புதன், 9 ஆகஸ்ட், 2017

331 நிறுவன பங்குகளை தடை செய்த செபி, பாதிப்பு யாருக்கு?

நேற்று முதல் செபி 331 நிறுவனங்களின் பங்குகள் வர்த்தகமாவதை தடை செய்து உள்ளது.


இதற்கு காரணங்கள் என்பது முறைகேடுகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் என்ன முறைகேடு என்பது இன்னும் தெளிவாகவில்லை. அதனால் நிறுவனங்களே குழம்பி போய் உள்ளன.

பலரின் அனுமானம் என்னவென்றால் கருப்பு பணம் பங்குச்சந்தை வழியாக கணிசமாக புழங்கி வருகிறது என்ற முக்கிய குற்றச்சாட்டு தான்.

தற்போது வந்த விக்ரம் வேதா படம் பார்த்து இருப்போம். அதில் விஜய் சேதுபதியின் தம்பி கடத்தலில் வந்த பணத்தை பங்குச்சந்தையில் வெள்ளை பணமாக மாற்றி விடலாம் என்று சொல்லி இருப்பார்.

அது உண்மை தான். எப்படி என்றும் பார்ப்போம்.

உதாரணத்திற்கு A என்பவர் 50 லட்ச ரூபாய் மதிப்புடைய கருப்பு பணத்தை வைத்து இருப்பதாக கருதுவோம். அதனை பங்குச்சந்தை வழியாக கருப்பு பணமாக மாற்ற முயலுகிறார்.

அதில் ஐந்து லட்ச ரூபாய் மதிப்பை சந்தையில் உள்ள சில புரோக்கர்கள் வழியாக ஒரு நிறுவனத்தின் பங்குகளாக மாற்றி விடுகிறார். இவர் 10 ரூபாய் மதிப்பில் 50,000 பங்குகளை வாங்குவதாக எடுத்துக் கொள்வோம்.

ஆனால் இந்த நிறுவன உரிமையாளர்களுக்கும் Aக்கும் ஏற்கனவே தொடர்பு ஏற்படுத்தப்பட்டு இருக்கும்.

இப்பொழுது நிறுவன உரிமையாளர் ஆபரேட்டர்கள் வழியாக அந்த பங்கின் விலையை 100 ரூபாய்க்கு ஒரு வருட இடைவெளியில் உயர்த்துவார்.

இந்த நிலையில் Aயின் ஐந்து லட்ச ரூபாய் முதலீடு ஐம்பது லட்சமாக மாறி இருக்கும்.

பங்குச்சனதையில் ஒரு வருடத்திற்கு மேல் பங்குகளை வைத்து இருந்தால் வரி எதுவும் செலுத்த வேண்டியதில்லை. அதனால் இந்த முழு ஐம்பது லட்சமும் வெள்ளையாக மாறி இருக்கும்.

அதற்கு A தமக்கு உதவி செய்த நிறுவன உரிமையாளருக்கு 'சேவை கட்டணமாக' சில லட்சங்களை பணமாக கொடுத்து விடுவார். அந்த பணத்தை நிறுவனம் வேறு வழிகளில் சுழற்சிக்கு விடும்.

இப்படி முறைகேட்டில் ஈடுபடும் சில நிறுவனங்கள் வியாபாரம் எதுவும் செய்யாமல் வெறும் காகிதங்களில் மட்டும் நிறுவனங்களாக இருந்து வந்தன. இந்த நிறுவனங்களை Shell நிறுவனங்கள் என்று சொல்வார்கள்.

கடந்த வருடமே வருமான வரித்துறை பல நிறுவனங்களை கண்காணித்து வந்தது. பட்டியலிடப்படாத 36,000 நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.

தற்போது பங்குச்சந்தை பட்டியலில் உள்ள 331 நிறுவனங்களும் வர்த்தகத்தில் ஈடுபட தடை செய்யப்பட்டு உள்ளன.

இவ்வாறு Shell பட்டியலில் ஈடுபடும் நிறுவனங்கள் வழக்கமான முறையில் பங்கு வர்த்தகம் செய்ய முடியாது. ஒரு மாதத்திற்கு முறை மட்டும் வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்படும்.

அப்படி அனுமதிக்கப்பட்டாலும், இந்த பங்கினை வாங்கும் நபர்கள் 200% மதிப்பை அட்வான்சாக எக்சேஞ்சிடம் ஆறு மாதத்திற்கு கொடுத்து வைக்க வேண்டும்.

இந்த பங்கின் விலை முந்தைய தினத்தில் வர்த்தகமானதை விட குறைவாக இருக்க வேண்டும் என்று ஏகப்பட்ட விதி முறைகள்.

அதனால் இந்த 331 நிறுவனங்களின் பங்கினை வாங்க எளிதில் ஆள் கிடைப்பது கடினம் தான்.

இந்த நடவடிக்கை கருப்ப பணத்தை தடுக்க தேவையான ஒன்று தான்.

ஆனால் நிறுவனங்களுக்கு தங்கள் நிலையில் உள்ள நியாயத்தை தெரிவிக்க வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

இனி வாய்ப்பு கொடுக்கப்பட்டு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டாலும், தற்பொழுது உருவான கெட்ட பெயர் அந்த நிறுவன பங்கை அடி பாதாளத்திற்கு தான் தள்ளும்.

அதே போல் முதலீட்டாளர்களுக்கு போதிய நேர அளவு கொடுக்கப்படாததால் அப்பாவி முதலீட்டாளர்களின் பணம் ஒரு குறுகிய கணத்தில் அதிரடியாக அழிக்கப்பட்டு விட்டது.

இதில் வேடிக்கை என்னவென்றால், ராகேஷ் ஜூன்ஜூன்வாலா மற்றும் HDFC ம்யூச்சல் பண்ட் நிறுவனங்கள் கூட இந்த நிறுவனங்களில் முதலீடு செய்து உள்ளன.

இந்த நிறுவனங்களின் சந்தை மதிப்பு மட்டும் கிட்டத்தட்ட 9000 கோடியை தாண்டும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த ஷெல் நிறுவனங்களை எப்படி வர்த்தகம் செய்ய வேண்டும் என்பதை பற்றி தகவல்கள் மற்றும் இனி வரும் செய்திகளை கவனித்து வருகிறோம்.

மேலும் தெளிவான பிறகு பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன் தரும் வகையில் ஒரு கட்டுரை தருகிறோம்.

எமது கட்டண சேவையில் நாம் பரிந்துரை செய்த எந்த பங்கும் இந்த பட்டியலில் இல்லை என்பதால் எம்மிடம் பரிந்துரை பெற்றவர்கள் பயம் கொள்ளத் தேவையில்லை.

இந்த 331 நிறுவனங்களின் முழு பட்டியல் இந்த இணைப்பில் உள்ளது.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்: