வியாழன், 23 நவம்பர், 2017

கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்க வேண்டுமா?

கடந்த சில மாதங்களாக கந்து வட்டியால் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது.


அண்மைய காலமாக, பெரிதளவு வேலை வாய்ப்புகள் உருவாகவில்லை என்பது கூட இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.இந்த நிலையில் சினிமா தயாரிப்பாளராக இருக்கும் சசிகுமார் மைத்துனர் இறந்தது கந்து வட்டி கொடுமையை மேலும் வெளிக்கொனர்ந்துள்ளது.

சினிமாவில் சமுத்திரக்கனி, சசிகுமார் போன்ற குறுகிய காலத்தில் பிரபலமான இயக்குனர்கள் விரைவிலே பட தயாரிப்பாளராகி விடுகின்றனர்.

அப்பொழுதெல்லாம் இவர்களிடம் இவ்வளவு பணம் எப்படி இருக்கும்? என்ற சந்தேகம் வருவதுண்டு.

ஆனால் பிரபலங்களுக்கும் நிதி சோகம் இருப்பதை நேற்று புதிய தலைமுறையில் நடந்த விவாதத்தை பார்த்த பிறகு அறிந்து கொள்ள முடிந்தது.

பொதுவாக கந்து வட்டி கொடுப்பவர்கள் வட்டிக்கான பணத்தை மட்டும் குறிக்கோளாக வைப்பதில்லை.

நம்மிடம் இருக்கும் சொத்துக்களை வட்டியைக் காட்டி பறிப்பது என்பதும் நோக்கமாகவே உள்ளது.

அந்த வகையில்அரசியல் பின்புலம் கொண்ட சினிமா பினான்சியர்கள் படத்தின் வருமானத்தையும் சேர்த்து தான் குறி வைக்கிறார்கள்.

தியேட்டர்கள் வேண்டும் என்றால் அவனிடம் வாங்கிய கடனை அடைத்து வா! என்றால் அவர்களுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று புரியவில்லை.

அதே நேரத்தில் சினிமா எடுக்கும் போது தயாரிப்பாளர்களிடம் முறையான நிதி திட்டங்களும் இருப்பதில்லை . இதுவும் தயாரிப்பாளர்கள் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

ஒரு படம் எடுத்து நஷ்டம் அடைந்து விட்டால், அதில் இருந்து மீள்வதற்கு இன்னொரு படம் எடுத்தால் தான் சரி செய்ய முடியும். இன்னொரு படமும் ஓட வில்லை என்றால் கடன் நெஞ்சை அடைக்க ஆரம்பித்து விடுகிறது.

ஒன்றிரண்டு கோடிகள் வியாபாரம் செய்யும் வியாபர நிறுவனங்களே நிதி மேலாளர்களை வைத்துக் கொண்டு பணத்தை கையாளும் போது, முப்பது, நாற்பது கோடி செலவு மற்றும் வருமானத்தில் புழங்கும் தயாரிப்பாளர்கள் ஒரு பணத்தைக் கையாளுவதற்கு பினான்சியல் ஆட்களையும் கூட வைத்துக் கொள்வது நல்லது.

இந்த நிகழ்வு என்பது பங்குச்சந்தையிலும் விலக்கல்ல.

F&O, Intraday வர்த்தகத்தில் அதிக அளவு பார்க்கலாம்.

பத்து லட்சம் மதிப்புள்ள பங்குகளை ப்யூச்சரில் ஒரு லட்சம் மார்ஜின் கொடுத்து வாங்குவார்கள்.

இந்த நிலையில் அந்த பங்கு 10% குறைந்தால் மொத்த மார்ஜினும் காலியாகி விடும்.

அதன் பிறகு பொசிசனை தக்க வைத்துக் கொள்வதற்காக கடன் வாங்கி மேலும் ஒரு லட்சம் மார்ஜின் சேர்ப்பார்கள்.

இன்னும் பங்கு குறைந்து விட்டால் அடுத்த கடன்..இப்படியே நீண்டு விடும்.

இதனால் தான் ரெசிசன் நேரத்தில் பங்குச்சந்தை வீழும் போது அதிக தற்கொலைகள் நிகழ்கிறது.

'கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' என்று அந்த காலத்து ராமாயணத்திலே கம்பர் சொல்லி இருப்பார்.

ராவணன் மிகுதியான உடல் வலிவு கொண்டவன். எதற்கும் அஞ்சாதவன். அவன் கவலை அடைகிறான் என்றால் அது ஒரு பெருங்கவலை.

அதனை கடன் பெற்றவருடன் ஒப்பிடும் போது, கடன் என்பது நம்மை நிம்மதியாக வாழ விடாது என்று அறிந்து கொள்ளலாம்.

இந்த கடனை தவிர்ப்பதற்கு ஒரு வலுவான நிதி திட்டமிடுதல் தேவை. இதனை இளமை காலத்தில் இருந்தே இளைய தலைமுறையினர் ஆரம்பிக்க வேண்டும்.

நாம் பார்க்கும் வேலையுடன் நிதி திட்டமிடலை இணையாக கொண்டு செல்ல வேண்டும்.

ஒரே கூடையில் எல்லா முட்டைகளையும் போடாமல்,

பிக்ஸ்ட் டெபாசிட், தங்கம், ம்யூச்சல் பாண்ட், தங்கம், பங்குச்சந்தை என்று சரி சமமாக ரிஸ்கை கொண்டு சென்றால் இந்த கார்பரெட் உலக வேதனைகளில் இருந்து தப்பிக்க எளிதாக இருக்கும்.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக