்ளது.

இன்னொரு வித்தியாசம் பார்த்தால், CPSE-ETF நிதியில் வெறும் அரசு நிறுவனங்கள் மட்டுமே இருந்தது. ஆனால் Bharat 22 நிதியில் அரசின் பங்குகள் உள்ள L&T, ITC போன்ற நிறுவனங்களும் உள்ளன.

அதனால் முந்தையதை ஒப்பிடுகையில் Bharat 22 நிறைய நேர்மறை காரணிகளை கொண்டுள்ளது என்று சொல்லலாம்.



Bharat 22 நிதியில் நிர்வாக கட்டண செலவுகள் என்பது 0.20% தான். அதே நேரத்தில் மற்ற ம்யூச்சல் பண்ட்களில் பார்த்தால் 2.25% அளவு கட்டணங்களாக கொடுக்க வேண்டி வரும்.

அதிக அளவு ப்ளூ சிப் நிறுவனங்கள் மட்டுமே இருப்பதால் பாதுகாப்பானதும் கூட.

வங்கி வட்டி விகிதங்கள் குறைந்து வரும் சூழ்நிலையில் பிக்ஸ்ட் டெபாசிட்டில் உள்ள காசை என்ன செய்வது என்று யோசிப்பவர்களுக்கு இந்த நிதி அதிக அளவு பயனளிக்கும்.

குறிப்பு: இன்னும் இந்த நிதி வரும் தேதி அறிவிக்கப்படவில்லை. விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக