வியாழன், 31 ஆகஸ்ட், 2017

குழந்தையின் ராக்கெட் விளையாட்டால் குழப்பத்தில் சந்தை

பொதுவாக பங்குச்சந்தையில் ஏற்ற, இறக்கங்களுக்கு காரணம் என்பது தெரிந்தாலும் அதற்கான தெளிவும் ஓரளவு ஊகிக்க முடியும்.


ஆனால் தற்போதைய சந்தை போர் பதற்றங்களில் சிக்கி இருப்பதால் என்ன செய்வது என்றே தெரியவில்லை.



ஆரம்பத்தில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் தான் போர் வருமா? என்ற பதற்றம் சந்தையில் அதிக அளவில் இருந்தது.

இது நேரடியாக நமது சந்தையை பாதிக்கும் என்பதால் இந்திய சந்தை அதிக அளவிலே தாழ்வு நிலையை சந்தித்தது.

ஆனால்  அடுத்து வரும் வாரங்களில் மோடியின் சீன அதிபர் சந்திப்பு இருப்பதால், பூடான் நாட்டின் மத்தியஸ்த்தில் இந்த பிரச்சினை தற்போது தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. இரு நாடுகளும் டோக்லாம் தளத்தில் இருந்து படைகளை விலக்கி கொண்டுள்ளன.

சரி..நிம்மதியாக இருக்கலாம் என்றால் அடுத்து வட கொரியா தனது விளையாட்டை தீவிரமாக்கி உள்ளது. இதில் சந்தை எந்த திசையில் செல்வது என்பது தெரியாமல் குழம்பி போய் இருக்கிறது.

இதனை போர் என்று செல்வதை விட விளையாட்டு என்று தான் சொல்ல வேண்டும்.

ஏனென்றால் அவர்கள் வேண்டுவது என்ன என்று அவர்களுக்கும் தெரியாது. எதிரிக்கும் தெரியாது. அந்த அளவு  சிக்கலான நிலை.

வட, தென் கொரியா போர் பதற்றங்களை நேரடியாக அனுபவித்த எமது அனுபவத்தை ஏற்கனவே நாம் எழுதி இருக்கிறோம்.

பார்க்க: ஸ்பீக்கர் செட்டால் போருக்குத் தயாராகும் கொரியா

வட கொரியாவை பொறுத்தவரை இனி இழப்பதற்கு என்று எதுவும் இல்லை. ஆனால் பாகிஸ்தான் வழியாக கடத்தப்பட்ட அணுகுண்டு தொழில் நுட்பம் அவர்களிடம் சிக்கி உள்ளது.

அதே நேரத்தில் கொரியா தீபகற்பத்தில் உள்ள தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளை பார்த்தால் நல்ல வளர்ச்சி அடைந்தவை.

வட கொரியா போடும் ஒரு குண்டு அவர்களை பத்து வருட பின்னோக்கி வளர்ச்சியில் தள்ளி விடும். இது தவிர பெரியண்ணன் அமெரிக்காவும் தென் கொரியாவில் தமது படை தளத்தை அமைத்துள்ளது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வட கொரியா வைத்து இருப்பதால் அமெரிக்காவின் மேற்கு கடற்கரை நகரங்களை தாக்குமளவு பலம் பெற்றுள்ளது.

அதனால் அமெரிக்காவிற்கும் இழப்பு அதிகம் வரும் சூழ்நிலையில் இது உலக பொருளாதரத்தை அதிக அளவில் பாதிக்கும். அதனால் தான் சந்தை இதை நினைத்து அதிகம் பயப்படுகிறது.



இந்த நிலையில் தான் குழந்தை சாமி என்று சொல்லப்படும் வட கொரியா அதிபர் கிம் ஜாங் விளையாட்டு தனமாக ஒரு ஏவுகணையை ஜப்பான் வான் வெளியில் ஏவி கடலில் இறக்கி உள்ளார்.

ஹிரோஷிமா, நாகசாகி பாதிப்பில் இருந்து தற்போது தான் மீண்டு வரும் ஜப்பான் இதனைக் கண்டு அதிகமாகவே பயப்படுகிறது.

அதே நேரத்தில் அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்ப் நாங்கள் எதுக்கும் தயாராகி உள்ளோம் என்று கூறி உள்ளார். இது பதற்றத்தை மேலும் அதிகரித்து உள்ளது.

ஆனாலும் ட்ரம்ப்பால் வட கொரியா தொடர்பாக  எந்த நிலையான கொள்கை முடிவுகளையும் எடுக்க முடியவில்லை என்பதே உண்மை. தடுமாறி வருவது தெளிவாக தெரிகிறது.

இந்த நேரத்தில்  பதற்றத்தை முடிவுக்கு கொண்டு  வர வேண்டும் என்றால், வட கொரிய தோழன் சீனா பிரச்சினைக்குள் வந்தால் தான் முடியும்.

வட கொரியாவுக்குள் போக வேண்டும் என்றால் கூட, பிஜிங் வழியாக மட்டும் தான் செல்ல முடியும். அந்த அளவிற்கு நெருங்கிய தோழர்கள்.

ஆனால் இன்னும் சீனா தன்னை இந்த பிரச்சினையில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. இந்த நிலையில் சீனாவின் அடுத்தக் கட்ட நகர்வுகளே சந்தையை மேல் கொண்டு செல்ல உதவும்.

அது வரை பதற்றமான சந்தையில் வேடிக்கை பார்ப்பது நல்லது!

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக