செவ்வாய், 7 நவம்பர், 2017

பங்குசந்தையின் இன்றைய சரிவிற்கு காரணம் என்ன?

இன்று சந்தையில் திடீர் பதற்றம்.


நல்லா போய்கிட்ட சந்தை ஏன் திடீர் என்று சரிந்தது என்று கொஞ்ச நேரம் புரியாமல் இருந்தது.

இதனை கொஞ்சம் விவரமாகவே பார்ப்போம். நாளைய சந்தையை புரிந்து கொள்ளவாவது உதவும்.



இன்று டிமானிடிசேசன் நடந்து ஒரு வருடம் ஆகிறது.

அது நல்லதா? கெட்டதா? என்று தெரியாமலே ஒரு வருடம் முடிந்து விட்டது.

ஒரு பக்கம் எதிர்கட்சிகள் கருப்பு தினமாக கொண்டாட, மற்றொரு புறம் ஆளுங்கட்சி பொருளாதார சீர்திருத்த தினமாக கொண்டாடுகிறது.

இடையில் நாம் தான் குழம்பி போய் இருக்கிறோம்.

ஒரு சில வரிகளில் சொல்வது என்றால்,

டிமானிடிசேசன் பொறுத்தவரை, முக்கிய நோக்கமான கருப்பு பண ஒழிப்பு நிறைவேற வில்லை. ஆனால் உபரி வழியாக நிறைய பேர் வரி செலுத்த உள்ளே வந்துள்ளனர். அரசுக்கு பணத்தை முழுமையாக இனி கண்காணிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆனால் இனி நாம் அதைப் பற்றி பேசி பயனில்லை. அடுத்து செல்வோம்.

ஒரு கால கட்டங்களில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 140$ அளவிற்கு இருந்தது. ஆனால் கடந்த இரு வருடங்களில் 35$க்கும் சென்றது.

இந்த அளவிற்கு கீழே செல்லாவிட்டால், மோடி அரசு மிகுந்த கஷ்டப்பட்டு இருக்கும்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக 50 டாலரில் வர்த்தகமாகி வந்த கச்சா எண்ணெய் இன்று 64$ என்ற உச்சத்தை தொட்டது.

OPIC நாடுகள் இதனை 70$ அளவிற்கு உயர்த்த முனைப்பாக இருப்பதால் இது இந்தியாவிற்கு பாதகமாக வாய்ப்பு உள்ளது.

கச்சா எண்ணையால் இறக்குமதி செலவு அதிகமாகும் சூழ்நிலையில் Current Account Deficit(CAD) நிதி பற்றாக்குறை அதிகரித்து ரூபாய் மதிப்பு குறையவும் வாய்ப்பு உள்ளது.

இதுவும் சந்தை எதிர்மறையில் செல்வதற்கு ஒரு காரணமாக அமைந்தது.

ஆனால் ரூபாய் மதிப்பை பாதுகாக்குமளவு அந்நிய செலாவணி கையிருப்பு இருப்பதால் தப்புவதற்கும் வாய்ப்பு உள்ளது.

அதே நேரத்தில் முன்பு அருண் ஜெட்லி வங்கிகளுக்கும், கட்டுமான துறைக்கும் பெரிய அளவு நிதி திட்டங்களை அறிவித்தது போல் இனி அதிகமாக இருக்குமா? என்பதில் சந்தேகம் வருகிறது.

இது பட்ஜெட் பற்றாகுறையை 3.2 சதவீதத்திற்குள் வைத்து இருப்பதில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

அதே நேரத்தில் இந்தக் காலாண்டிலே நிறுவனங்கள் லாப மற்றும் விற்பனை வளர்ச்சியை 8% அளவு எட்டி இருப்பதால் இனி அரசை அதிக அளவு சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று நம்பலாம்.

ஏற்கனவே கொடுத்த பாக்கேஜ்களே இப்போதைக்கு போதுமானது என்றே தோன்றுகிறது.

இது தவிர, இன்று அமெரிக்க மருத்துவ கவுன்சில் LUPIN நிறுவனத்தின் ஆலைகளுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது.

மேலும் சில இந்திய நிறுவனங்களுக்கும் அனுப்பலாம் என்ற பயத்தில் மருந்து நிறுவனங்களின் பங்குகளும் சரிந்தது.

கடந்த வருடத்தில் தான் பல எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பப்பட்டு நிறுவனங்கள் திருத்தங்களை மேற்கொண்டுள்ளன. அதனால் மிக அதிகமாக எச்சரிக்கைகள் வர வாய்ப்பு குறைவே.

இறுதியாக, சந்தை நீண்ட நாட்களாக Profit Booking செய்வதற்கு துடித்துக் கொண்டிருந்தது. ஆனால் அதற்கு வலுவான காரணங்கள் இல்லாததால் நடக்கவில்லை.

இன்று இந்த காரணங்களை பயன்படுத்திக் கொண்டது என்று சொல்லலாம்.

இறுதியாக,

நிலவரத்திற்கு ஏற்ப கலவரம் பண்ண வேண்டும் என்றால் இப்படி முதலீடு முறைகளை மாற்றி அமைக்கலாம்.

கச்சா எண்ணையை மூலப் பொருளாக கொண்டிருக்கும் உரம், பெயிண்ட், விமான நிறுவனங்கள் போன்றவற்றில் போர்ட்போலியோ ஒதுக்கீடை குறைக்கலாம்.

மற்றபடி, இதையும் இந்திய சந்தை கடந்தே வரும் என்றே தோன்றுகிறது!

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக