வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

ஜெய்பேயின் கட்டி முடிக்காத பிளாட், யாருக்கு சொந்தம்?

பெரு நகரங்களில் இது மிகவும் சாதாராணமான விடயம் தான்.

அபார்ட்மென்ட் கட்டும் பில்டர்களில் பத்து சதவீதம் கூட சொன்ன நேரத்தில் முடித்து கொடுப்பது கிடையாது.



அவர்களிடம் இருந்து தாமதமாகும் காலத்திற்கு நாம் வங்கி வட்டி பெற சட்டத்தில் இடமுள்ளது.

ஆனால் நடைமுறையில் உள்ள சிக்கல்கள் காரணமாக பலரும் அந்த நிலைக்கு செல்வதில்லை. கட்டி தந்தால் போதும் என்ற மன நிலைக்கே தள்ளப்படுகின்றனர்.

இந்த நிலையில் ஒரு பெயர் பெற்ற பில்டர் நிறுவனம் வங்கிக்கு கொடுத்த கடனை திருப்பிக் கொடுக்காததால் தன்னை திவால் நிலைக்கு அறிவித்துக் கொண்டது.

இந்த நிறுவனம் ஜெயப்பிரகாஷ் குழுமத்தை சார்ந்த Jaypee Infrastructure நிறுவனம் தான்.

மின் உற்பத்தி, ரியல் எஸ்டேட், சிமெண்ட், ஹோட்டல் என்று பல துறைகளில் உள்ள பெயர் பெற்ற குழுமம் தான்.

ஆனால் பல வங்கிகளில் வாங்கிய 500 கோடிக்கும் மேல் உள்ள கடனுக்கு தம்மால் கட்ட முடியாது என்று சொல்லி விட்டது.

இதனால் கடன் கொடுத்த வங்கிகள் கடனை வசூலிக்க நிறுவனத்தின் சொத்துக்களை விற்பதாக கூறி உள்ளன.

ஆனால் ஜெய்பே நிறுவனம் டெல்லியை சுற்றி மட்டும் 32,000 அபார்ட்மென்ட் கொண்ட டவுன் ஷிப் உருவாக்குவதாக கூறி பலரிடம் ஏற்கனவே பணம் வாங்கி விட்டது.

இதில் பலர் முழு பணத்தையும் செலுத்தி உள்ளனர் பலர் வங்கி கடனுக்கும் சென்று இஎம்ஐ கட்டி  வருகின்றனர்.

ஆனால் விதி முறைப்படி, கடன் கொடுத்த வங்கிகளே ஜெய்பேயின் நிலத்திற்கோ அல்லது பாதி கட்டி முடிக்கப்பட்ட அபார்ட்மென்ட்களுக்கு சொந்தமாவர்.

அப்படி என்றால், முழு பணத்தையும், வீட்டு லோன் வாங்கி நிறுவனத்திடம் கொடுத்தவர் கதி என்ன என்பதில் தான் பெருங்குழப்பம் நீடிக்கிறது.

இந்த நிலையில் மத்திய அரசின் தலையீடு காரணமாக முன்பணம் கொடுத்தவர்கள் ஆகஸ்ட் 24க்குள் படிவங்களை நிரப்பிக் கொடுத்து பணத்தை திருப்பி பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அதுவும் அந்த பணம் ஜெய்பே சொத்துக்களை விற்ற பிறகு தான் கிடைக்கும். அதிலும் வங்கிகளுக்கு கொடுத்தது போக மீதி தான் கிடைக்கும் என்று தெரிகிறது.

அப்படி என்றால் கட்டிய பணத்திற்கு வட்டி கிடைக்குமா? எப்பொழுது பணம் கிடைக்கும்? என்ற தகவல்கள் இன்னும் தெரியவில்லை.

ஜெய்பே என்ற பிராண்டிற்காக முந்தியடித்து முன்பணம் கட்டியவர்கள் இப்பொழுது வீடே வேண்டாம் என்று பணத்தை திருப்பிக் கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சரியான ரெகுலேசன்  இல்லாத இந்திய ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்யும் முன் பெரிதளவில் கவனம் செலுத்துவது நல்லது!

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக