சனி, 4 நவம்பர், 2017

பங்குச்சந்தை உச்சத்தில் கட்டாயம் பங்குகளை விற்க வேண்டுமா?

தற்போதைய பங்குச்சந்தையில் இரு விதமாக தவிப்பவர்கள் உண்டு.


சந்தை கூடுகிறதே, லாபம் போய் விடக் கூடாது என்று லாபத்தில் இருக்கும் பங்குகளை விற்று விட்டு லாபத்தை உறுதி செய்து விடலாம் என்று ஒரு பிரிவினர் செய்கின்றனர்.



மற்றொரு பிரிவினரோ, சந்தை இன்னும் கீழே வந்து சந்தையில் முதலீடு செய்யலாம் என்று காத்து இருக்கின்றனர்.

ஆனால் இந்த இரண்டு பிரிவினருக்குமே பிடி கொடுக்காமல் சந்தை மேலே சென்று விடுகிறது.

சந்தையில் நிறுவனங்கள் மந்தமாக கடந்த காலாண்டில் வளர்ச்சி கொடுக்க, இனி அவ்வளவு தான் என்று விற்றவர்கள் அதிகம்.

ஆனால் ஜெட்லி கொடுத்த ஒரு பாக்கேஜ் எல்லாவற்றையும் மறக்க வைத்து விட்டது.

இனி வங்கிகள் கடன் கொடுக்கும், கடனை வாங்கி நிறுவனங்கள் முதலீடு செய்யும், அதனால் வேலை வாய்ப்புகள் அதிகமாகும் என்ற சங்கிலி தொடரான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இந்த எதிர்பார்ப்பு பொய்க்கவும் வாய்ப்புகள் குறைவே!

கடந்த வாரம், உலக அளவில் எடுத்த சர்வேயில் இந்தியாவில் வியாபாரம் செய்ய உள்ள சூழல் என்பதில் முப்பது இடங்களுக்கு முன்னேறி உள்ளது.

அதாவது வரலாற்றில், உலக அளவில் 190 நாடுகள் இருந்தால் அதில் இந்தியா எப்பொழுதுமே 150க்கு மேல் தான் இருக்கும்.

அந்த அளவிற்கு இங்கு ஊழல்,பல லைசென்ஸ், பல விதமான வரிகள் என்று இருந்ததால் வெளிநாட்டு முதலீட்டளார்கள் இங்கு வர விருப்ப பட்டதில்லை.

ஆனால் தற்போது நூறாவது இடம் என்பதை புதிய மைல் கல்லாகத் தான் பார்க்க வேண்டும்.

இனி மூடி போன்ற ரேட்டிங் ஏஜென்சிகள் இந்தியாவின் ரேட்டிங்கை மாற்றினாலும் ஆச்சர்யமில்லை.

அந்த சூழ்நிலையில், அதிக அளவில் வெளிநாட்டு முதலீடுகள் வரவும் வாய்ப்புகள் உள்ளது.

1991ல் மன்மோகன் சிங் வழியே இந்தியா சந்தையை திறந்தது முதல் பெரிய பொருளாதார மாற்றத்தைக் கண்டது. ஆனால் உலக நாடுகளுடன் போட்டி போடும் நிலையில் வந்ததில்லை.

அந்த நிலை தற்போது மாறலாம் என்றே தோன்றுகிறது. அதனால் வாய்ப்புகள் 10,000 நிபிடியில்  தான் ஆரம்பிக்கிறது என்று கூட கருதலாம்.

பதற்றத்தில் பங்குகளை விற்பவர்கள் 2008ல் நடந்த பங்குச்சந்தை சரிவுகளை உதாரணம் காட்டுவது உண்டு.

ஆனால் அந்த சமயத்தில் இந்திய பங்குசந்தையை FIIகள் தான் தாங்கி பிடித்து இருந்தனர். அவர்கள் வெளியே சென்றவுடன் சந்தையும் வீழ்ந்தது.

ஆனால் தற்போது DIIகள் மூலம் ம்யூச்சல் பண்ட்கள் வழியாக அதிக அளவு முதலீடு சந்தைக்குள் வருகிறது.

அது தான் தற்போது சந்தையை விழாமல் தாங்கி பிடித்து வருகிறது.

வெளியே, பிக்ஸ்ட் டெபாசிட்கள் வட்டி மிகக் குறைந்த அளவில் இருக்கும் சூழ்நிலையில் இந்த முதலீடுகள் பங்குசந்தையை விட்டு வெளியே வர வாய்ப்பு இல்லை.

அந்த சூழ்நிலையில் மேலும் FII முதலீடுகள் வந்தால் இன்னும் சந்தை மேல் தான் செல்லுமே, தவிர கீழே செல்ல வாய்ப்பு இல்லை.

ஆனால் அவ்வாறு உயரும் சந்தை அதே நிலையை தக்க வைக்க வேண்டும் என்றால், நிறுவனங்களும் நல்ல நிதி முடிவுகளை கொடுக்க வேண்டும்.

கொடுக்க வாய்ப்புகள் இருப்பதால் உயர்வுகள் நிலையாக இருக்கும் என்று நம்புவோம்!

இன்னும் சில பங்குகள் P/E மதிப்பை பார்த்தால் 20க்குளே தான் வருகின்றன. அவை வாங்குவதற்கான நல்ல வாய்ப்புகள் என்று சொல்லலாம்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக