திங்கள், 27 நவம்பர், 2017

லாஜிஸ்டிக்ஸ் பங்குகளை வாங்கும் தருணமிது..

ப்ளிப்கார்ட்டிற்கு பத்து வருடங்களுக்கு முன்னரே அமேசான் இந்தியாவில் கால் பதித்தது.


ஆனால் இங்குள்ள மோசமான லாஜிஸ்டிக்ஸ் முறைகளால் பின் வாங்கி விட்டது.



ஆன்லைன் வர்த்தகத்தில் சொன்ன நேரத்தில் சொல்லிய பொருள் பாதுகாப்பாக செல்ல வேண்டும்.

ஆனால் இந்த அடிப்படையே உடையும் போது வர்த்தகம் செய்வது தேவையில்லை என்று தான் அமேசான் திரும்பி சென்று விட்டது.

அதனால் தான் ப்ளிப்கார்ட் ஆன்லைன் வர்த்தகத்தில் வரும் போது முதலில் தனக்கென்று சுயமான லாஜிஸ்டிக்ஸ் சேவையயை நிறுவிக் கொண்டு அதன் பிறகு வர்த்தகத்தை ஆரம்பித்தது.

ஒரு நாடு பொருளாதார வளர்ச்சி காணும் போது போக்குவரத்து, கட்டுமானத்  துறைகளோடு சேர்ந்து லாஜிஸ்டிக்ஸ் துறையும் அபரி மிதமாக வளர்ச்சி அடையும்.

அந்த வகையில் இரு ஆண்டுகளுக்கு முன்னர், Snoman Logistics, VRL என்று பல நிறுவனங்கள் பங்குசந்தைக்குள் ஐபிஒவாக வந்து நிதி திரட்ட ஆரம்பித்தன.

ஆனால் லாஜிஸ்டிக்ஸ் துறையில் ஆரம்ப கட்ட முதலீடுகள் மிக அதிகம் என்பதால் அதிக அளவில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை.

அந்த கடனிற்கு அதிக வட்டி கட்டும் போது லாப மார்ஜினும் கணிசமாக குறைந்து விடுகிறது.

இந்த நிலை கடந்த இரு ஆண்டுகளாக லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களில் நீடித்ததால் தான் இந்த நிறுவனங்களும் அதிக லாபம் ஈட்ட முடியவில்லை.

பங்கு விலையும் குறைந்து விட்டது அல்லது எந்த மாற்றம் இல்லாமல் இருக்கிறது.

இந்த நிலையில் கடந்த வாரத்தில் அரசு லாஜிஸ்டிக்ஸ் துறைக்கு Infrastructure என்று சொல்லப்படும் கட்டுமானத் துறை அந்தஸ்து கொடுத்தது.

இதில் என்ன சௌகரியம் என்றால், L&T போன்ற நிறுவனங்களுக்கு கிடைக்கும் குறைந்த வட்டி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களுக்கும் கிடைக்கும்.

அதே போல், Infrastructure கடன் பத்திரங்களை கூட இந்த நிறுவனங்கள் வெளியிட முடியும்.

குறைந்த வட்டியில் லாபம் கிடைக்கும் போது லாப மார்ஜினும் கூடும்.

அடுத்து, 

எப்பொழுதுமே பிஜேபிக்கு நெடுஞ்சாலைகளை விசாலமாக வைத்து இருப்பது மிகவும் பிடிக்கும். அதுவும் அசுர வேகத்தில் ரோடு போடுவது அவர்கள் காலத்தில் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.

முன்பு பெங்களூரில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்வதென்றால், குறைந்தது 14 முதல் 16 மணி நேரங்கள் ஆகும்.

அதன் பிறகு வாஜ்பாய் அரசு தங்க நாற்கர திட்டம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளை சீரமைத்த போது இது பத்து மணி நேரங்களாக குறைந்து விட்டது.

இதனைத் தான் ஆம்னி பேருந்துகள் அழகாக பயன்படுத்திக் கொண்டு அதிக வளர்ச்சி அடைந்தன.

இந்த நிலையில் தற்போது அரசு பாரத்மாலா, சாகர் மாலா என்ற பெயரில் அதிக அளவில் தேசிய நெடுஞ்சாலைகளை புனரமைக்க ஆரம்பித்துள்ளது.

இதில் தற்போது இருக்கும் மாநில நெடுஞ்சாலைகளில் சிலவும் கூட தேசிய நெடுஞ்சாளைகலாக மாற உள்ளன.

இதனால் இரண்டாம் நிலை நகரங்கள் கூட விரைவு போக்குவரத்து சேவையை விரைவில் பெறலாம்.

இது வேகமான டெலிவரி, எரிபொருள் செலவு மிச்சமாதல் போன்றவற்றில் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களுக்கு அதிக பலனைக் கொடுக்கும்.

இறுதியாக,

GST வரி விதிப்பு அமலுக்கு வந்தது. அதில் IGST என்று சொல்லப்படும் மாநிலங்களுக்கிடையான வரி விதிப்பு லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களுக்கு பெரிதளவு பலன் கொடுக்கும்.

ஒவ்வொரு மாநில எல்லையிலும் நின்று வரி கட்ட வேண்டாம். இனி இந்த GST வரியும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு பல சூல்நிலைகள் சாதகமாகும் போது லாஜிஸ்டிக்ஸ் நிறுவன பங்குகளும் மல்டி பேக்கராக மாற வாய்ப்புகள் அதிகம்!


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக